என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • 32 ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • சர்வே பணிகளை மாநகராட்சி நியமித்த ஏஜென்சி குழுவினர் செய்து வருகின்றனர்.

    கோவை:

    சென்னையை தொடர்ந்து கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    கோவையில் அவினாசி சாலை மற்றும் சத்தி சாலை பகுதிகளில் 32 ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த நிலையில் அவினாசி சாலை மற்றும் சத்தி சாலையில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு விரிவான திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ஒப்புதலோடு, கையகப்படுத்த தேவையான நிலங்கள் சர்வே செய்வது, நிலத்திற்கு கீழ் உள்ள சேவைகள் என்னென்ன என்பதை அறிவதற்கான ஆய்வு பணிகள் தொடங்கியுள்ளது.

    இந்த பணியை மாநகராட்சி நிர்வாகம் அண்மையில் உக்கடம் பஸ் நிலையம் அருகே உள்ள சந்திப்பில் தொடங்கியுள்ளது.

    மெட்ரோ ரெயில் இயங்க உள்ள 2 வழித்தடங்களிலும் நிலத்துக்கு கீழ் உள்ள பாதாள சாக்கடை, குடிநீர் மற்றும் கியாஸ் குழாய்கள், மின்புதை வடம், தொலை தொடர்பு வயர்கள் போன்ற சேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த சர்வே பணிகளை மாநகராட்சி நியமித்த ஏஜென்சி குழுவினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த குழுவினர் சரியாக பணிகளை செய்கிறார்களா என, மெட்ரோ ரெயில் நிறுவன துணை மேலாளர் கோகுல், உதவி மேலாளர் வினோத்குமார் ஆகியோர் கோவையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • கடந்த 2 நாட்களாக ரூ.70 கோடி வரை வருவாய் இழப்பு.
    • உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகளும் தேக்கம் அடையும் அபாயம்

    நீலாம்பூர்:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.

    இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன. இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்தநிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விசைத்தறி கூடங்கள் அனைத்து மூடப்பட்டு அந்த பகுதியே தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடியது. கடந்த 2 நாட்களாக ரூ.70 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இன்று 3-வது நாளாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகளும் தேக்கம் அடையும் அபாயம் உருவாகியுள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசு உடனடியாக தலையிட்டு விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் ஜவுளி உற்பத்தி மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    • வீட்டிற்கு ஒரு பெண் அதிகாரி உள்பட 5 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் ஒரு காரில் வந்தனர்.
    • காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனையானது 2½ மணி நேரத்தை தாண்டி நீடித்தது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னாஜிராவ் பகுதியை சேர்ந்தவர் ராஜீக் அகமது. இவர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளராக உள்ளார்.

    இதுதவிர ராஜீக் அகமது அந்த பகுதியில் சொந்தமாக பழைய இரும்பு கடை வைத்து கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை, இவரது வீட்டிற்கு ஒரு பெண் அதிகாரி உள்பட 5 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் ஒரு காரில் வந்தனர்.

    அவர்கள் நேராக வீட்டிற்குள் சென்றதும், வீட்டின் நுழைவு வாயிலை யாரும் உள்ளே நுழையாதபடி மூடினர். பின்னர், வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள் அவரது வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் இந்த சோதனையானது நடந்தது.

    இந்த சோதனையின்போது, வீட்டில் ராஜீக் அகமதுவும் வீட்டில் இருந்தார்.

    அவரிடம் அமலாக்கத்துறையினர் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். அவரும் அவர்கள் கேட்டவற்றுக்கு பதில் அளித்தார்.

    காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனையானது 2½ மணி நேரத்தை தாண்டி நீடித்தது.

    இவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் எதற்காக சோதனை மேற்கொள்கின்றனர் என்ற விவரம் தெரியவில்லை. சோதனை முடிவில் தான் எதற்காக இந்த சோதனை நடந்தது. வீட்டில் இருந்து ஏதாவது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என்பதும் தெரியவரும்.

    அமலாக்கத்துறை சோதனையை முன்னிட்டு ராஜீக் அகமதுவின் வீட்டின் முன்பு 18 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இவரது வீட்டில் சோதனை நடப்பது அறிந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் சி.ஆர்.பி.எப் வீரர்கள் முற்றுகையிட்டு, எதற்காக சோதனை என கேட்டனர்.

    அவர்கள் உரிய பதில் அளிக்காததால் வீட்டின் முன்பு நின்று கண்டன கோஷங்களை கட்சியினர் எழுப்பினர்.

    இதேபோல் மேட்டுப்பாளையத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    • கடந்த 17-ந் தேதி தொண்டாமுத்தூர் நால்ரோடு குடியிருப்பு பகுதிக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது.
    • பதுங்கி இருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடிக்க முயன்றார்.

    கோவை:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 40). இவர் வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விடும் பணியை 20 ஆண்டுகளாக செய்து வந்தார். கடந்த 17-ந் தேதி தொண்டாமுத்தூர் நால்ரோடு குடியிருப்பு பகுதிக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது.

    இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த தகவலின் பேரில் சந்தோஷ் அங்கு சென்றார். அவர், அங்கு பதுங்கி இருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று அந்த நாகப்பாம்பு அவரை கடித்தது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பாம்பு கடித்து, பாம்பு பிடி வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தோசுக்கு திருமணம் ஆகி மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    • பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் பங்கேற்று இத்திட்டம் குறித்து விரிவாக விளக்கினார்.
    • அரச மரத்தின் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்களை உலகிற்கு எடுத்து கூறி வருகின்றன.

    பேரூர் அடிகளார் எனப் போற்றப்படும் தெய்வத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு "ஒரு கிராமம் ஒரு அரச மரம்" எனும் மாபெரும் திட்டம் வரும் 20-ஆம் தேதி (நாளை) பேரூர் ஆதீன வளாகத்தில் துவங்கப்பட உள்ளது.

    இத்திட்டம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் பங்கேற்று இத்திட்டம் குறித்து விரிவாக விளக்கினார்.

    அவருடன் காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், நொய்யல் அறக்கட்டளையின் அறங்காவலர் ஆறுச்சாமி மற்றும் கோவை கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராமநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

    நம் பாரத கலாச்சாரத்தில் உள்ளார்ந்த ஆன்மீக அனுபவத்தின் மூலம் ஆன்மீக பெருமக்கள் உருவாக்கிய ஒவ்வொரு அம்சங்களும் மக்களின் நல்வாழ்வை அடைப்படையாக கொண்டவை.

    அந்த வகையில் நம் நாட்டில் ஆல், அரசு, வேம்பு உள்ளிட்ட மரங்களினால் கிடைக்கும் ஆன்மீக மற்றும் மருத்துவ பலன்களை உணர்ந்து அம்மரங்களுக்கு தனித்த மற்றும் உயர்ந்த இடம் வழங்கப்பட்டு வந்துள்ளது.

    நமது கலாச்சாரத்தில் அரச மரத்திற்கு கீழ் வழிபாடுகளும், ஆல மரத்திற்கு கீழ் உலக விஷயங்களும் நடைபெற்று வந்தன. அரச மரங்கள் நம் மண்ணின் மரமாக, நம் கிராமங்களின் அடையாளமாக பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகிறது.

    இன்று பல்வேறு அறிவியல் ஆய்வு முடிவுகள் அரச மரத்தின் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்களை உலகிற்கு எடுத்து கூறி வருகின்றன.

    குறிப்பாக இலை, பால், வேர், பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகள் முதல் கல்லீரல் பிரச்சனைகள் வரை பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு அரச மரத்தின் மூலம் தீர்வுகள் கிடைக்கும் என்பதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    அந்த வகையில் பேரூர் ஆதீனத்தின் "24-வது குரு மகாசன்னிதானம் தெய்வத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார்" அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அரச மரத்தினை நடவு செய்வதை இலக்காக கொண்டு "ஒரு கிராமம் ஒரு அரச மரம்" எனும் மாபெரும் திட்டம் துவங்கப்பட உள்ளது.

    இம்மாபெரும் திட்டம் வரும் 20-ம் தேதி பேரூர் ஆதீன வளாகத்தில் முதல் மரக்கன்று நடவு செய்து துவங்கப்பட உள்ளது.

    இதனைத் தொடர்ந்து ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி நொய்யல் ஆறு அறக்கட்டளை, கோயம்புத்தூர் கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மற்றும் ஓசூர் புவியின் நண்பர்கள் ஆகிய அமைப்புகள் இணைந்து முதல் கட்டமாக கோயம்புத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 2,000 கிராமங்களில் அரச மரங்களை நடவு செய்ய உள்ளனர்.

    இதன் துவக்க விழாவில் பேரூர் ஆதீனத்தின் 25-வது குரு மகாசன்னிதானம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், தவத்திரு சிரவை ஆதீனம், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் சொல் ஏறு உழவர் கு.செல்லமுத்து, கோவை கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராமநாதன், நொய்யல் ஆறு அறக்கட்டளை அறங்காவலர் ஆறுச்சாமி, சிறுதுளி அறக்கட்டளை அறங்காவலர் வனிதா மோகன் மற்றும் திரைப்பட நடிகர் படவா கோபி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    • விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
    • 7 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

    நீலாம்பூர்:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.

    இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன.

    இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டும், சட்டப்பூர்வமாக அடுத்தடுத்த கூலிகளை அமல்படுத்தவும், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விசைத்தறி கூடங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக 7 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இதில் எந்தவித தீர்வும் எட்டப்படாததால் விசைத்தறி தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

    இதனையொட்டி கோவை சோமனூரில் உள்ள விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதேபோல் திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியே வெறிச்சோடி கிடக்கிறது.

    கோவை, திருப்பூ மாவட்டங்களில் உள்ள 1.5 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 10,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் விசைத்தறி கூடங்களின் முன்பு இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் ஜவுளி உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

    இந்த வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.35 கோடிக்கு மேலாக வர்த்தகம் பாதிக்கப்படும் என தெரிகிறது.

    அத்துடன் இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் அடைந்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் சங்கத்தின் தலைவர் பூபதி கூறியதாவது:-

    விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் முதல்கட்டமாக இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம்.

    எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சினைகளில் தலையிட்டு விசைத்தறியாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • விண்வெளியில் அதிக மாரத்தான் ஓடியவரும் சுனிதா வில்லியம்ஸ் தான்.
    • விண்வெளித்துறையில் மற்றவர்களுக்கு பாடமாக இருந்துள்ளார்.

    கோவை:

    9 மாத விண்வெளி பயணம் மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினார். இந்த சாதனை பயணம் குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்த போது, விமான பயணம் என்பது சவாலானதாக இருந்தது. தற்போது அந்த பயணம் எளிதாகி விட்டது. அதேபோன்று தான் இப்போது விண்வெளி பயணமும் மாறியுள்ளது.

    விண்வெளி பயணங்கள் என்பது ஓராண்டுக்கு முன்பே திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. விண்வெளி நிலையத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு விண்கலம் செல்ல வேண்டும்.

    சுனிதா வில்லியம்ஸ் சென்ற போயிங் விண்கலத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அந்த விண்கலம் ஆளில்லாமல் திரும்பி வந்தது.

    இதன் காரணமாக சுனிதா வில்லியம்ஸ் அதிக நாட்கள் விண்வெளி மையத்தில் தங்கினார். நீண்ட நாட்களாக அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அவர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி இருக்கிறார். விண்வெளியில் அதிக மாரத்தான் ஓடியவரும் சுனிதா வில்லியம்ஸ் தான்.

    அவரது உடல், உள்ளம், மனவலிமையே அவர் இவ்வளவு மாதம் தங்க காரணம் ஆகும். அவர் விண்வெளித்துறையில் மற்றவர்களுக்கு பாடமாக இருந்துள்ளார்.

    சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பும் விஞ்ஞானிகளுக்கு மீண்டும் நடைமுறை வாழ்க்கை பழக்கம் ஆவதற்கு சில நாட்கள் ஆகும். அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அவர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்பட்டதும், நடைமுறை வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.

    விண்வெளியில் இருந்து திரும்பி வந்துள்ள சுனிதா வில்லியம்ஸ் நடைமுறை வாழ்க்கைக்கு பழகவும், இயல்பு நிலைக்கு திரும்பவும் சில நாட்கள் ஆகும்.

    தற்போது சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதற்கான காலதாமதத்தின் மூலம் செவ்வாய்க்கிரகத்திற்கு மனிதன் செல்வது சாத்தியமாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    இந்திய விஞ்ஞானிகள் 3 அல்லது 4 ஆண்டுகளில் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. 2 ஆண்டுகளில் ஆளில்லா விண்கலம் செல்லும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மலை ரெயில் வழித்தடத்தின் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது தெரியவந்தது.
    • தண்டவாளத்தில் உருண்டு விழுந்த பாறையை அப்புறப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    அடர்ந்த காடுகளின் வழியாக செல்லும் இந்த மலை ரெயிலில் பயணம் செய்தால் அங்குள்ள உள்ள இயற்கை எழில்மிகுந்த காட்சிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீண்ட குகைகளை கண்டு ரசிக்க முடியும்.

    இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் இன்று காலை மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் ரோந்து சென்றனர்.

    அப்போது மலை ரெயில் வழித்தடத்தின் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரெயில் பாதையில், ஹில்கிரோ பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு அங்கிருந்த பாறைகள் உருண்டு, ரெயில் தண்டவாள பாதையில் விழுந்து கிடந்தன.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில்வே ஊழியர்கள் இதுகுறித்து உடனடியாக ரெயில்வே உயரதிகாரிகளுக்கு தகவலளித்தனர்.

    தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை குன்னூருக்கு செல்வதற்காக புறப்பட்டு வந்த மலை ரெயில், கல்லார் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே ரெயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். மேலும் தண்டவாளத்தில் உருண்டு விழுந்த பாறையை அப்புறப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    அப்போது தண்டவாளத்தில் கிடக்கும் பாறைகளை அப்புறப்படுத்துவதற்கு மேலும் காலதாமதம் ஆகும் என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலான மலை ரெயில் போக்குவரத்து இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    இதனையடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லார் சென்ற மலை ரெயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. தொடர்ந்து மலைரெயிலில் பயணித்தவர்களுக்கு கட்டண தொகை திருப்பி அளிக்கப்பட்டது.

    இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயிலில் பயணிக்க ஆர்வமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

    • ஒடிசாவைச் சேர்ந்த ராமச்சந்தர் என்பவரை வெறிநாய் கண்டித்துள்ளது.
    • ரேபிஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது,

    வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த புலம் பெயர் தொழிலாளி ராம் சந்தர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒடிசாவைச் சேர்ந்த ராம் சந்தர் என்பவருக்கு வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், மருத்துவமனையில் அறிவிப்பு பலகையின் கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்து தனது உயிரை மாய்த்து அவர் கொண்டார் .

    • கோவையில் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை 4 ஆடுகளை அடித்து கொன்றது.
    • வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர்.

    கோவை வடவள்ளி அடுத்த சிறுவாணி சாலை ஓணாப்பாளையம் பகுதியில் வெண்ணிலா என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு இந்த தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, தோட்டத்தில் வளர்த்து வந்த 8 ஆடுகளில் 4 ஆடுகளை அடித்து கொன்றது.

    இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதேபோல் தொண்டாமுத்தூர் பகுதியிலும் புகுந்த சிறுத்தை, அங்கும் ஆடுகளை அடித்து கொன்றது.

    இதையடுத்து வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர். பிடிபட்ட சிறுத்தையின் உடலில் காயங்கள் இருப்பதால், வனத்துறையினர் கால்நடை டாக்டர் குழுவினர் அதனை கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில், காயமடைந்து உடல் மெலிந்து காணப்பட்ட சிறுத்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    • 12 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் அங்கு சென்றனர்.
    • சிறுத்தையை மருதமலை அடிவாரத்தில் உள்ள வனத்துறை அலுவகத்திற்கு கொண்டு சென்றனர்.

    கோவை வடவள்ளி அடுத்த சிறுவாணி சாலை ஓணாப்பாளையம் பகுதியில் வெண்ணிலா என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தில் அவர் ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, தோட்டத்தில் வளர்த்து வந்த 8 ஆடுகளில் 4 ஆடுகளை அடித்து கொன்றது.

    இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதேபோல் தொண்டாமுத்தூர் பகுதியிலும் புகுந்த சிறுத்தை, அங்கும் ஆடுகளை அடித்து கொன்றது.

    தொடர்ந்து சிறுத்தை ஊருக்குள் புகுந்து ஆடுகளை அடித்து கொன்று வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

    ஊருக்குள் நடமாடும் சிறுத்தையை பிடித்து அடர் வனத்திற்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்க தொண்டாமுத்தூர் அட்டுக்கல் மற்றும் ஓணாப்பாளையம் பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.

    ஆனால் சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, சிறுத்தை ஆடுகளை அடித்து கொன்ற அதே தோட்டத்திற்கு வந்து சென்றது. இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால் சிறுத்தை மீண்டும் ஊருக்குள் வர வாய்ப்புள்ளது. எனவே சிறுத்தையை உடனே பிடிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

    அதனை தொடர்ந்து வனத்துறையினர் கூண்டினை ஆடுகளை தேடி வந்த தோட்டத்து வீட்டு பகுதியில் வைத்தனர்.

    மேலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி, சிறுத்தையின் நடமாட்டத்தையும் கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு பூச்சியூர் அருகே உள்ள கலிக்க நாயக்கன் பாளையத்தில் விவசாய நிலத்தில் சிறுத்தை பதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    உடனடியாக 12 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் அங்கு சென்றனர். அவர்கள் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் கால்நடை மருத்துவரும் அங்கு வரவழைக்கப்பட்டார்.

    தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்தனர். பின்னர் கால்நடை மருத்துவர் சிறுத்தைக்கு மயக்க ஊசியை செலுத்தினர்.

    மயக்க ஊசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்தில் சிறுத்தை மயங்கியது. இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை கூண்டில் பிடித்து அடைத்தனர்.

    தொடர்ந்து சிறுத்தையை மருதமலை அடிவாரத்தில் உள்ள வனத்துறை அலுவகத்திற்கு கொண்டு சென்றனர்.

    பிடிபட்ட சிறுத்தையின் உடலில் காயங்கள் இருப்பதால், வனத்துறையினர் கால்நடை டாக்டர் குழுவினர் அதனை கண்காணித்து, காயத்துக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். புலியின் உடலில் எப்படி காயம் ஏற்பட்டது என தெரியவில்லை. தொடர்ந்து சிறுத்தையின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பிடிபட்ட சிறுத்தையின் உடலில் காயமும் உள்ளது. அதற்கு தற்போது சிகிச்சை அளித்து, பராமரித்து வருகிறோம்.

    இன்று ஒருநாள் முழுவதும் சிகிச்சை அளித்து, அதன் உடல் நிலையை கண்காணிக்க உள்ளோம். நாளை உடல்நிலை சரியானதும் சிறுத்தை அடர் வனத்திற்குள் விடப்படும் என தெரிவித்தனர்.

    • மாற்று கருத்தை மத்திய அரசு திணித்தால் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் இறங்கும்.
    • விருப்பம் இருப்பவர்கள் 3 மற்றும் 4-வது மொழியை படித்துக்கொள்ளலாம்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மொழியை மையப்படுத்தி மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் தமிழ்நாட்டில் புதிய பிரச்சனைகள் உருவாகும். இது அண்ணா காலத்தில் இருந்தே பெரிய போராட்டமாக உருவெடுத்து, நேருவால் பாராளுமன்றத்திலேயே கொடுக்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில் இருமொழி கொள்கைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. விருப்பம் இருப்பவர்கள் 3 மற்றும் 4-வது மொழியை படித்துக்கொள்ளலாம். இதில் மாற்று கருத்தை மத்திய அரசு திணித்தால் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் இறங்கும்.

    தி.மு.க.வை எதிர்க்கும் திறமையோ, வீழ்த்துகிற திறமையோ அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு. மற்ற கட்சிகள் வரலாம். அதன் வரலாறு, அவர்கள் தேர்தலை சந்தித்த பிறகு தான் தெரியும். பாராளுமன்ற தொகுதி எண்ணிக்கை கூடத்தான் வேண்டும். குறைந்து வந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சோதனைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. தி.மு.க. மீது இருக்கிற வெறுப்பால் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். அதனால் கூட்டணி பற்றியோ, யாரோடு கூட்டணி என்பது பற்றி எல்லாம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுவார். மாஃபா பாண்டியராஜன் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. அவருக்கும், எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×