என் மலர்tooltip icon

    சென்னை

    • கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் சராசரியாக 5.6 செ.மீ மழை பதிவு.
    • கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் புகார்கள் குறித்து கேட்டறிந்தார்.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் சராசரியாக 5.6 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும், அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 8.6 செ.மீ, அம்பத்தூரில் 7 செ.மீ மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, இன்று அதிகாலை முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பணிக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    இந்த நிலையில், சென்னையில் பருவமழை மீட்பு நடவடிக்கை தொடர்பான கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் புகார்கள் குறித்து கேட்டறிந்தார்.

    • செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
    • 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனேக இடங்களில் மழை பெய்தது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகலில் தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழக, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

    அதற்கடுத்து மேலும் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, நாளை வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு வந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக சென்னை, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னையில் காலையில் இருந்து கனமழை வெளுத்து வாங்க தொடங்கியது. சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    சில பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    • 3.64 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 2.8 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
    • ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    அந்த வகையில், சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 1,800 கன அடியாக இருந்த ஏரிக்கான நீர்வரத்து தற்போது விநாடிக்கு 2,170 கனஅடியாக அதிகரித்துள்ளது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.84 அடியாக உயர்ந்துள்ளது.

    3.64 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 2.8 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  

    • சென்னை, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.
    • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், நாமக்கல், திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்கள் விவரம்:-

    கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சிவகங்கை, காஞ்சிபுரம், திருச்சி.

    கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 

    • பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
    • பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, காஞ்சிபுரம், சிவகங்கை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, சென்னை மற்றும் புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
    • பல்வேறு மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, திருவள்ளூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (22-10-2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
    • சென்னை மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களிலேயே தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் சென்னை மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் அதி கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    • கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரூ.438 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.
    • தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 18-ந் தேதி ரூ.230 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி அக்டோபர் 18-ந் தேதி ரூ.230 கோடி, 19-ந் தேதி ரூ.293 கோடி, 20-ந் தேதி ரூ.266 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் சென்னை ரூ.158 கோடி, திருச்சி ரூ. 157 கோடி, சேலம் ரூ,153 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரூ.438 கோடியாக இருந்த மது விற்பனை இந்த ஆண்டு ரூ.790 கோடியாக அதிகரித்துள்ளது.

    • சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்தது.
    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ரூ.12,180-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி வந்தது. கடந்த 8-ந்தேதி ஒரு பவுன் ரூ.90 ஆயிரத்தை தாண்டிய நிலையில், அதன் பின்னரும் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போனது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்திலேயே பயணித்து வருகிறது.

    தீபாவளியை பண்டிகையான நேற்று தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,920-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.95,360-க்கும் விற்பனையானது.

    அந்த வகையில் சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.97 ஆயிரத்து 440-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ரூ.12,180-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரணுக்கு ரூ.2080 உயர்ந்த நிலையில் தற்போது ரூ. 1440 குறைந்து ரூ.96 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.180 குறைந்த நிலையில் ரூ.12000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.182-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 88 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • கண்ணகி நகர் பகுதியில் தூர்வாரும் பணிகளையும், நீர் தடையின்றி செல்வதையும் மடுவின் வலதுபுற கரையில் தனியார் கல்லூரி பகுதியில் இருந்து, பார்வையிட்டார்.

    சென்னை:

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை ஆய்வு செய்து மீதமுள்ள பணிகளை துரிதப்படுத்தும் வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தென்சென்னை பகுதியில் நீர்வழிப் பாதைகளை மேம்படுத்தும் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சீரமைப்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    துரைப்பாக்கம் ஒக்கியம் மடுவு கால்வாயில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் ஒரு பகுதியாக காரப்பாக்கத்தில் சென்னை மெட்ரோ ரெயில் மேம்பாலப் பணி நடைபெற்று வரும் பகுதியில் மடுவின் கரைகளை அகலப்படுத்தி சீரமைக்கும் பணியினால் நீர் தடையின்றி செல்வதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளில் இருந்து வெளியேறும் நீர் எளிதாக கடலுக்கு செல்லும் வகையில், கண்ணகி நகர் பகுதியில் தூர்வாரும் பணிகளையும், நீர் தடையின்றி செல்வதையும் மடுவின் வலதுபுற கரையில் தனியார் கல்லூரி பகுதியில் இருந்து, பார்வையிட்டார்.

    மேலும், காரப்பாக்கம் பாலத்தின் கீழ்ப்புறம் தூர்வாரும் பணிகளையும், தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் வலது புற கரையை அகலப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டார். அப்பகுதியில் மணல் திட்டுக்களை அகற்றும் பணிகளையும், கண்ணகி நகர் பகுதியில் இடது புற கரையையும், தடுப்புச் சுவர் கட்டும் பணிகளையும் பார்வையிட்டு, சீரமைப்பு மற்றும் கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்கு மாறு நீர்வளத்துறை அலு வலர்களுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    சோழிங்கநல்லூர் பகுதியில் சதுப்பு நிலத்தில் நீர் எளிதாக செல்லவதற்காக, மேடவாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரை இணைக்கின்ற வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை பார்வையிட்டதுடன், மழைக்காலத்தில் வெள்ள நீர் தடையின்றி எளிதில் செல்லும் வகையில் பழைய பாலத்தை விரைவாக இடித்து அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும், சீரமைக்கவும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    • தண்டையார்பேட்டை மண்டலத்தில் 17 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்.
    • ஆலந்தூரில் 13 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்.

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளில் மழை இல்லாததால் பட்டாசு விற்பனை அமோகமாக நடந்தது.

    சென்னை தீவுத்திடலில் குடும்பம் குடும்பமாக சென்று பட்டாசு வாங்கி சென்றனர். அவ்வப்போது மழை சிறிது நேரம் பெய்தாலும் உடனே நின்றதால் தீபாவளி பட்டாசு விற்பனை களை கட்டியது.

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் கடைசி நேரத்தில் பட்டாசு விற்பனை சூடு பிடித்தது.

    கடந்த 3 நாட்களில் சென்னையில் பட்டாசு வெடித்ததன் மூலம் 151 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. 15 மண்டலங்களிலும் தூய்மை பணியாளர்கள் பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 17 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. ஆலந்தூரில் 13 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. கோடம்பாக்கம் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் தலா 12 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    ×