என் மலர்tooltip icon

    சென்னை

    • தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது.
    • அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று முதல் தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனேக மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாது என்றும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறாது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    • மக்கள் பிரச்சனை எப்போது எங்கு இருந்தாலும் தி.மு.க அங்கு மக்களோடு உடன் இருக்கும்.
    • அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க.வினர் நிவாரண பணிகளில் ஈடுபடுவது குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், ஆவடி நாசர், செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மேயர்கள் பிரியா (சென்னை), வசந்தகுமாரி (தாம்பரம்), உதயகுமார் (ஆவடி), துணை மேயர்கள், கவுன்சிலர்கள்.

    மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, ஆர்.டி. சேகர், மயிலை த.வேலு, மாதவரம் சுதர்சனம், எம்.எல்.ஏ.க்கள் தி.நகர் ஜெ.கருணாநிதி, ஆயிரம்விளக்கு எழிலசன், பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, அம்பத்தூர் ஜோசப் சாமு வேல், எபிநேசர், ஐட்ரீம் மூர்த்தி, வெற்றியழகன், தாயகம் கவி, பரந்தாமன், அண்ணாநகர் மோகன், பிரபாகர்ராஜா.

    எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்க பாண்டியன், தயாநிதி மாறன், கனிமொழி சோமு, மண்டல குழு தலைவர்கள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, மழைக்காலம் தொடங்கிவிட்டதால் தி.மு.க நிர்வாகிகள் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்ற வேண்டும்.

    அந்தந்த வார்டுகளில் மழையால் பாதிக்கப்படும் நபர்கள் இருந்தால் அவர்களை கண்டறிந்து உடனே உதவ வேண்டும். நிவாரண உதவிகள் அவர்களுக்கு கிடைக்கவும் நீங்கள் துணை நிற்க வேண்டும். பாதிக்கப்படும் அனைத்து பொதுமக்களுக்கும் களத்தில் இறங்கி உதவி செய்ய வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்னும் மழை முடியவில்லை. இன்னும் 2 நாட்கள் கழித்து இன்னொரு மழை வரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அது வலுவடைய வாய்ப்பு இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

    எனவே அதிகளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி ஒரு சூழல் வந்தால் அதை நாம் எல்லோரும் சேர்ந்து எப்படி எதிர்க்கொள்வோம். மக்களை எப்படி காப்பாற்றுவோம் என்பதற்கான ஆலோசனை கூட்டம்தான் இந்த கூட்டம்.

    பேரறிஞர் அண்ணா நமக்கு சொல்லி கொடுத்தது என்னவென்றால் எப்போதுமே மக்களிடம் செல், மக்களிடம் பழகு, மக்களோடு பேசு, மக்களுக்கு சேவை செய், மக்களுக்கு என்ன தேவையோ அதை செய் என்று சொன்னார்.

    அவரது வழியில் நாம் பயணித்து கொண்டிருக்கிறோம். நாம் பல இடங்களுக்கு போகும் போது சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஒரு மணி நேரம் வெயில் அடித்தால், மழை நின்றால் தண்ணீர் வடிந்து விடுகிறது.

    மழை தண்ணீர் நிற்கும் போது அந்த பகுதியில் உள்ள மக்கள் கூப்பிடுகிறார்கள். வந்து பாருங்கள் என்று அழைக்கிறார்கள். அவர்கள் கோபத்தோடு கூப்பிடவில்லை.

    சிரித்த முகத்தோடுதான் கூப்பிடுகிறார்கள். நீங்கள் வந்து பார்த்தால் சரியாகி விடும் என்று அழைக்கிறார்கள். முதலமைச்சரின் கவனத்துக்கு இப்பிரச்சனை சென்றால் சரியாகி விடும். மக்கள் பிரதிநிதிகள் கவனத்துக்கு சென்றால் சரியாகி விடும் என்று நம்பிக்கையோடுதான் அழைக்கிறார்கள்.

    எனவே இந்த பருவமழையின் போதும் மக்களோடு நாம் நின்றோம் என்பதை இந்த மழையில் நாம் நிரூபித்து காட்ட வேண்டும்.

    தேர்தல் வரக்கூடிய நிலையில் அதற்காக நடைபெறுகின்ற ஒரு ஆலோசனை கூட்டம் என நினைக்க வேண்டாம். அது நிச்சயமாக இல்லை. ஒரு வெள்ளத்திற்கு முன்பும் ஒவ்வொரு பேரிடருக்கு முன்பும் இது போன்ற பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தி உள்ளோம்.

    குறிப்பாக கொரோனா காலத்தில் மக்கள் உடன் நின்று இருக்கிறோம். அந்த அடிப்படையில் தான் நம் மக்கள் வாக்களித்து நம்மை ஆட்சியில் அமர்த்தி உள்ளார்கள். கொரோனா காலத்தில் நம்முடைய தலைவர் தான் முன் களப்பணியாளராக முன் நின்று இருக்கிறார்.

    இன்று தைரியமாக பொதுமக்களை சந்திக்க போகிறோம் என அனைத்து மக்கள் பிரதிநிதிகள் சொல்லி வருகிறார்கள். அத்தனை பணிகளை இந்த அரசு மேற்கொண்டு உள்ளது.

    மக்கள் பிரச்சனை எப்போது எங்கு இருந்தாலும் தி.மு.க அங்கு மக்களோடு உடன் இருக்கும். இயற்கை பேரிடர்கள் எதுவாக இருந்தாலும் சரி ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்களுடன் முதலமைச்சர் நிற்கிறார். நமக்கு கூடுதல் பெறுப்பு தற்போது இருக்கிறது.

    2015-ம் ஆண்டு பெரிய மழையாக இருந்தாலும், புயலாக இருந்தாலும் சரி வர்தா புயலாக இருந்தாலும் சரி பேரிடர் காலத்தில் தி.மு.க முன் களப்பணியாளராக நின்று மக்களை காப்பாற்றி உள்ளோம். நிவாரண பணிகள் வழங்கப்பட்டு மக்களுடன் ஒன்றாக இருந்தோம். சுழன்று நம் பணியை மேற்கொண்டு இருக்கிறோம்.

    தற்போது சோசியல் மீடியா, தொலைக்காட்சிகள் அதிகமாக உள்ளது. மக்களுக்கு பிரச்சனை இருந்தால் களத்திற்கு சென்று உண்மை நிலவரத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் பகுதி மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.

    மழை காலத்தில் முதியோர்கள், பெண்கள், குழந்தைகள், பாதுகாப்பு முக்கியம். அவர்களுக்கு முதல் முன்னுரிமை வழங்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. உணவு கூடங்களில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    தாழ்வான பகுதிகளில் முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முகாம்களுக்கு வர தயங்கும் மக்களை முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கும் பொறுப்பு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உள்ளது. மக்களிடம் பேசும் போது கண்ணியத்துடன் கவனத்துடனும் பேச வேண்டும். கவனத்துடன் மக்களை அணுக வேண்டும்.

    தி.மு.க. நெட்வொர்க் என்பது தான் உலகத்திலேயே மிகப்பெரிய நெட்வொர்க். இந்த நெட்வொர்க்கை மக்கள் சேவைக்கு பயன்படுத்த வேண்டும். ஒரே நேர்கோட்டில் நாம் செயல்பட்டால் தான் அரசுக்கும் தி.மு.க.விற்கும், முதலமைச்சருக்கும் பெருமை சேர்க்கும். மேயர், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் போன்றவர்கள் மீட்பு மற்றும் முகாமில் முறையாக கண்காணிக்க வேண்டும்.

    நாம் அனைவரும் களத்தில் நிற்க வேண்டும். தொடர்ந்து முதலமைச்சர் கண்காணிப்பார். ஒவ்வொருவரையும் அவர் கண்காணிப்பார்.

    இந்த மழை காலத்தில் மட்டுமல்ல இனி வரும் ஒவ்வொரு நாளும் உங்களுடைய செயல்பாடுகள் மிக மிக முக்கியமாக இருக்க வேண்டும்.

    போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். இதுதான் தி.மு.க.விற்கும், கருப்பு சிவப்பு கொடிக்கும், நம்முடைய தலைவருக்கு நாம் சேர்க்கும் பெருமை. எத்தனையோ பேரிடர், பெருமழையிலும் நம்முடைய மக்களை காப்பாற்றி உள்ளோம். இந்த மழை காலத்தில் மக்களுடன் நின்று அவர்களை காப்பாற்றுவோம் என்றார்.

    • முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக 106 உணவு தயாரிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 16-ந் தேதி அன்று வடகிழக்குப் பருவமழை தொடங்கியதன் காரணமாக தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக பெய்து வரும் மழையினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், கடந்த 19.10.2025 அன்று சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டு முன்னெற்பாடு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

    இதன் தொடர்ச்சியாக மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார்நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

    சென்னையில் மேற்கொண்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் மழை நீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுகளுக்கேற்ப சென்னை மாநகரில் மழைநீர் தேங்கும் பகுதிகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் 215 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக 106 உணவு தயாரிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 68 உணவு தயாரிப்புக் கூடங்களில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

    சென்னையில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பெருநகர மாநகராட்சி வாயிலாக இந்த உணவு மையங்களிலிருந்து இன்று காலை 1 லட்சத்து 46 ஆயிரத்து 950 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    24 மணிநேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேரும் சென்னை குடிநீர்வாரியத்தின் மூலம் 2149 களப்பணியாளர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.
    • சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று முதல் தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இந்நிலையில் 2 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டையில் இன்று அதிகனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உழவர்களுக்கு ஈடு செய்ய முடியாத அளவுக்கு இழப்பு ஏற்படும்.
    • சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால், விவசாயிகள் கடனாளிகளாக மாறி விடுவார்கள்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

    ஏற்கனவே, அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல், கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதற்கு முன்பாக மழையில் நனைந்து சேதமடைந்துள்ள நிலையில், இப்போது அறுவடைக்கு தயாராக உள்ள குறுவைப் பயிர்களும், நடவு செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்களும் தொடர் மழையில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இது உழவர்களுக்கு இரட்டைப் பேரிடியாக அமைந்திருக்கிறது.

    காவிரி பாசன மாவட்டங்களில் மழை தொடர்ந்தால் குறுவை பயிர்கள் வயலிலேயே சாய்ந்து முளைக்கத் தொடங்கி விடும். சம்பா மற்றும் நெற்பயிர்கள் அழுகத் தொடங்கி விடும். இதனால் உழவர்களுக்கு ஈடு செய்ய முடியாத அளவுக்கு இழப்பு ஏற்படும். நடப்பாண்டில் குறித்த காலத்தில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியதால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உழவர்கள் இருந்தனர். அறுவடைக்கு முன்பாக மழையால் பயிர்கள் சேதமடைந்தால் அவர்கள் செய்த முதலீடு அனைத்தும் வீணாகி பெரும் கடன் சுமையில் சிக்கிக் கொள்வார்கள். பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்குவதன் மூலமாக மட்டுமே உழவர்களைக் காப்பாற்ற முடியும்.

    காவிரி பாசன மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெற்பயிர்கள் சேதமடைந்தன. ஆனால், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள் மொத்தம் 1.05 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றுக்கு ரூ.71.79 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரை செய்தனர். அந்த இழப்பீட்டைக் கூட தமிழக அரசு இன்னும் வழங்காத நிலையில், அடுத்த பருவமழையிலும் காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றன.

    காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால், விவசாயிகள் கடனாளிகளாக மாறி விடுவார்கள். கடன் தான் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முதன்மைக் காரணமாக அமைகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு, இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல்லையும் விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • புயல் வந்த பிறகு வீட்டுக்குள் மின்சாரம், சமையல் கியாசை அணைக்கவும்.
    • உடைந்த மின் கம்பங்கள், அறுந்து விழுந்த மின் கம்பிகள் அருகில் செல்லக்கூடாது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    பருவமழை காலத்தில் நோய் பாதிப்புகள், வெள்ள பாதிப்புகள், இடி மின்னல் தாக்கம் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. மழைக்காலத்தில் எதையெல்லாம் செய்ய வேண்டும். எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிவித்துள்ளது.

    * மழைக் காலத்தில் குடிநீரில் கிருமி தொற்று ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படக்கூடும். அதனால் காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பருக வேண்டும். சூடான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

    * தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.

    * வீட்டில் மின்விளக்குகளை கவனமுடன் கையாள வேண்டும்.

    * உடைந்த மின் சாதன பொருட்களை உடனே மாற்றவும்.

    * வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    * சூப், ரசம், பால், டீ, காபி போன்ற சூடான திரவ உணவுகளை அருந்தலாம்.

    * அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * மின்மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகே செல்ல வேண்டாம்.

    * மின்சார கம்பிகள் அறுந்து விழுந்து இருந்தால் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.

    * இடி, மின்னல் ஏற்படும் போது டிவி, கம்ப்யூட்டர், செல்போன், மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம்.

    * வீட்டுச் சுவரில் தண்ணீர் கசிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    * பச்சை மரங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம்.

    * குளிர்ச்சியான பொருட்களை மழைக் காலத்தில் உண்பதை தவிர்க்க வேண்டும்.

    * பழச்சாறுகளை தவிர்ப்பது நல்லது.

    * புயல் வந்த பிறகு வீட்டுக்குள் மின்சாரம், சமையல் கியாசை அணைக்கவும்.

    * கதவுகள், ஜன்னல்களை மூடி வைக்கவும், பழுதடைந்த வீடாக இருந்தால் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள்.

    * கொதிக்க வைத்த குளோரின் கலந்த குடிநீரை பருக வேண்டும்.

    * அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டும் நம்பவும்.

    * சேதமடைந்த கட்டிடத்தின் அருகில் செல்ல வேண்டாம்.

    * உடைந்த மின் கம்பங்கள், அறுந்து விழுந்த மின் கம்பிகள் அருகில் செல்லக்கூடாது.

    * புயல் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழலில் லேப்டாப் செல்போன் ஆகியவற்றினை முழுமையாக சார்ஜிங் செய்து கொள்ள வேண்டும்.

    * யுபிஎஸ் பேட்டரியை சரி பார்க்க வேண்டும்.

    * ஜெனரேட்டரில் உள்ள டீசலை சரிபார்த்து முழு அளவில் வைக்க வேண்டும்.

    * குடிநீர் தொட்டியில் தண்ணீர் முழு அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    * போதுமான அளவு குடிநீர் மற்றும் உணவு தின்பண்டங்கள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

    * எமர்ஜென்சி லைட், மெழுகுவர்த்தி போன்றவற்றை தயார்படுத்தி வைத்திருக்கலாம்.

    * மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது.

    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
    • பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 8-ந்தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்தை தாண்டிய நிலையில், கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரம் என்ற உச்சத்தையும் கடந்தது.

    மேலும் விலை உயருமோ? என நினைத்த நேரத்தில், அதற்கு மறுநாளே சவரனுக்கு ரூ.1,600 சரிந்து காணப்பட்டது. தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.95,360-க்கும் தங்கம் விற்பனையானது.

    இந்த விலை குறைவு தீபாவளி விற்பனைக்காக என சொல்லப்பட்ட நிலையில், அதற்கேற்றாற்போல், தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாளே தங்கம் விலை மீண்டும் எகிறியது.

    கடந்த சில நாட்களாகவே ஒரே நாளில் ஏற்ற-இறக்கத்தை தங்கம் விலை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலையில் கிராமுக்கு ரூ.260-ம், சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து, மாலையில் அந்த விலையில் இருந்து கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் குறைந்தது.

    மொத்தத்தில் நேற்று முன்தினம் விலையைவிட நேற்று கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்துக்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    21-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000

    20-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 95,360

    19-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000

    18-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000

    17-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 97,600

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    21-10-2025- ஒரு கிராம் ரூ.182

    20-10-2025- ஒரு கிராம் ரூ.190

    19-10-2025- ஒரு கிராம் ரூ.190

    18-10-2025- ஒரு கிராம் ரூ.190

    17-10-2025- ஒரு கிராம் ரூ.203

    • உங்கள் உறுதியான தலைமை, அயராத அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.
    • நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தொடர்ச்சியான வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.

    சென்னை :

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமித்ஷாவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேசிய பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதில் உங்கள் உறுதியான தலைமை, அயராத அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.

    நமது தேசத்திற்கான உங்கள் சேவையில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தொடர்ச்சியான வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். 



    • தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
    • சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று முதல் தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனேக மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.

    • புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
    • டெல்டா மாவட்டங்களுக்கு முதலமைச்சர் அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளார்.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் சென்னையில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் புகார்கள் குறித்து கேட்டறிந்தார்.

    இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * சமூக வலைதளங்கள், போன் மூலம் வரும் புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    * கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்து, சில பேரிடம் பேசினேன். நானே நேரில் வந்து பார்ப்பதாக சொல்லி இருக்கிறேன். நானும், கமிஷனரும், அதிகாரிகளும் நேரில் செல்கிறோம்.

    * டெல்டா மாவட்டங்களுக்கு முதலமைச்சர் அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளார். பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்கள். நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்கள். எல்லா இடத்திலும் நிவாரண முகாம்கள் தயாராக உள்ளது. மாநில அரசு அலர்ட்டாக உள்ளது.

    * இன்று காலை 4 மணி முதல் எந்த பகுதி மக்களுக்கு உணவு தேவையோ அவர்களுக்கு தயார் செய்து கொடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு மட்டும் இடி, மின்னலுடன் கூடிய கனமழைப்பு வாய்ப்புள்ளது
    • திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது

    சென்னை:

    காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வு காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு விலகியதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    * டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு மட்டும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    * காவிரி படுகை மாவட்டங்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு.

    * சென்னை மற்றும் புறநகரில் 4 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளது.

    * இன்று முதல் 25-ந்தேதி வரை சென்னையில் கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது என்றார். 

    • செங்கல்பட்டில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
    • சென்டிரலில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் நெல்லை-எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையில் இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06166), மறுநாள் காலை 10.55 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் சிறப்பு ரெயில் (06165) மறுநாள் நள்ளிரவு 12.05 மணிக்கு நெல்லை வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில்,

    பயணிகள் முன்பதிவு மிக குறைவாக இருப்பதால் வருகிற 24 மற்றும் 26-ந் தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    இதே தேதியில் நெல்லையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில், 28-ந்தேதி நாகர்கோவிலில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில், 29-ந்தேதி அதிகாலை 4.15 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இன்று (புதன்கிழமை) மதியம் 3.10 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து கோட்டயம் வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில், நாளை (வியாழக்கிழமை) கோட்டயத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு சென்னை சென்டிரல் வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயிலும் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×