என் மலர்
சென்னை
- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
- மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- ஏரி உபரி நீர் திறக்கப்பட்டது தொடர்பாக தகவல் சொல்லவில்லை என்றார்.
- எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை அதிகாரிகளை வசைபாடியது சலசலப்பை ஏற்படுத்தியது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 100 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இதற்கிடையே, நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும், நீர்மட்டம் 21 அடியை நெருங்குவதாலும் கூடுதலாக உபரி நீர் திறக்க அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏரியின் ஐந்து கண் மதகில் மூன்று செட்டர்கள் வழியாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் மாநில தலைவருமான செல்வபெருந்தகை அதிகாரிகளுடன் சேர்ந்து நேற்று ஏரியில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின், மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தண்ணீரை திறந்து விடுகிறீர்கள். கடந்த 3 ஆண்டுகள் நான் திறந்து விட்டேன். கடந்த ஆண்டு என்னிடத்தில் சொல்லவில்லை. மக்கள் பிரதிநிதிகளுக்கு சொல்லாமல் நீங்களே மக்கள் பிரதிநிதியாக ஆகிவிட்டால் பிறகு எதற்கு அரசாங்கம்? என பொதுப்பணித்துறை அதிகாரிகளை கடிந்து கொண்டார். இச்சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.
- இந்தத் திட்டத்தின் செலவு ரூ.757.18 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
- இதன்மூலம் பயணிகளின் கூட்ட நெரிசலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலான நான்காவது ரெயில் பாதை திட்டத்துக்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் 757.18 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலான 30.2 கிலோமீட்டர் தூரத்திலான 4-வது ரெயில் பாதை திட்டத்திற்கு மத்திய ரெயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த திட்டத்தின் செலவு ரூ.757.18 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த வழித்தடத்தில் பயணிகளின் பயன்பாடு 87 சதவீதமாக இருக்கிறது. புதிய பாதை செயல்படுத்தப்படும் போது அது 136 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகளின் கூட்ட நெரிசலும் குறையும். செங்கல்பட்டு வரையில் மின்சார ரெயில் சேவையை நீட்டிக்கவும் இது உதவும்.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என தெரிவித்துள்ளது.
- நெற்பயிர்களை திமுக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், எதற்கு இந்த அரசு இருக்கிறது?
- விவசாயிகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ள அரசாக தான் இன்றைய விடியா திமுக அரசு இருக்கிறது.
2020-21 அதிமுக ஆட்சி காலத்தில் 4.5% ஆக இருந்த விவசாய வளர்ச்சி 2024-25 திமுக ஆட்சியில் 0.09% ஆக குறைந்தது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் தஞ்சையில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்த உடன் தஞ்சை விரைந்தேன். பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்ததுடன், நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டேன்.
"திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே உள்ள நெல் மூட்டைகளை, குடோனுக்கு எடுத்து செல்லாததால், புதிய கொள்முதல்களை வைக்க இடமில்லை" என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனை சட்டப்பேரவையில் நான் குறிப்பிட்டால், அதனை மறுத்த திமுக அரசின் உணவுத்துறை அமைச்சர், தாங்கள் வேகமாக, துரிதமாக செயல்படுவதாக குறிப்பிட்டார். ஒரு நாளுக்கு 2,000 மூட்டைகள் எடை போடப்படுவதாகவும் கூறினார்.
ஆனால், நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வுசெய்த போது, அங்கு இருக்கும் Loadman, ஒரு நாளுக்கு வெறும் 800-900 மூட்டைகள் தான் எடை போடப்படுவதாக சொல்கிறார்.
திமுக அமைச்சர் தவறான கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது விவசாயத்திற்கு விரோதமான செயல். அஇஅதிமுக ஆட்சியில், ஒரு நாளுக்கு 1,000 நெல் மூட்டைகள் எடை போடப்பட்டன.
இரவு பகலெனப் பாராமல் 100 நாட்கள் போராடி விளைவித்த நெற்பயிர்களை இந்த திமுக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், எதற்கு இந்த அரசு இருக்கிறது?
செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்றும், அதனை நான் கேட்டுப் பெறவேண்டும் எனவும் உணவுத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் சொன்னார். ஆனால், கடந்த 18.08.2025 அன்றே மத்திய அரசு அதற்கான அனுமதியை வழங்கிவிட்டது. இது கூடத் தெரியாமல், சட்டமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்துள்ளார் திமுக அரசின் அமைச்சர்.
தான் போட்ட நகையை அடமானம் வைத்து விளைவித்த நெற்பயிரை 20 நாட்களாகக் கொள்முதல் செய்யாமல் இழுத்தடித்து, தற்போது மழையில் நனைந்து முளைத்துப் போனதால் என்ன செய்வதென தெரியாமல் கண்ணீருடன் என்னிடம் பெண் விவசாயி ஒருவர் கண்ணீர் விட்டு கதறியது, கலங்கச் செய்தது. இது ஒரு கொடுமையான செயல்.
அதிமுக ஆட்சியில் 2020-21 காலத்தில் 4.5% ஆக இருந்த விவசாய வளர்ச்சியை, 2024-25 காலத்தில் 0.09% ஆக படுபாதாளத்தில் தள்ளியது தான் திமுக அரசின் சாதனை.
விவசாயிகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ள அரசாக தான் இன்றைய விடியா திமுக அரசு இருக்கிறது. விவசாயிகளுடன் எப்போதும் துணை நிற்பது போல், இந்த கடினமான நேரத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களோடு துணைநிற்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2025ம் ஆண்டுக்கான வைக்கம் விருதினை தமிழக அரசு அறிவித்துள்ளது.
- தேன்மொழி சவுந்தரராஜன் என்பவருக்கு 2025ம் ஆண்டுக்கான வைக்கம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டுக்கான வைக்கம் விருதினை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 2025ம் ஆண்டுக்கான வைக்கம் விருது அமெரிக்காவில் உள்ள தேன்மொழி சவுந்தரராஜனுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா கலிபோர்னியாவை சேர்ந்த தேன்மொழி சவுந்தரராஜன் என்பவருக்கு 2025ம் ஆண்டுக்கான வைக்கம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது அறிவிக்கப்பட்ட தேன்மொழி சவுந்தரராஜனுக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை, பாராட்டு சான்றிதழ், தங்க முலாம் பூசிய பதக்கம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு இயந்திரத்தின் மொத்த கவனத்தையும் சாராய விற்பனையில் திருப்பிய திமுக அரசு என்றார் நயினார் நாகேந்திரன்.
- சாராய விற்பனையில் கல்லா கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது.
தீபாவளியையொட்டி தமிழகத்தில் சுமார் ரூ.789 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், திமுக அரசின் கோர முகத்தை தோலுரித்துக் காட்டுகின்றன என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சுமார் 789 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், இந்த டாஸ்மாக் மாடல் அரசின் கோர முகத்தை நமக்குத் தோலுரித்துக் காட்டுகின்றன.
சாதாரண நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் தமிழகத்தில், பண்டிகை நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ, மக்களின் மகிழ்ச்சியும் நிம்மதியும் குலைந்துவிடுமோ என நாம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கையில், சம்பந்தப்பட்ட திமுக அரசும் அதை இயக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது.
அதுவும் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த நான்காண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மது விற்பனை உச்சம் பெற்றுள்ளது என்றால், அரசு இயந்திரத்தின் மொத்த வளங்களையும் கவனத்தையும் சாராய விற்பனையில் தான் திமுக செலவழித்துள்ளது என்பது தானே அர்த்தம்?
மழை வெள்ளத்தால் ஆங்காங்கே சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, விழுப்புரம்-கடலூர் மாவட்டங்களில் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது, தேனியில் வெள்ளம் பாதித்த பகுதிகள் மீண்டபாடில்லை, அத்தியாவசியப் பொருட்களுக்கு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, 90% மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டதாகக் கூறிய சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது, முறையான சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் விளைவித்த பயிர்கள் மழையில் நனைந்து முளைப்பு கட்டிப் போயுள்ளது, டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கிருந்த பயிர்களும் சேதமாகியுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எவ்வித சேதமுமில்லாமல், மதுவை சிறிதும் தொய்வின்றி விற்பனை செய்துகொண்டிருக்கிறது திமுக அரசு. இதுதான் நாடு போற்றும் நல்லாட்சிக்கான இலக்கணமா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தகவல்.
- வழக்கின் விசாரணையை நவம்பர் 24ம் தேதி தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு.
அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் காவல்துறைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? என காவல்துறை விளக்கமளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கின் விசாரணையை நவம்பர் 24ம் தேதி தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட 4662 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.
- 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர்.
4,662 பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி நடந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகின.
கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட 4662 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.
இதில், 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகளை வெளியாகியுள்ளன.
தேர்வர்கள் http://tnpsc.gov.in என்கிற தேர்வாணைய இணையதளத்தில் தங்களது பதிவு எண்களை உள்ளீடு செய்து முடிவுகளைப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்தது.
- மொத்தமாக சவரனுக்கு ரூ.3680 குறைந்து விற்பனையாகிறது.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 8-ந்தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்தை தாண்டிய நிலையில், கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரம் என்ற உச்சத்தையும் கடந்தது.
மேலும் விலை உயருமோ? என நினைத்த நேரத்தில், அதற்கு மறுநாளே சவரனுக்கு ரூ.1,600 சரிந்து காணப்பட்டது. தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.95,360-க்கும் தங்கம் விற்பனையானது.
இந்த விலை குறைவு தீபாவளி விற்பனைக்காக என சொல்லப்பட்ட நிலையில், அதற்கேற்றாற்போல், தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாளே தங்கம் விலை மீண்டும் எகிறியது. கடந்த சில நாட்களாகவே ஒரே நாளில் ஏற்ற-இறக்கத்தை தங்கம் விலை சந்தித்து வருகிறது.
அந்த வகையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.11 ஆயிரத்து 540 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.1280 குறைந்து ரூ.92 ஆயிரத்து 320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் இன்று மொத்தமாக சவரனுக்கு ரூ.3680 குறைந்து விற்பனையாகிறது. இது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 175 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
21-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000
20-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 95,360
19-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000
18-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 96,000
17-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 97,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
21-10-2025- ஒரு கிராம் ரூ.182
20-10-2025- ஒரு கிராம் ரூ.190
19-10-2025- ஒரு கிராம் ரூ.190
18-10-2025- ஒரு கிராம் ரூ.190
17-10-2025- ஒரு கிராம் ரூ.203
- வீட்டில் இருந்த அசோதை மற்றும் அவரது மகள் ஜெயா ஆகியோர் மீது மேற்கூரை விழுந்தது.
- தாய், மகள் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடலூர் அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அசோதை. இவர்களது மகள் ஜெயா. இன்று காலை அசோதை மற்றும் ஜெயா ஆகியோர் வீட்டில் இருந்து வந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக இன்று காலை திடீரென்று அசோதை வீட்டின் மேற்கூரை இடிந்து பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த அசோதை மற்றும் அவரது மகள் ஜெயா ஆகியோர் மீது மேற்கூரை விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த அசோதை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயா பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ஜெயா பரிதாபமாக உயிரிழந்தார் .
இவர்களது மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அந்த வீட்டில் வசித்து வந்த யசோதை, ஜெயா ஆகிய இருவர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன்.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 3 மணி நேரத்துக்குள் அதாவது காலை 8.30 மணிக்கு அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோர பகுதியை நெருங்கி நீடித்தது.
இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு மேலும் சற்று வலுவடைந்தது. இன்று (புதன்கிழமை) மாலைக்குள் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதாவது புயல் சின்னமாக வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக வட மாவட்டங்களில் இன்றும், நாளையும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
புயல் சின்னம் இன்று (புதன்கிழமை) வலுவான நிலையில் நீடிப்பதால் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த 2 மாவட்டங்களிலும் இன்று 20 சென்டி மீட்டருக்கு மேல் அதி கனமழை பெய்யும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் மழை பாதிப்பு ஏற்பட்டால் மக்களுக்கு உதவ அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.
இதே போன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கோவை, ஈரோடு, நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களுக்கும் புதுச்சேரிக்கும் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புயல் சின்னம் தமிழக கடலோர பகுதியை நெருங்கி வருவதால் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
புயல் சின்னம் இன்று மாலை மேலும் வலுவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அது புயலாக மாறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த புயல் சின்னம் புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே அது கரையை கடக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.
- வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
- அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வரும் 23ம் தேதி 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 24ம் தேதி 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வரும் 24ம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கலப்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சியில் வரும் 26, 27, 28ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் வரும் 26, 27, 28ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






