என் மலர்
சென்னை
- ஒரு மணி நேரத்தில் உங்களை சந்தித்து என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன்.
- நீங்களும் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுங்கள்.
நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் கொடைக்கானல் செல்வதற்காக இன்று மதுரை வருவதாக கூறப்பட்டது. இந்த தகவல் பரவியதை தொடர்ந்து, விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மதுரை விமான நிலையத்தில் திரண்டனர்.
விஜயை பார்க்காமல் செல்லமாட்டோம் என்று வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தவெகவினருக்கு நேற்று கடிதம் மூலம் விஜய் அறிவுரை வழங்கியதையும் ஏற்காமல் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
மேலும், மதுரை விமான நிலைய வாயிலில் போலீசாருடன் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மதுரைக்கு புறப்படுவதற்கு முன்பு,
சென்னை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை விமான நிலையத்தில் நம் நண்பர்கள், நண்பிகள், தோழர்கள், தோழிகள் அனைவரும் வந்திருக்கிறார்கள். மதுரை மக்கள் அனைவருக்குமே என்னுடைய வணக்கம். உங்களுடைய அன்பிற்கு கோடான கோடி நன்றிகள்.
நான் இன்று ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்காக மதுரை வருகிறேன்.
கூடிய விரைவில் மதுரை மண்ணிற்கு நம் கட்சி சார்பில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் சந்தித்து பேசிகிறேன்.
ஒரு மணி நேரத்தில் உங்களை சந்தித்து என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன். நீங்களும் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுங்கள்.
யாரும் வாகனத்தை பின் தொடர வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜய் கட்சி தொடங்கியப் பிறகு, முதல் முறையாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- லோட்டஸ் என்கிற செயலியில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
- 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னையில் ஆன்லைன் மூலமாக ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கிழக்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சென்னை மாநகர் முழுவதும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இதில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் மூலமாக லோட்டஸ் என்கிற செயலியில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆகாஷ் ஜெயின், ஆகாஷ் குமார், சுரேஷ் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ரூ.19 லட்சம் பணம் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்ட போது, பிடிபட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதன் பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும் என்றும் கூறினார்கள்.
- நாளை முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:
இன்று முதல் 4-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.
5-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் சற்று குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இன்று முதல் 3-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
4 மற்றும் 5-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசெளகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
3 மற்றும் 4-ந்தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோ அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- அட்சய திருதியை நாளில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்ய பொதுமக்கள் கோரிக்கை.
- 2024-25 ம் நிதியாண்டில் கடந்த 10.2.2025 அன்று ஒரே நாளில் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டது.
சென்னை:
பத்திரப்பதிவுத் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மங்களகரமான நாளான நேற்று (ஏப். 30-ந் தேதி) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.
பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று நேற்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும். 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது.
2024-25 ம் நிதியாண்டில் கடந்த 10.2.2025 அன்று ஒரே நாளில் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.
2025-26-ம் நிதியாண்டில் இதற்கும் அதிகமாக நேற்று ஒரே நாளில் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இதுவரை இல்லாத அளவில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது என வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வெப்ப அலையின் தாக்கம் தமிழகத்தில் இருக்காது.
- மே 15-ந்தேதி மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெப்பம் வாட்டி எடுத்து வருகிறது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது கோடை வெப்பத்தை பெரியளவில் தணிக்கவில்லை. கடலோரப் பகுதிகளிலும் தொடர்ந்து அதிக வெப்பநிலை நீடித்து வருகிறது.
இதற்கிடையே வருகிற 18-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த மாதம் இயல்பான வெப்பம் நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வெப்ப அலையின் தாக்கம் தமிழகத்தில் இருக்காது.
தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் நிலவும் கோடை வெப்பச்சலன மழை மே 8-ந்தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக பகலில் வெயில் சுட்டெரித்தாலும் இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும். 2-வது வாரத்தில் மழைப்பொழிவு குறைந்து வெப்பநிலை உயரக்கூடும்.
ஆனால் மே 15-ந்தேதி மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வருகிற 18-ந்தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் மேற்கு காற்றின் ஊடுருவல் மே மத்தியில் படிப்படியாக தொடங்கும். அதனை தொடர்ந்து இந்த மாத இறுதியில் கேரளா, தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த மாதத்தில் இயல்பான வெப்பமும், இயல்பிற்கு அதிமான கோடை மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்திய மாநில மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது.
இரவு நேரங்களில் வீடுகளில் கடுமையான வெப்பமும் வாட்டி எடுக்கிறது. இதனால் குளிர்சாதன வசதி இல்லாத அறைகளில் தூங்குபவர்கள் வியர்வை மழையில் நனைய வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டு உள்ளனர். பலர் வீடுகளில் மொட்டை மாடிகளில் காற்றுக்காக இரவு நேரங்களில் தூங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது.
- சாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள், நன்றி.
- சாதிவாரி கணக்கெடுப்புக்கு தி.மு.க. அரசு சொந்தம் கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு பா.ம.க.விற்கு கிடைத்த வெற்றி.
* சுதந்திர இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்ட முதல் பிரதமர் மோடிதான்.
* சாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள், நன்றி.
* மத்திய அரசு உத்தரவிட்டாலும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசும் நடத்த வேண்டும்.
* சாதிவாரி கணக்கெடுப்புக்கு தி.மு.க. அரசு சொந்தம் கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
* சாதிவாரி கணக்கெடுப்பை ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் செய்யவில்லை.
* தி.மு.க.வுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?
* மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் வித்தியாசம் உள்ளது என்றார்.
- புதிய சட்டத்தின்படி தனியார் வங்கி நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர்கள் மீது அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிறு, குறு உழவர்களுக்கு தாராளமாக கடன் வழங்க அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி வடிவேல்.
4 ஆண்டுகளுக்கு முன் பெற்ற இந்த கடனுக்கான தவணையை அவர் சரியாக செலுத்தி வந்த நிலையில், போதிய வருமானம் இல்லாததால் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான தவணையை செலுத்த முடியவில்லை.
அதனால் அவரது வீட்டிற்கு சென்ற வங்கிப் பணியாளர்கள் அவரை மரியாதைக் குறைவாக திட்டியதை தாங்கிக் கொள்ள முடியாமல்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
கடனை திரும்பச் செலுத்தாதவர்களை மிரட்டினாலோ, வலுக்கட்டாயமாக வசூலித்தாலோ 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் தண்டம் விதிக்க வகை செய்யும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதற்கு ஆளுனர் ஒப்புதல் அளித்தாரா, இல்லையா? என்பது இன்னும் தெரியவில்லை. எனினும், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு தான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது என்பதால் புதிய சட்டத்தின்படி தனியார் வங்கி நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர்கள் மீது அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுத்துறை வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் உழவர்களுக்கு கடன் வழங்க மறுப்பது தான் இத்தகைய தனியார் வங்கிகளிடம் உழவர்கள் சிக்கிக் கொள்வதற்கு காரணம் ஆகும். எனவே, சிறு, குறு உழவர்களுக்கு தாராளமாக கடன் வழங்க அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரசுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன.
- சொத்துக்கள் மீட்பு எப்போது? என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துக்களை மீட்பதற்காக முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு தலைமையில் 31 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஒப்புதலுடன் இந்த குழுவின் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ளார்.
கே.வீ.தங்கபாலு-தலைவர், எம்.கிருஷ்ண சாமி-இணைத் தலைவர், கே.எஸ்.அழகிரி-இணைத் தலைவர், எஸ்.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., டாக்டர் ஏ.செல்லக்குமார், பி.மாணிக்கம் தாகூர் எம்.பி., கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராமசுப்பு, கே.ராணி, வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி, பெ.விஸ்வநாதன், எம்.கிறிஸ்டோபர் திலக், கோபி நாத் பழனியப்பன், வி.கே.அறிவழகன், ரூபி.ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ., ஜே.எம்.எச்.அசன் மவுலானா எம்.எல்.ஏ., தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ., சி.டி.மெய்யப்பன், டாக்டர் நாசே ஜெ.ராமச்சந்திரன், ஆர்.எம்.பழனிசாமி, எஸ்.சுஜாதா, கே.விஜயன், பென்னட் அந்தோணிராஜ், வழக்கறிஞர் ஏ.பி.சூரியப் பிரகாசம், வழக்கறிஞர் ஓ.எம்.ஆர்.பழனிவேல், பி.பாட்ரிக் ராஜ்குமார், தாம்பரம் எஸ்.நாராயணன், வி.எஸ்.கமலிகா காமராஜர், லெனின் பிரசாத், தலைமையக ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவில் சொர்ணா சேதுராமன், வழக்கறிஞர் டி.செல்வம், வழக்கறிஞர் என்.அருள் பெத்தையா, செ.ராம்மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பெருந்தலைவர் காமராஜர் சேர்த்து வைத்த சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளார்கள். சென்னையில் மட்டும் சத்தியமூர்த்திபவன், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் உள்ளிட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி. இது தவிர அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரசுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இவை தனியார்களின் ஆக்கிரமிப்பில் உள்ளன.
ஏற்கனவே செல்வப்பெருந்தகை சொத்து மீட்பு குழுவில் இருந்த போது 2016-17-ம் ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு சொத்துக்களை அடையாளம் கண்டு அதன் தற்போதைய நிலை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சேகரித்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இப்போது மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவும் ஆய்வு செய்து 3 மாதத்தில் அறிக்கை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரம் இந்த சொத்துக்கள் மீட்பு எப்போது? என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
- பள்ளிக்கரணையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்காமல் இருக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்து பள்ளிக்கரணையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே வருகிற 7-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பள்ளிக்கரணையில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஆய்வுக்கூட்டம் வருகிற 14, 15-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
- தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஆய்வுக்கூட்டம் வருகிற 14, 15-ந்தேதிகளில் கீழ்கண்ட பகுதிகளுக்கு நடைபெறுகிறது.
14-ந்தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், புதுச்சேரி மாநிலம்.
15-ந்தேதி திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான ஆய்வு நடக்கிறது.
இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
- ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் ரூ.2 ஆயிரத்து 200 உயர்ந்து, சவரன் ரூ.74 ஆயிரத்து 320 எனும் இமாலய உச்சத்தை எட்டியது. இது, நடுத்தர, ஏழை, எளிய மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால், மறுநாளே அந்தர் பல்டியாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவு சரிவை சந்தித்தது.
அதாவது, கடந்த 23-ந்தேதி, சவரன் ரூ.2 ஆயிரத்து 200 குறைந்து, மீண்டும் ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, 24-ந்தேதி ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.72 ஆயிரத்து 40-க்கு விற்கப்பட்டது. பின்னர், 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையில் தொடர்ந்து 4 நாட்கள், தங்கம் விலை எந்தவித மாற்றங்களும் இன்றி இருந்தது. இதனை தொடர்ந்து, நேற்று தங்கம் விலை மாற்றமில்லாமல் ஒரு சவரன் ரூ.71,840-க்கும் ஒரு கிராம் ரூ.8,980-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.205 குறைந்து ஒரு கிராம் ரூ.8,775-க்கும் சவரனுக்கு ரூ.1,640 குறைந்து ஒரு சவரன் ரூ.70,200-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
30-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
29-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
28-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520
27-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040
26-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
30-04-2025- ஒரு கிராம் ரூ.111
29-04-2025- ஒரு கிராம் ரூ.111
28-04-2025- ஒரு கிராம் ரூ.111
27-04-2025- ஒரு கிராம் ரூ.112
26-04-2025- ஒரு கிராம் ரூ.112
- நடிகரும், ரேசருமான அஜித் குமார் இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
நடிகரும், ரேசருமான அஜித் குமார் இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தன் கடும் உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும், நாட்டின் முக்கியமான திரைக்கலைஞர்களில் ஒருவராக உயர்ந்து, தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதையும் வென்றிருக்கும் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.






