என் மலர்tooltip icon

    சென்னை

    • பா.ம.க. முன்பைவிட இப்போது பலமாகி வருகிறது.
    • தற்போது நிலவும் சூழலில், பா.ம.க.வின் வாக்காளர்கள் சிதறமாட்டார்கள்.

    சென்னை:

    சென்னை தியாகராய நகரில் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்ற வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில், திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பிறகு, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனகசப்பு என்பது கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கானது. பா.ம.க. மக்கள் இயக்கமாக உருவானது. அனைத்து மக்களுக்கும் போராட கூடிய கட்சி. இதில், பின்னடைவுகள் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக இருவரிடையே சில விஷயங்கள் நடக்கிறது.

    பா.ம.க. முன்பைவிட இப்போது பலமாகி வருகிறது. பா.ம.க. தன்னை தற்போது புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. இயற்கை அந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக நான் உணர்கிறேன். அதற்குள் இருக்கும் நச்சு கிருமிகள் வெளியே சென்றுவிடும். மாற்று அரசியலை பா.ம.க. முன்னெடுக்கும். தற்போது நிலவும் சூழலில், பா.ம.க.வின் வாக்காளர்கள் சிதறமாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பார்த்தார்கள், அது எடுபடவில்லை.
    • இப்போது முருகனின் வேலை தூக்க பார்க்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பார்த்தார்கள், அது எடுபடவில்லை என்பதால் இப்போது முருகனின் வேலை தூக்க பார்க்கிறார்கள். எத்தனை மாநாடு போட்டாலும் இந்த முருகனை கும்பிட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னாடிதான் போய் நிற்க வேண்டும் என்றார். 

    • எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.
    • இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.

    சென்னை:

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்குபின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடப் போவதாக கூறப்படுகிறது.

    இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில், விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியை முன்னிட்டு  நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவான ஃபர்ஸ்ட் ரோர் என்ற தலைப்பில் படக்குழு வெளியிட்டது.

    என் நெஞ்சில் குடியிருக்கும் என ரசிகர்களுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அவர்கள் வருத்தமடைந்தேன்.
    • அதிமுக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அவர்கள் வருத்தமடைந்தேன். மறைந்த செய்தியறிந்து மிகவும்

    அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வால்பாறை தொகுதி மக்களுக்கும், அதிமுக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நீங்கள் அனைவரும் இணைந்து நிகழ்ச்சி நடத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
    • கலைஞர் அவர்கள் திருக்குறள் மீதும், திருவள்ளுவர் மீதும் தீராக் காதல் கொண்டவர்.

    சென்னையில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

    கடந்தாண்டு ஜனவரி முதல் ரூ.80 கோடி மதிப்பில் வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்கும் பணி நடைபெற்றது. கலையரங்கம், சுற்றுச்சுவர், தூண்கள், நுழைவுவாயில் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில், நடைபெறக்கூடிய இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்திருக்கக்கூடிய அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம்.

    இன்று எனக்கு உணர்வுப்பூர்வமான நாள். இந்தி விழாவுக்காக மட்டுமல்ல, இந்த இடத்திற்காகவும் நான் உணர்ச்சிவப்படுகிறேன்.

    உங்களுக்கெல்லாம் மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் வைத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். இந்த பெருமைமிகு வள்ளுவர் கோட்டத்தில் விழா நடக்கிறது.

    நீங்கள் அனைவரும் இணைந்து நிகழ்ச்சி நடத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கலைஞர் அவர்கள் திருக்குறள் மீதும், திருவள்ளுவர் மீதும் தீராக் காதல் கொண்டவர்.

    மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும். நான் எப்போதும் உங்களில் ஒருவன். அரசியலுக்காக, தேர்தலுக்காக இதை செய்யவில்லை உள்ளார்ந்து செய்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.
    • அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.ஜி.ஆர்

    இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான T.K. அமுல்கந்தசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

    கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர்

    அமுல் கந்தசாமி அவர்கள், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர். அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.

    அன்புச் சகோதரர் அமுல்கந்தசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆணை முத்து அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றால் அதற்கு காரணம் இந்த சமூகத்தில் பிறந்ததால்தான்.
    • பட்டியலின மக்களுக்கு 2 விழுக்காடு கூடுதலாக ஒதுக்க வேண்டும்.

    பெரியார் பெருந்தொண்டர் ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பெரியளவில் சாதனை செய்த ஆனைமுத்து அய்யாவிற்கு தமிழக அரசும், மத்திய அரசும் அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றால் அதற்கு காரணம் இந்த சமூகத்தில் பிறந்ததால்தான்.

    ஆணை முத்து அய்யாவிற்கு நாம் சிலையை நிறுவுவோம். சமீபத்தில் நடந்த மாநாடு வன்னியர் மாநாடு அல்ல சமூக நீதிக்கான மாநாடு. அந்த மாநாட்டில் தீர்மானங்கள் சமூக நீதி அடிப்படையிலேயே போடப்பட்ட தீர்மானங்கள்.

    தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு போன்ற மற்ற சமூதாயத்திற்கும் பின்தங்கிய நிலையில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

    பட்டியலின மக்களுக்கு 2 விழுக்காடு கூடுதலாக ஒதுக்க வேண்டும்.

    பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டும், போதையை அழிக்க வேண்டும் என்றெல்லாம் போடப்பட்ட தீர்மானம்தான் வன்னியர் சங்க மாநாடு.

    சமூகநீதியின் மும்மூர்த்திகள் என்றால் தந்தை பெரியார், பேரறிஞர் ஆனை முத்து, மருத்துவ ஐயா ராமதாஸ் அவர்கள். இதை யாரும் மறுக்க முடியாது. இது வரலாறு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
    • தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது.

    ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிலவிவரும் சூழலில் இரு நாடுகளிலும் வசிக்கும் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்ட திட்டம்

    தமிழர்களின் விவரங்களை பெற்று உடனடியாக அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரான், இஸ்ரேல் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது.

    மேலும், உதவி தொடர்பாக 011 24193300 (Land line) 9289516712 (Mobile Number with Whatsapp) என்ற எண்களை அழைக்கலாம் தமிழ்நாடு அரசு

    • ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
    • ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

    தமிழ்நாட்டை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

    ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இதற்கிடையே, குற்றவாளி ஞானசேகரன் யார், யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்ற ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஞானசேகரன் வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரும் என கூறப்படுகிறது.

    • மதிமுக-வை பொறுத்தவரையில் 7 ஆண்டுகள் முடிவடைந்து 8ஆவது ஆண்டாக திமுக கூட்டணியில் இருக்கிறது.
    • கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

    மதிமுக முதன்மை செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான துரை வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதிமுக-வை பொறுத்தவரையில் 7 ஆண்டுகள் முடிவடைந்து 8ஆவது ஆண்டாக திமுக கூட்டணியில் இருக்கிறது. மதவாதத்திற்கு எதிரான கொள்கை கொண்ட கூட்டணியில் சேர்ந்துள்ளோம். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம்.

    கட்சியின் அங்கீகாரத்திற்காக வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் 12 இடங்களில் போட்டியிட வேண்டிய நெருக்கடி உள்ளது. இது கட்சியில் உள்ள அனைத்து நிர்வாகிகளின் ஆசை. ஆனால், தலைமைதான் இது தொடர்பாக முடிவு செய்யும். பொதுக்குழுவில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

    அந்த கூட்டணியில் அழைப்பு விடுக்கிறார்கள். இந்த கூட்டணியில் அழைப்பு விடுக்கிறார்கள் என்ற அரசியல் வியாபாரத்தில் மதிமுக ஈடுபடாது. கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை என்றால் கூட்டணியை விட்டு வெளியே போய்விடுவோம் என்பது கிடையாது.

    பொதுநல நோக்கம் மற்றும் மக்களின் நலன் கருதி திமுக கூட்டணியில் சேர்ந்தோம். இடங்களை விட சுயமரியாதையை எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார்.

    • 7% மக்கள்தொகை கொண்ட உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 0.5% பேருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
    • பின்தங்கிய மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே தி.மு.க. பயன்படுத்துகிறது.

    சென்னையில் சமூகநீதி பேரவை சார்பில் ஆனைமுத்து நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    * பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர் என்ற அடிப்படையில் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது தவறு.

    * 7% மக்கள்தொகை கொண்ட உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 0.5% பேருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

    * ஆனால் வன்னிய சமுதாய மக்களுக்கு 10.5 சதவீடு இடஒதுக்கீடு கொடுத்தால் அது ரத்து செய்யப்படுகிறது.

    * வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தருவோமென நம்பவைத்து முதலமைச்சர் கழுத்தறுத்து விட்டார்.

    * இடஒதுக்கீடு தொடர்பாக திரும்ப திரும்ப வந்து தொந்தரவு செய்ய வேண்டாமென முதலமைச்சர் கூறினார்.

    * பின்தங்கிய மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே தி.மு.க. பயன்படுத்துகிறது.

    * தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் மதுவுக்கு அடிமையாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    * பின்தங்கிய சமூக இளைஞர்களுக்கு நல்ல படிப்பும் வேலைவாய்ப்பும் வேண்டும், அதற்கு முறையாக கணக்கெடுப்பு வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும்.

    இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    நாளை மற்றும் மற்றும் நாளை மறுநாள் வடக்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    ×