என் மலர்
சென்னை
- சென்னை எழும்பூர் டூ செங்கோட்டை இடையே வரும் 6ம் தேதி மற்றும் 7ம் தேதி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- குடமுழுக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.
திருச்செந்தூர் முருகன் கோவில் குடுமுழுக்கு வருகிற 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. குடமுழுக்கை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடமுழுக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.
இந்நிலையில், திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவின்போது ஏற்படும் கூடுதல் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூர் டூ செங்கோட்டை இடையே வரும் 6ம் தேதி மற்றும் 7ம் தேதி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
வரும் 6ம் தேதி சென்னை எழும்பூர்- செங்கோட்டை வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
வரும் 7ம் தேதி செங்கோட்டை- சென்னை எழும்பூர் வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதற்கான முன்பதிவுகள் 04.07.2025 அன்று காலை 08:00 மணிக்கு தொடங்கும் எனவும், பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும்படியும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
- தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 24 காவல் மரணங்கள் அரங்கேறியுள்ளன.
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சந்தை திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 24 காவல் மரணங்கள் அரங்கேறியுள்ளன. திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி வேண்டியும், விசாரணை எனும் பெயரில் காவல்நிலையங்களில் அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களை தடுக்கத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்தும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாளை (4ம் தேதி) மாலை 4 மணியளவில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சந்தை திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்டக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இக்கண்டனப் பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் தலா ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் உதவி பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- குடிசைவாழ் மற்றும் நலிந்த மக்களுக்கு தரமான முறையில் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 125 கோடி ரூபாய் செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப் பட்டு 6.6.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு, சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன.
அதன் இரண்டாம் கட்டமாக, 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டன.
மேலும், அடையாறு, சாஸ்திரி நகரில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டார்.
ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் தலா ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் உதவி பணியாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு நலவாழ்வு மையத்திற்கு வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் சுமார் 20,000 முதல் 25,000 வரை உள்ள மக்களுக்கு காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் 8 மணி வரையிலும் 12 ஒருங்கிணைந்த சுகாதார சேவைகளை "அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின்" கீழ் வழங்குவார்கள்.
மேலும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் மூலம் தரமான 12 அத்தியாவசிய சுகாதார சேவைகளான மகப்பேறு நல சேவைகள், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தை நல சேவைகள், வளர் இளம் பருவத்தினருக்கான சேவைகள், குடும்ப கட்டுப்பாடு சேவைகள், தொற்று நோய்களுக்கான சேவைகள், தொற்றா நோய்களுக்கான சேவைகள், கண், காது, மூக்கு, பல், வாய் மற்றும் தொண்டை நோய்களுக்கான சேவைகள், முதியோர் மற்றும் நோய் ஆதரவு நல சேவைகள், அவசர மருத்துவ சிகிச்சை சேவைகள், மனநல சேவைகள் மற்றும் யோகா போன்ற பல்வேறு நலவாழ்வு சேவைகள் நகர்ப்புற மக்கள், குறிப்பாக குடிசைவாழ் மற்றும் நலிந்த மக்களுக்கு தரமான முறையில் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு, சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா, துணை மேயர் மகேஷ் குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நீதிபதி ஜான் சுந்தர்லால் 2-வது நாளாக இன்று விசாரணை நடத்தி வருகிறார்.
- வருகிற 8-ந்தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் விரிவான அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார், காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை எழுந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, அஜித்குமார் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நீதி விசாரணை நடத்தும் வகையில் மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான்சுந்தர் லால் சுரேசை நியமித்துள்ளது. அவர் முழுமையான விசாரணை நடத்தி வருகிற 8-ந்தேதி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதி ஜான் சுந்தர்லால் 2-வது நாளாக இன்று விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த விசாரணை முடிவில் வருகிற 8-ந்தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் விரிவான அறிக்கையை தாக்கல் செய்கிறார். அதன் பின்னரே இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், அஜித் குமார் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணையை எடுத்துள்ளது.
சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஐ.ஜி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.
- தமிழகக் காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்திரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விட்டாலும் தமிழகக் காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்!
சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க, சாதி - மதம் - அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்!
இதற்காக அடுத்த 45 நாட்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - பாராளுமன்ற உறுப்பினர்கள் - மூத்த முன்னோடிகள் என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மருத்துவ பரிசோதனையில் தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்ததாக என கிருஷ்ணா தரப்பு வாதம்.
- போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் அளிப்பதாக ஸ்ரீகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஸ்ரீகாந்த், கிருஷ்ணா தரப்பில் வாதிடப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்தது என கிருஷ்ணா தரப்பும், போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் அளிப்பதாக ஸ்ரீகாந்த் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
- விவசாயிகளின் வேதனைக் குரல் காதில் விழாத அளவிற்கு மமதையில் இந்த ஆட்சியாளர்கள் சுற்றித் திரிகிறார்கள்.
- தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட கடைமடை பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பகுதிகளில் உள்ள பாசனக் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டு, ஜூன் மாதம் 12-ம் தேதியன்று, மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் குறித்த காலத்தில் கடைமடை பகுதிகளைச் சென்றடையும்.
இந்த ஆண்டு காவிரி படுகைகளில் எந்தவித தூர்வாரும் பணிகளையும் செய்யாமல், வீண் ஜம்பத்திற்காகவும், வெற்று விளம்பரத்திற்காகவும் முதலமைச்சர் ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்தி ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து விட்டார். அந்தத் தண்ணீர் காவிரி படுகை முழுவதும் தடையின்றி பயணம் செய்து கடைமடை வரைச் செல்லும் நிலை உள்ளதா? என்பதை சிந்தித்துப் பார்க்காமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டது டெல்டா பாசன விவசாயிகளைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு 20 நாட்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் டெல்டா மாவட்ட கடைமடை பகுதிகளுக்குக் காவிரி தண்ணீர் சென்றடையாமல், கடைமடை விவசாயிகள் நடவுப் பணிகளை உரிய நேரத்தில் மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஒன்றியங்கள்; நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு, வேதாரண்யம் ஒன்றியங்கள்; தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் ஒன்றியங்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கு இன்னும் காவிரி தண்ணீர் சென்று சேரவில்லை.
விவசாயிகளின் வேதனைக் குரல் காதில் விழாத அளவிற்கு மமதையில் இந்த ஆட்சியாளர்கள் சுற்றித் திரிகிறார்கள். கடல் முகத்துவாரங்களில் வெங்காயத் தாமரை புதராக மண்டிக் கிடப்பதால் விவசாயிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர். பாசன மதகுகள் மற்றும் கதவணைகள் பழுதுபார்க்கப்படாததால் பாசன நீரைத் தேவைக்கேற்ப திறக்க முடியவில்லை.
ஆசிய வளர்ச்சி வங்கி, கடல் முகத்துவார சீரமைப்புக்காக வழங்கும் நிதியைப் பெற நிர்வாகத் திறனற்ற தி.மு.க. ஆட்சியாளர்கள் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்று விவசாய அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. நிர்வாகத் திறனற்று செயல்படும் தி.மு.க. ஸ்டாலின் மாடல் ஆட்சியில், டெல்டா பாசன விவசாயிகள் இந்த ஆண்டு முழு அளவில் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையை ஏற்படுத்திய நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் கடலில் கலக்கும் இச்சூழ்நிலையில், ஏன் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை. உரிய முறையில் தண்ணீரைக் கொண்டு சென்று விவசாயிகளிடம் சேர்ப்பதில் இந்த அரசுக்கு என்ன சிக்கல்? கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாததால், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட கடைமடை பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் உடனடியாக தடையில்லாமல் தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கும் இந்த பொதுக்கூட்டங்கள் த.வெ.க.வின் தேர்தல் களத்துக்கு அடித்தளமாக இருக்கும்.
- த.வெ.க. செயற்குழு கூட்டம் நாளை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் நடைபெற இருக்கிறது.
சென்னை:
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் பலப்பரீட்சையில் வென்று கோட்டையை பிடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் மல்லு கட்ட தொடங்கி உள்ளன.
2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் இதுவரை நடந்த தேர்தல்களை விட மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த தேர்தல் ஏற்படுத்தி இருக்கிறது.
எல்லா கட்சிகளும் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது? வாக்குகளை எப்படி அறுவடை செய்வது என்பது பற்றி திட்டம் தீட்டி வருகின்றனர். இவை எதையும் கண்டு கொள்ளாமல் கோட்டையை பிடிக்க போவது நான்தான் என்று விஜய் துணிச்சலோடு பயணித்து வருகிறார்.
அவர் எந்த நம்பிக்கையில் இப்படி சொல்கிறார். தேர்தலை சந்திப்பதற்கு அவர் கையில் எடுக்க போகும் வியூகங்கள் என்ன என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அதிரடியாக ஒவ்வொரு கட்டத்திலும் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்களின் பார்வையை அவரது பக்கம் இழுத்து வருகிறது.
திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கி இறந்தது தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. இதற்காக எல்லா கட்சிகளும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளன. த.வெ.க. தலைவர் விஜய் இப்படி திடீரென்று காவலாளி அஜித்குமார் வீட்டில் போய் நிற்பார் என்பதை எந்த அரசியல் தலைவரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
பொதுவாக மக்கள் ஆதரவை பெறுவதற்காக இந்த மாதிரி நேரங்களில் முன்கூட்டியே தெரிவித்து விட்டு செல்வது தான் அரசியல் கட்சிகளின் வாடிக்கை. அதே பாணியில் விஜய்யும் முன் கூட்டியே தெரிவித்து அங்கு சென்றிருந்தால் மிகப்பெரிய அளவில் ஊடக வெளிச்சம் கிடைத்திருக்கும். ஆனால் அதைப் பற்றி அவர் கண்டு கொள்ளவில்லை.
தனது வீட்டில் இருந்து எங்கே கிளம்புகிறார் என்று யாருக்கும் தெரியாத அளவிற்கு முகத்தைக் கூட வெளிக்காட்டாமல் புறப்பட்டு சென்றுள்ளார். பொதுச்செயலாளர் என்.ஆனந்தை மட்டும் உடன் அழைத்து சென்றுள்ளார்.
திடுதிப்பென்று திருப்புவனம் சென்று அஜித்குமார் வீட்டில் போய் நின்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதி உதவி அளித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதே போல் தேர்தல் களத்தை சந்திப்பதற்கு விஜய் பல வியூகங்கள் வகுப்பார் என்று நம்பப்படுகிறது.
அந்த வகையில் த.வெ.க. கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கிராமங்களில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் த.வெ.க. சார்பில் நடைபெற இருக்கிறது.
த.வெ.க.வில் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல வாரியாக நகரங்கள், கிராமங்கள் என முக்கிய இடங்களில் பொதுக்கூட்டம், தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்தி அதன் வாயிலாக த.வெ.க. திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை விஜய் உத்தரவின் பேரில் கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். கூட்டத்தில் 2026 தேர்தலில் த.வெ.க.வின் கொள்கைகள், மக்கள் பணியில் கட்சியின் முழு ஈடுபாடு, மற்ற அரசியல் கட்சிகளில் இருந்து வேறுபட்டு த.வெ.க. செயல்படுவது, ஆளுங்கட்சியினரின் குறைபாடுகளை மக்களுக்கு எடுத்து சொல்லி ஆதரவு பெறுவது, தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு விஜய்யின் தனது தொலை நோக்கு திட்டங்கள் குறித்து விளக்குகிறார்கள். த.வெ.க.வை பொறுத்தவரை 2026 தேர்தலுக்கான முதற்கட்ட பிரசார மேடையாக இந்த பொதுக்கூட் டங்கள் அமைய இருக்கிறது. தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கும் இந்த பொதுக்கூட்டங்கள் த.வெ.க.வின் தேர்தல் களத்துக்கு அடித்தளமாக இருக்கும்.
இந்நிலையில் த.வெ.க. செயற்குழு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் நடைபெற இருக்கிறது. கூட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்க இருக்கின்றனர். மேலும் 2026 தேர்தல் திட்டங்கள், சுற்றுப் பயணம், மக்கள் நல பணிகள் மற்றும் அடிப்படை பிரச்சனைகள், தொகுதி பிரச்சனைகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கிறது. தொடர்ந்து கூட்டத்தில் விஜய் அதிரடி அரசியல் பேசுவார் என்பதால் கூட்டத்திற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
- மின் கசிவை சரி செய்வதில் அரசு காட்டிய அலட்சியத்தின் விளைவாகவே ஒரு அப்பாவி சிறுவன் பலியாகியுள்ளான்.
- “நாடு போற்றும் நல்லாட்சி” என திமுக-வினர் விளம்பரப்படுத்திக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை திருவொற்றியூர் பகுதியில் தேங்கிக் கிடந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 17 வயது பள்ளி மாணவன் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழந்த அம்மாணவனின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பகுதியில் ஏற்கனவே இரண்டு பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளதாகக் கூறும் நிலையில், மின் கசிவை சரி செய்வதில் அரசு காட்டிய அலட்சியத்தின் விளைவாகவே ஒரு அப்பாவி சிறுவன் பலியாகியுள்ளான். ஒருநாள் மழைக்கே நீர் தேங்குமளவிற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும், பல நாள் புகாரளித்தும் ஒரு சிறு மின்கசிவைக் கூட சீர்படுத்த முடியாத நிர்வாகத்தையும் வைத்துக்கொண்டு "நாடு போற்றும் நல்லாட்சி" என திமுக-வினர் விளம்பரப்படுத்திக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.
எனவே, மாணவனின் மரணத்திற்கு ஆளும் அரசு முழுப் பொறுப்பேற்றுக் கொண்டு, அம்மாணவனின் குடும்பத்தாருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டு தொகையாக அறிவிப்பதுடன், சென்னை மாநகரில் முறையான மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த மே 4-ந்தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
- நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ந்தேதி நடந்தது.
அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 2 மாணவர்களும், கே.கே நகர் பத்ம ஷேசாத்ரி பள்ளியைச் சேர்ந்த 1 மாணவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், கடந்த மே 4-ந்தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
வழக்கு விசாரணையின்போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிய வந்ததாகவும், இந்த மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்குகளை விசாரித்த நீதிபதி, மத்திய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது என்றும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து ஜூன் 4-ந்தேதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து 16 பேரும் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது எனக்கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- 5 கேள்விகள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தை முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
ஜூலை 3-ந்தேதி முதல் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது வீடு அருகே உள்ள குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் செயல்பாடு, மத்திய அரசின் செயல்பாடு குறித்து கேள்விகள் கேட்டு பரப்புரை தொடங்கினார். 5 கேள்விகள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.வினர் அவரவர் தொகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களை சந்திக்கின்றனர்.






