என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
    X

    208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    • ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் தலா ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் உதவி பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • குடிசைவாழ் மற்றும் நலிந்த மக்களுக்கு தரமான முறையில் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 125 கோடி ரூபாய் செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப் பட்டு 6.6.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு, சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன.

    அதன் இரண்டாம் கட்டமாக, 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டன.

    மேலும், அடையாறு, சாஸ்திரி நகரில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டார்.

    ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் தலா ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் உதவி பணியாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு நலவாழ்வு மையத்திற்கு வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் சுமார் 20,000 முதல் 25,000 வரை உள்ள மக்களுக்கு காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் 8 மணி வரையிலும் 12 ஒருங்கிணைந்த சுகாதார சேவைகளை "அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின்" கீழ் வழங்குவார்கள்.

    மேலும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் மூலம் தரமான 12 அத்தியாவசிய சுகாதார சேவைகளான மகப்பேறு நல சேவைகள், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தை நல சேவைகள், வளர் இளம் பருவத்தினருக்கான சேவைகள், குடும்ப கட்டுப்பாடு சேவைகள், தொற்று நோய்களுக்கான சேவைகள், தொற்றா நோய்களுக்கான சேவைகள், கண், காது, மூக்கு, பல், வாய் மற்றும் தொண்டை நோய்களுக்கான சேவைகள், முதியோர் மற்றும் நோய் ஆதரவு நல சேவைகள், அவசர மருத்துவ சிகிச்சை சேவைகள், மனநல சேவைகள் மற்றும் யோகா போன்ற பல்வேறு நலவாழ்வு சேவைகள் நகர்ப்புற மக்கள், குறிப்பாக குடிசைவாழ் மற்றும் நலிந்த மக்களுக்கு தரமான முறையில் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு, சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா, துணை மேயர் மகேஷ் குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×