என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

10 ஆயிரம் கிராமங்களில் கூட்டம் நடத்தி பிரசாரம்- விஜய் உத்தரவை ஏற்று த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
- தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கும் இந்த பொதுக்கூட்டங்கள் த.வெ.க.வின் தேர்தல் களத்துக்கு அடித்தளமாக இருக்கும்.
- த.வெ.க. செயற்குழு கூட்டம் நாளை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் நடைபெற இருக்கிறது.
சென்னை:
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் பலப்பரீட்சையில் வென்று கோட்டையை பிடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் மல்லு கட்ட தொடங்கி உள்ளன.
2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் இதுவரை நடந்த தேர்தல்களை விட மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த தேர்தல் ஏற்படுத்தி இருக்கிறது.
எல்லா கட்சிகளும் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது? வாக்குகளை எப்படி அறுவடை செய்வது என்பது பற்றி திட்டம் தீட்டி வருகின்றனர். இவை எதையும் கண்டு கொள்ளாமல் கோட்டையை பிடிக்க போவது நான்தான் என்று விஜய் துணிச்சலோடு பயணித்து வருகிறார்.
அவர் எந்த நம்பிக்கையில் இப்படி சொல்கிறார். தேர்தலை சந்திப்பதற்கு அவர் கையில் எடுக்க போகும் வியூகங்கள் என்ன என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அதிரடியாக ஒவ்வொரு கட்டத்திலும் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்களின் பார்வையை அவரது பக்கம் இழுத்து வருகிறது.
திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கி இறந்தது தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. இதற்காக எல்லா கட்சிகளும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளன. த.வெ.க. தலைவர் விஜய் இப்படி திடீரென்று காவலாளி அஜித்குமார் வீட்டில் போய் நிற்பார் என்பதை எந்த அரசியல் தலைவரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
பொதுவாக மக்கள் ஆதரவை பெறுவதற்காக இந்த மாதிரி நேரங்களில் முன்கூட்டியே தெரிவித்து விட்டு செல்வது தான் அரசியல் கட்சிகளின் வாடிக்கை. அதே பாணியில் விஜய்யும் முன் கூட்டியே தெரிவித்து அங்கு சென்றிருந்தால் மிகப்பெரிய அளவில் ஊடக வெளிச்சம் கிடைத்திருக்கும். ஆனால் அதைப் பற்றி அவர் கண்டு கொள்ளவில்லை.
தனது வீட்டில் இருந்து எங்கே கிளம்புகிறார் என்று யாருக்கும் தெரியாத அளவிற்கு முகத்தைக் கூட வெளிக்காட்டாமல் புறப்பட்டு சென்றுள்ளார். பொதுச்செயலாளர் என்.ஆனந்தை மட்டும் உடன் அழைத்து சென்றுள்ளார்.
திடுதிப்பென்று திருப்புவனம் சென்று அஜித்குமார் வீட்டில் போய் நின்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதி உதவி அளித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதே போல் தேர்தல் களத்தை சந்திப்பதற்கு விஜய் பல வியூகங்கள் வகுப்பார் என்று நம்பப்படுகிறது.
அந்த வகையில் த.வெ.க. கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கிராமங்களில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் த.வெ.க. சார்பில் நடைபெற இருக்கிறது.
த.வெ.க.வில் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல வாரியாக நகரங்கள், கிராமங்கள் என முக்கிய இடங்களில் பொதுக்கூட்டம், தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்தி அதன் வாயிலாக த.வெ.க. திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை விஜய் உத்தரவின் பேரில் கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். கூட்டத்தில் 2026 தேர்தலில் த.வெ.க.வின் கொள்கைகள், மக்கள் பணியில் கட்சியின் முழு ஈடுபாடு, மற்ற அரசியல் கட்சிகளில் இருந்து வேறுபட்டு த.வெ.க. செயல்படுவது, ஆளுங்கட்சியினரின் குறைபாடுகளை மக்களுக்கு எடுத்து சொல்லி ஆதரவு பெறுவது, தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு விஜய்யின் தனது தொலை நோக்கு திட்டங்கள் குறித்து விளக்குகிறார்கள். த.வெ.க.வை பொறுத்தவரை 2026 தேர்தலுக்கான முதற்கட்ட பிரசார மேடையாக இந்த பொதுக்கூட் டங்கள் அமைய இருக்கிறது. தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கும் இந்த பொதுக்கூட்டங்கள் த.வெ.க.வின் தேர்தல் களத்துக்கு அடித்தளமாக இருக்கும்.
இந்நிலையில் த.வெ.க. செயற்குழு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் நடைபெற இருக்கிறது. கூட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்க இருக்கின்றனர். மேலும் 2026 தேர்தல் திட்டங்கள், சுற்றுப் பயணம், மக்கள் நல பணிகள் மற்றும் அடிப்படை பிரச்சனைகள், தொகுதி பிரச்சனைகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கிறது. தொடர்ந்து கூட்டத்தில் விஜய் அதிரடி அரசியல் பேசுவார் என்பதால் கூட்டத்திற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.






