என் மலர்
சென்னை
- பொங்கல் போனஸ் வழங்க ரூ.183.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தொகுப்பு ஊதியம், காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ரூ.1000 மிகை ஊதியம் வழங்கப்படும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2024-25-ம் ஆண்டிற்கான C,D பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, C,D பிரிவை சேர்ந்த ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 மிகை ஊதியமாகவும் C,D பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரூ.1000 மிகை ஊதியமாகவும் வழங்கப்படுகிறது.
இதற்காக C,D பிரிவு ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர், முன்னாள் கிராம அலுவலருக்கு பொங்கல் போனஸ் வழங்க ரூ.183.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொகுப்பு ஊதியம், காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ரூ.1000 மிகை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தப் புத்தாண்டு எப்படி இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்கள்.
- பலர் தமிழக வெற்றிக்கழக கொடிகளோடு திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.
சென்னை மாநகரப் பகுதிகளில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களும், இளம் பெண்களும் புது வருடம் பிறந்தவுடன் மிகுந்த உற்சாகத்தோடு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இளம் பெண்களும், இளைஞர்களும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களிடம் நள்ளிரவில் பத்திரிகையாளர்கள் இந்தப் புத்தாண்டு எப்படி இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த இளம்பெண்கள் பலர் புத்தாண்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வர வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று கூறினார்கள்.
பலர் தமிழக வெற்றிக்கழக கொடிகளோடு திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது.
சென்னை:
இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கிய நிலையில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. ஆங்கில புத்தாண்டை மக்கள் மழையில் நனைந்த படி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் 1 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மட்டும் தான் கடன் வாங்கியதாக தி.மு.க. அரசு கட்டமைத்த பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடன்களை வாங்கிக் குவித்தது தி.மு.க. அரசு தான்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராம தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ. 3 லட்சத்து 86,797 கோடி கடன் வாங்கிக் குவித்துள்ளது. அதே நேரத்தில் மூலதனச் செலவாக ரூ. 1 லட்சத்து 66,754 கோடியை மட்டுமே செய்திருக்கிறது. இதன் மூலம் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மட்டும் தான் கடன் வாங்கியதாக தி.மு.க. அரசு கட்டமைத்த பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடன்களை வாங்கிக் குவித்தது தி.மு.க. அரசு தான்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட வளர்ந்து விட்டோம் என்று கூறிக்கொள்ளும் தி.மு.க. அரசு, நிதி நிர்வாகத்தில் உத்தரப்பிரதேச அரசிடம் படுதோல்வி அடைந்திருக்கிறது.
உத்தரப் பிரதேசத்திடம் நிதிநிர்வாகம் குறித்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய தி.மு.க. அரசு, தமிழகத்தின் வரிப் பணம் உத்தரப் பிரதேசத்திற்கு செல்வது தான் இதற்கு காரணம் என அடிமுட்டாள்தனமான பொய்யை கூறுகிறது.
தி.மு.க. அரசு கடந்த 4 ஆண்டுகளில் வாங்கிக் குவித்த கடன்களின் விளைவாக நடப்பாண்டில் வட்டியாக மட்டும் ரூ.70,754 கோடி செலுத்த வேண்டியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. செலுத்திய வட்டியை மட்டும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் வழங்க முடியும். ஆனால், ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.6 லட்சம் கடனை தி.மு.க. அரசு வாங்கி வைத்திருக்கிறது. மோசமான நிதி நிர்வாகத்தால் தங்களை அடகு வைத்திருக்கும் தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.
- சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் 19 ஆயிரம் போலீசார் புத்தாண்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
- நகர் முழுவதும் 426 இடங்களில் தடுப்புகள் அமைத்து சட்டம்-ஒழுங்கு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் ஒருங்கிணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான 'ஹாட் ஸ்பாட்'டான மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ந்தேதி இரவு மக்கள் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இரவு 8 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் நேற்று இரவு 10 மணிக்கு மேலாகியும் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. இரவு 12 மணியை நெருங்கியபோது மக்கள் கூட்டம் ஓரளவு காணப்பட்டது.
போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் எதிரே உள்ள மணிக்கூண்டின் கடிகார முள் 12 மணியை தொட்டவுடன், 'ஹாப்பி நியூ இயர்' என்று வாழ்த்து கோஷங்களை எழுப்பியும், 'கேக்' வெட்டியும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
மெரினா கடற்கரையில் வழக்கமான ஆட்டம்-பாட்டம்- கொண்டாட்டம் குறைந்திருந்த நிலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் மக்கள் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் 19 ஆயிரம் போலீசார் புத்தாண்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் போலீசார் அதிகளவில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 'டிரோன்' கேமராக்கள் மூலமாகவும் மக்கள் கூட்டத்தை கண்காணித்தனர். மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டி செல்பவர்கள், வீலிங் சாகசம் செய்பவர்கள், மதுபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக நகர் முழுவதும் 426 இடங்களில் தடுப்புகள் அமைத்து சட்டம்-ஒழுங்கு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் ஒருங்கிணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டமாக அமையும் வகையில் சென்னையில் உள்ள 25 மேம்பாலங்களும் நேற்றிரவு 10 மணி முதல் மூடப்பட்டன. புத்தாண்டு தினமான இன்று கடற்கரைகள், சுற்றுலாத்தலங்களில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் இன்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக சென்னை மாநகரில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் விபத்துகளோ, குற்ற செயல்களோ எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றிரவு சென்னையில் எந்த இடத்திலும் விபத்தால் உயிரிழப்பு, குற்றச்சம்பவங்கள் நடக்கவில்லை என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
உரிய முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்ததால் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று சென்னை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்துள்ளது.
- வெள்ளி விலை இன்று குறைந்து உள்ளது.
தங்கம், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்திருந்தது. அதன்படி, தங்கம் கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது.
பின்னர் சற்று விலை குறைந்து மீண்டும் 22-ந்தேதிக்கு பிறகு ரூ.1 லட்சத்துக்கும் குறையாமல் எகிறியது. தொடர்ந்து விலை அதிகரித்து, கடந்த மாதம் 27-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800 என்ற விலையிலும், அதேநாளில் வெள்ளி ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் என்ற விலையிலும் புதிய உச்சத்தை எட்டிப் பிடித்தது.
மேலும் விலை அதிகரித்துவிடுமோ? என அச்சம் கொண்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. கடந்த 29-ந்தேதியில் இருந்து விலை குறைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக 3-வது நாளாக நேற்றும் விலை சரிந்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம், மாலை நேர நிலவரப்படி மேலும் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் என மொத்தம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 480-க்கும், ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்துள்ளது.
இந்நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.12,440-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.92,520-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.256-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
31-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,840
30-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800
29-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,160
28-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800
27-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800
26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
31-12-2025- ஒரு கிராம் ரூ.257
30-12-2025- ஒரு கிராம் ரூ.258
29-12-2025- ஒரு கிராம் ரூ.281
28-12-2025- ஒரு கிராம் ரூ.285
27-12-2025- ஒரு கிராம் ரூ.285
26-12-2025- ஒரு கிராம் ரூ.254
- சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்கு, ஒரு சில நிறுத்தங்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டு உள்ளது.
- மதுரையில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரையில் இருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்று (1-ந்தேதி) முதல் சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், திருச்சி-திண்டுக்கல் டெமு ரெயில், மதுரை-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில், எழும்பூர்-நெல்லை வந்தே பாரத் ரெயில்களுக்கான நேர அட்டவணை மாற்றப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்கு (வண்டி எண். 20665), ஒரு சில நிறுத்தங்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி, புதிய நேர அட்டவணைபடி திருச்சிக்கு இரவு 7 மணிக்கும், திண்டுக்கல் 7.58 மணிக்கும், மதுரை 8.45 மணிக்கும், விருதுநகர் 9.20 மணிக்கும், கோவில்பட்டி 9.48 மணிக்கும், நெல்லை இரவு 11 மணிக்கு சென்றடையும்.
* சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635) புதிய நேர அட்டவணைப்படி, எழும்பூரில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் 1.40, செங்கல்பட்டு 2.08, விழுப்புரம் மாலை 3.30, விருத்தாச்சலம் 4.14, அரியலூர் 4.49, ஸ்ரீரங்கம் 5.30, திருச்சி 6.05, மணப்பாறை 6.39, திண்டுக்கல் இரவு 7.17, சோழவந்தான் 7.49, மதுரை இரவு 8.35 மணிக்கு சென்றடையும்.
* மதுரையில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22624), மதுரையில் இருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. புதிய நேர அட்டவணைப்படி, மதுரையில் இருந்து இரவு 8.35 மணிக்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும்.
* திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் டெமு ரெயில் (76835), புதிய நேர அட்டவணைப்படி, திருச்சியில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு, பூங்குடி மாலை 6.44, கொளத்தூர் 6.53, சமுத்திரம் இரவு 7.01, மணப்பாறை 7.13, செட்டியபட்டி 7.23, வையம்பட்டி 7.30, கல்பட்டிச்சத்திரம் 7.39, அய்யலூர் 7.49, வடமதுரை 7.59, தாமரைபாடி 8.10, திண்டுக்கல் ஜங்சன் இரவு 9.05 மணிக்கும் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
- கடந்த 2 மாதங்களாக வணிக சிலிண்டர் விலை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னை:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
அந்த வகையில், ஜனவரி மாதத்திற்கான வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 110 ரூபாய் உயர்ந்து ரூ.1,849.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக வணிக சிலிண்டர் விலை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- ஆங்கில புத்தாண்டை மக்கள் மழையில் நனைந்த படி கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னை:
இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கிய நிலையில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. ஆங்கில புத்தாண்டை மக்கள் மழையில் நனைந்த படி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கரூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த 2026ஆம் ஆண்டு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்பதை மக்கள் நிரூபிக்கப் போவது நிச்சயம்.
- வளமான, நலமான, பலமான தமிழகம் ஒளிரப் போகிறது.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு நிறைவடைந்து 2026-ம் ஆண்டு பிறந்துள்ளது.
புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர்.
புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும், ஆங்கில புத்தாண்டையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
தமிழக அரசியலின் நேர்மைமிகு நம்பிக்கை ஒளியாய், நாளைய தலைமுறைகளின் தலைசிறந்த வழியாய் நாமே மாறுவோம்.
புதிதாகப் பிறக்கும் இந்த 2026ஆம் ஆண்டு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்பதை மக்கள் நிரூபிக்கப் போவது நிச்சயம்.
வாகை சூடும் வரலாறு திரும்பப் போகிறது.
வளமான, நலமான, பலமான தமிழகம் ஒளிரப் போகிறது.
மக்களுடன் மக்களாக இணைந்து
அதை நம் தமிழக வெற்றிக் கழகம்தான் நிகழ்த்திக் காட்டப் போகிறது.
வெற்றிச் சரித்திரம் படைக்கப் போகும் அந்த உறுதியை மனதிலும் செயலிலும் ஏற்று
இப்புத்தாண்டை வரவேற்போம்.
அனைவருக்கும் ஒளிமிக்க ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
- ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்தார்.
- புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் என தெரிவித்தார்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகளை அக்கட்சி தலைவர் விஜய் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தில் அணிகளின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணியில் பின்வரும் முறையில் நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
பொறுப்பாளர்:
ராஜ்மோகன், துணைப் பொதுச் செயலாளர்
ஒருங்கிணைப்பாளர்கள்:
எஸ்.ரமேஷ், செங்கல்பட்டு
ஜே.கேத்ரின் பாண்டியன், திருநெல்வேலி
தேசியச் செய்தித் தொடர்பாளர்கள்:
பெலிக்ஸ் ஜெரால்டு, சென்னை
வழக்கறிஞர் எம்.சத்தியகுமார், சென்னை
எம்.கே.தேன்மொழி பிரசன்னா, மதுரை
மாநிலச் செய்தித் தொடர்பாளர்கள்:
முகில் வீரப்பன் (எ) மு. சு.சிவகுமார். புதுக்கோட்டை
அமலன் சாம்ராஜ் பிரபாகர், சென்னை
க.சி.தி. அனந்தஜித் மகியா. திருவள்ளூர்
மு. ஞான செல்வின் இன்பராஜ், செங்கல்பட்டு
முகமது இப்ராஹிம், சென்னை
ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், சென்னை
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து. எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின்படியும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் புதிய நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்வார்கள். கட்சியினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
- புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.
சென்னை:
நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.
தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு நிறைவடைந்து 2026-ம் ஆண்டு பிறந்துள்ளது.
புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
'மாலைமலர்' சார்பில் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.






