என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக ஸ்டாலின"

    • போதையில் இருந்த நபர்கள் சிலர் பள்ளிப் பேருந்தைத் தாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது
    • பேருந்து மீதான தாக்குதலில் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் அதற்கு யார் பொறுப்பு?

    எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மயிலாடுதுறை மாவட்டம் அரசலங்குடி பகுதியில் போதையில் இருந்ததாகக் கூறப்படும் நபர்கள் சிலர் பள்ளிப் பேருந்தைத் தாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    அதேபோல், நாகை மாவட்டம் செல்லூர் கிழக்கு கடற்கரைச் சாலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வி.ஏ.ஓ ராஜாராமன் என்பவர் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

    ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், பட்டப்பகலில், நடுரோட்டில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுவது தொடர்கதையாகியுள்ளது.

    பேருந்து மீதான தாக்குதலில் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் அதற்கு யார் பொறுப்பு?

    ஒரு பள்ளிப் பேருந்து கூட சாலையில் பாதுகாப்பாக செல்ல முடியாத அவல நிலைக்கு பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்?

    யார், எங்கே, எப்போது சடலமாகக் கிடப்பார்கள்? என்று தெரியாத அவல நிலை தான் திமுக ஆட்சியின் "சட்டம்- ஒழுங்கு".

    குற்றவாளிகளைப் பிடிக்கத் திணறுவது, பிடித்தாலும் அவர்களை சிறையில் வைத்திருக்க வக்கில்லாமல் வெளியே அனுப்பி, இன்னும் பலக் குற்றங்களை அவர்கள் செய்வதை கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது- இப்படி நடத்தப்படும் ஸ்டாலின் ஆட்சியைக் கண்டு எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்?

    குற்றவாளிகளை குஷியாக்கி, மக்களை பயத்தில் ஆழ்த்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்த திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    மயிலாடுதுறை பள்ளிப் பேருந்து மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீதும், திருவாய்மூர் வி.ஏ.ஓ-வாக இருந்த ராஜாராமன் மரணத்தை விசாரித்து, அதில் தொடர்புள்ளோர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வருகிறார்.
    • உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

    உலகின் முன்னணி ஸ்டார்ட் அப் மையங்களுள் ஒன்றாக தமிழகத்தை நிலை நிறுத்தவும், உலகளாவிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைக்கவும், புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதத்திலும் நாட்டில் முதல் முறையாக கோவையில் கொடிசியா அரங்கில் உலக புத்தொழில் மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் நடக்கிறது.

    இந்த மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வருகிறார்.

    கோவை விமான நிலையத்தில் அவருக்கு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.

    வரவேற்பு முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் விமான நிலையத்தில் இருந்து கொடிசியா வளாகத்திற்கு வருகிறார். அங்கு உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

    இந்த உலக புத்தொழில் மாநாட்டில், 39 நாடுகளை சேர்ந்த 264 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இடம் பெறுகிறார்கள். மத்திய அரசின் 10 துறைகள், 10 மாநிலங்களை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து 15 அரசுத்துறைகளும் பங்கேற்கின்றன.

    50-க்கும் மேற்பட்ட தமிழக பிராண்டுகள், 150-க்கும் மேற்பட்ட சர்வதேச, தேசிய உரையாளர்கள், 75-க்கும் மேற்பட்ட தொழில் வளர் மையங்கள், 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். வளாகத்தில் 750 அரங்குகள் அமைக்கப்பட்டு 315 நிகழ்ச்சிகள் நடக்கிறது. 2 நாட்களில் மொத்தம் 11 அமர்வுகளில் உரையும், விவாதமும் நடக்கிறது.

    ஸ்பாட் லைட் என்ற பெயரில் 117 அமர்வுகள் நடக்கிறது. தலா 7 நிமிடங்களில் வெவ்வேறு இடங்களில் நடக்கும் இந்த அமர்வுகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் சார்பில் உரை நிகழ்த்தப்படுகிறது.

    புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து விட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் கோல்டு வின்ஸ் பகுதிக்கு செல்கிறார். அங்கு உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கி.மீ தூரத்திற்கு ரூ.1791.22 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தென்னிந்தியாவின் மிகப் பெரிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் காரில் மேம்பாலத்தில் பயணித்தபடி உப்பிலிபாளையம் வர உள்ளார். அங்கிருந்து அரசு கலைக்கல்லூரிக்கு செல்கிறார்.

    அரசு கல்லூரி வளாகத்தில் கோவை மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை மற்றும் உயிர் அமைப்பு சார்பில் சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் விதமாக நான் உயிர் காவலன் என்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக விபத்தில்லா கோவை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

    அதன்பின்னர் அங்கிருந்து கார் மூலமாக சிட்கோ தொழிற்பேட்டை குறிச்சி வளாகத்திற்கு முதல்-அமைச்சர் செல்கிறார். அங்கு ரூ.126 கோடியில் 2.46 ஏக்கரில் 8.5 லட்சம் சதுரடி பரப்பளவில் அமைய உள்ள தங்க நகை பூங்காவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

    கோவை நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு முதல்-அமைச்சர் மதியம் 2.30 மணிக்கு விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை திரும்புகிறார்.

    முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதல்-அமைச்சர் விமான நிலைய பகுதியில் இருந்து கொடிசியா வளாகம் செல்லும் வரை பகுதி மற்றும் கோல்டுவின்ஸ், உப்பிலிபாளையம் அரசு கலைக்கல்லூரி, குறிச்சி பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு நாளை கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

    • இஸ்ரோ விஞ்ஞானிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
    • தமிழ்நாட்டின் வேர்கள் நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை என்றார்.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் உள்ளிட்ட மூத்த விஞ்ஞானிகளைச் சந்தித்தார்.

    இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணனுடன் ஒரு முக்கிய சந்திப்பை மேற்கொண்டேன்.

    தமிழ்நாடு அரசுப் பள்ளியிலிருந்து சென்று இந்திய விண்வெளி நிறுவனத்தின் உயர் பொறுப்புக்கு வந்துள்ள வி.நாராயணனின் பயணமானது நிறையவே பேசக்கூடியது

    பொதுக் கல்வியால் எட்டக்கூடிய உயரங்களை அவர் உள்ளடக்கி உள்ளார். தமிழ்நாட்டின் வேர்கள் நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை என பதிவிட்டுள்ளார்.

    • தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
    • இந்தக் கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

    சென்னை:

    தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 6-30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.

    தொகுதி மறு சீரமைப்பு, புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    • இளையராஜாவின் பாடல்கள் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.
    • சமீபத்தில் லண்டனில் வேலியண்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்து அவர் சாதனை படைத்தார்.

    சென்னை:

    இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.

    மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார். அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.

    சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார்.

    இந்நிலையில், இளையராஜாவுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

    அவரது அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம். ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும் என பதிவிட்டுள்ளார்.


    • இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்க நினைக்கின்ற மதவாத சக்திகளை நடுங்க வைக்கும் சொல்.
    • குமரி முதல் இமயம் வரை கலைஞர் என்ற பெயரைச் சொல்லுவோம்! இந்தியா முழுவதும் கலைஞரின் கொள்கைகளை எடுத்துரைத்து வெல்லுவோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு அடிபணியாத கட்சிகள் இவற்றைக் குறி வைப்பதற்காகத்தானே அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்டவற்றை பா.ஜ.க. அரசு தன் கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது.

    தி.மு.க இத்தகைய மிரட்டல்களுக்கும் பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல.

    இந்தியாவின் தலைநகரிலும் பிற மாநிலங்களிலும் நம் தலைவர் கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரைக் கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள்.

    பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க.வினரின் குரலைக் கேட்டால், பா.ஜ.க. அரசு நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது. தலைவர் கலைஞரின் வார்ப்புகள் அப்படி.

    கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் தலைமையில் நடைபெற்ற காணொலி வாயிலான மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டு, தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் என்னென்ன பொறுப்பு, அந்தப் பொறுப்பினை எந்த முறையில் நிறைவேற்றிட வேண்டும் என்று விரிவாகவும் தெளிவாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

    கழகத்தின் சார்பு அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பினை உணர்ந்து, மாவட்டக் கழகத்தின் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு அணியும் மேற்கொள்ள வேண்டிய நிகழ்வுகளை மாவட்ட ஒன்றிய நகர-பேரூர் கழக அமைப்புகள் நெறிப்படுத்திட வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் போற்றும் இந்த நிகழ்வுகளை முழுமையாக நிறைவேற்றிட வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

    கலைஞர் என்பது வெறும் பெயர்ச் சொல் அல்ல! தமிழ் இனம் மொழி-நிலம் காத்து நிற்கும் வினைச்சொல். நமக்கு உரிமையுள்ள உரிச்சொல். அரசியல் எதிரிகளை அடையாளம் காட்டி 'உரி'க்கின்ற சொல். எந்நாளும் நமக்கு ஊக்கத்தையும், இன எதிரிகளுக்கு அச்சத்தையும் தருகின்ற சொல். இந்தியா முழுமையும் உள்ள ஜனநாயக இயக்கங்களுக்கு உறுதுணையாக நிற்கும் சொல். இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்க நினைக்கின்ற மதவாத சக்திகளை நடுங்க வைக்கும் சொல். குமரி முதல் இமயம் வரை கலைஞர் என்ற பெயரைச் சொல்லுவோம்! இந்தியா முழுவதும் கலைஞரின் கொள்கைகளை எடுத்துரைத்து வெல்லுவோம்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

    ×