என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உலக புத்தொழில் மாநாடு- அவினாசி சாலை மேம்பாலம் திறப்பு: முதலமைச்சர் நாளை கோவை வருகை
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வருகிறார்.
- உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
உலகின் முன்னணி ஸ்டார்ட் அப் மையங்களுள் ஒன்றாக தமிழகத்தை நிலை நிறுத்தவும், உலகளாவிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைக்கவும், புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதத்திலும் நாட்டில் முதல் முறையாக கோவையில் கொடிசியா அரங்கில் உலக புத்தொழில் மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் நடக்கிறது.
இந்த மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வருகிறார்.
கோவை விமான நிலையத்தில் அவருக்கு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.
வரவேற்பு முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் விமான நிலையத்தில் இருந்து கொடிசியா வளாகத்திற்கு வருகிறார். அங்கு உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
இந்த உலக புத்தொழில் மாநாட்டில், 39 நாடுகளை சேர்ந்த 264 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இடம் பெறுகிறார்கள். மத்திய அரசின் 10 துறைகள், 10 மாநிலங்களை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து 15 அரசுத்துறைகளும் பங்கேற்கின்றன.
50-க்கும் மேற்பட்ட தமிழக பிராண்டுகள், 150-க்கும் மேற்பட்ட சர்வதேச, தேசிய உரையாளர்கள், 75-க்கும் மேற்பட்ட தொழில் வளர் மையங்கள், 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். வளாகத்தில் 750 அரங்குகள் அமைக்கப்பட்டு 315 நிகழ்ச்சிகள் நடக்கிறது. 2 நாட்களில் மொத்தம் 11 அமர்வுகளில் உரையும், விவாதமும் நடக்கிறது.
ஸ்பாட் லைட் என்ற பெயரில் 117 அமர்வுகள் நடக்கிறது. தலா 7 நிமிடங்களில் வெவ்வேறு இடங்களில் நடக்கும் இந்த அமர்வுகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் சார்பில் உரை நிகழ்த்தப்படுகிறது.
புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து விட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் கோல்டு வின்ஸ் பகுதிக்கு செல்கிறார். அங்கு உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கி.மீ தூரத்திற்கு ரூ.1791.22 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தென்னிந்தியாவின் மிகப் பெரிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் காரில் மேம்பாலத்தில் பயணித்தபடி உப்பிலிபாளையம் வர உள்ளார். அங்கிருந்து அரசு கலைக்கல்லூரிக்கு செல்கிறார்.
அரசு கல்லூரி வளாகத்தில் கோவை மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை மற்றும் உயிர் அமைப்பு சார்பில் சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் விதமாக நான் உயிர் காவலன் என்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக விபத்தில்லா கோவை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
அதன்பின்னர் அங்கிருந்து கார் மூலமாக சிட்கோ தொழிற்பேட்டை குறிச்சி வளாகத்திற்கு முதல்-அமைச்சர் செல்கிறார். அங்கு ரூ.126 கோடியில் 2.46 ஏக்கரில் 8.5 லட்சம் சதுரடி பரப்பளவில் அமைய உள்ள தங்க நகை பூங்காவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
கோவை நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு முதல்-அமைச்சர் மதியம் 2.30 மணிக்கு விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை திரும்புகிறார்.
முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதல்-அமைச்சர் விமான நிலைய பகுதியில் இருந்து கொடிசியா வளாகம் செல்லும் வரை பகுதி மற்றும் கோல்டுவின்ஸ், உப்பிலிபாளையம் அரசு கலைக்கல்லூரி, குறிச்சி பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு நாளை கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.






