search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி ஷவர்மா உணவு தயாரித்தால் நடவடிக்கை-அதிகாரி எச்சரிக்கை

    கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி ஷவர்மா உணவு தயாரிக்கும் ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
    சேலம்:

    கேரள மாநிலத்தில் சமீபத்தில் ஒரு ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்தநிலையில், தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஷவர்மா சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதனால் அனைத்து மாவட்டங்களிலும் அசைவ ஓட்டல்களில் ஆய்வு செய்து உணவின் தரம் குறித்து பரிசோதனை செய்யுமாறு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் நேற்று சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள அசைவ ஓட்டல்களில் அதிரடியாக சோதனை செய்தனர்.

    அப்போது, அங்கு வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யப்படும் அசைவ உணவு தரம் குறித்தும், ஷவர்மா செய்வதற்கு பயன்படுத்தப்படும் கோழி இறைச்சி தரமானதாக உள்ளதா? அல்லது கெட்டு போய்விட்டதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட அசைவ ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டறிந்தார். 

    இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், அசைவ ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்பட வேண்டும். 

    ஷவர்மா சாப்பிட்ட யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அசைவ ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×