search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    15-18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    15-18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் புதிய உருமாற்றமான ஒமைக்ரானும் போட்டி போட்டுக்கொண்டு பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

    இதனால் நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன.

    இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் அடுத்தகட்டமாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ஏற்பாடுகள் செய்தது. இதுதொடர்பாக கடந்த மாதம் 25-ந் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில், “ஜனவரி 3-ந் தேதி முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும்” என்று அறிவித்து இருந்தார்.

    அதன்படி இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் 15-18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சுமார் 33.46 லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடங்கின.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை இன்று சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார். மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை அவர் பார்வையிட்டார்.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் 15-18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைச்சர்கள், கலெக்டர்கள் இந்த பணிகளை தொடங்கி வைத்தனர். இதனால் முதல் நாளே சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.

    15-18 வயதுக்குட்பட்ட 33.46 லட்சம் பேரில் சுமார் 26 லட்சம் பேர் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஆவார்கள். 10, 11, 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் முழுமையாக இந்த வயது பிரிவில் இடம் பெறுகிறார்கள். எனவே ஒவ்வொரு பள்ளியிலும் 15-18 வயது உடைய மாணவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டது.

    அதன்படி தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு அம்சங்களுடன் தனியாக சிறப்பு முகாம்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அந்த சிறப்பு முகாம்களில் இன்று சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. விரைவில் 33.46 லட்சம் சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

    தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்யலாம் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக நாடு முழுவதும் 15-18 வயது சிறுவர்கள் முன்பதிவு செய்தனர். தமிழகத்தில் சுமார் 6 லட்சம் சிறுவர்கள் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.

    கோவின் இணைய தளத்தில் இந்த முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மையங்களுக்கு சென்று சிறுவர்கள் தடுப்பூசி பெற்று வருகிறார்கள். முன் பதிவு செய்யாவிட்டாலும் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தடுப்பூசி செலுத்துவதற்கு சிறுவர்களை எப்படி அழைத்து வர வேண்டும் என்று பெற்றோர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி இன்று பெற்றோர்கள் தங்களது மகன், மகள்களை பள்ளிக்கு அழைத்து வந்திருந்தனர்.

    கூட்டம் அதிகம் சேருவதை தவிர்ப்பதற்காக சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வர பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே தங்களுக்கு தெரிவிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் நாளில் மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மாணவர்களின் விவரங்களை இணைய தளத்தில் அன்றே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது நாடு முழுவதும் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட் னிக்-வி ஆகிய மூன்று வகை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் 15-18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை மட்டுமே செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

    அதற்கு ஏற்ப மாநில அரசுகளுக்கு கோவேக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. சிறுவர்களிடம் தடுப்பூசி தொடர்பான குழப்பங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாட்டை மத்திய அரசு செய்து உள்ளது.

    அதன்படி சிறுவர்களுக்கு கோவேக்சின் தவிர வேறு வகை தடுப்பூசிகளை செலுத்தி விடக்கூடாது என்பதில் சிறப்பு முகாம்களில் இருப்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பள்ளிகளில் படிக்கும் சுமார் 26 லட்சம் பேரை தவிர மேலும் 7½ லட்சம் பேர் 15-18 வயதில் வீடுகளிலும், கடைகளிலும் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    Next Story
    ×