search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முக ஸ்டாலின்
    X
    அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முக ஸ்டாலின்

    புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை வருமா?- அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மு.க.ஸ்டாலின்

    ‘ஒமைக்ரான்’ தமிழகத்திற்குள் வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும் உருமாறிய ஒமைக்ரான் பற்றிய அச்சம் இன்னும் இருந்து கொண்டுதான் உள்ளது.

    இந்த நிலையில் வருகிற 15-ந் தேதியுடன் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ளதால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ள போதிலும், கடந்த சில நாட்களாக உருமாறிய கொரோனா வைரஸ் ‘ஒமைக்ரான்’ வேகமாக பரவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. பக்கத்து மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவுக்கு வந்துவிட்ட ‘ஒமைக்ரான்’ தமிழ்நாட்டிற்கு எப்படியும் வந்துவிடும் என்பதால் அது குறித்து எடுக்கப்படும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவரங்களை கேட்டறிந்தார்.

    இந்த கூட்டத்தில் பேசிய சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும் முற்றிலும் இல்லை என்று கூறமுடியாது என்றார். ‘ஒமைக்ரான்’ பக்கத்து மாநிலங்களுக்கு வந்துவிட்டதால் தமிழகத்திற்குள் வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.

    பண்டிகை காலமான கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வருவதையொட்டி மக்கள் கூட்டம் கூட்டமாக கடைவீதிகளிலும், பொழுதுபோக்கு இடங்களிலும் கூடுவார்கள் என்பதால் அந்தந்த பகுதிகளில் முக கவசம் அணிந்து வருமாறு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினால்தான் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என்றார்.

    அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்கள் முககவசம் அணிவதை வலியுறுத்தும் வகையில் பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    கொரோனா வைரஸ்

    இதேபோல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் அதை கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் பற்றியும் விளக்கி கூறினார்.

    இதேபோல் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளும் தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள்.

    அண்டை மாநிலங்களில் ஒமைக்ரான் கால் பதித்த நிலையில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கலாமா? அல்லது தமிழகத்தில் இப்போது உள்ள கட்டுப்பாடுகளை அப்படியே நீட்டிக்கலாமா? அல்லது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? என்பது பற்றியும் அதிகாரிகளின் கருத்துக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க அரசின் சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



    Next Story
    ×