search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்தை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    விஜயகாந்தை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    விஜயகாந்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து பேசினார்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பது இல்லை. டாக்டர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே அவர் ஓய்வெடுத்து வருகிறார்.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய தே.மு.தி.க., தினகரனின் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தோல்வியை தழுவியது. விஜயகாந்த் சில இடங்களுக்கு மட்டுமே சென்று பிரசாரம் செய்தார்.

    தேர்தல் முடிந்த பிறகு அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் பின்னர் வீடு திரும்பினார்.

    கொரோனா தொற்றும் ஏற்பட்டு அதில் இருந்து விஜயகாந்த் மீண்டுள்ளார்.

    இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்றார். அங்கு விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

    அப்போது விஜயகாந்துக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தார். பதிலுக்கு விஜயகாந்தும் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

    முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விஜயகாந்த், மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறினார்.

    அப்போது மு.க.ஸ்டாலின் நேரில் வந்து சந்திப்பதாக விஜயகாந்திடம் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையிலேயே இன்று விஜயகாந்த் வீட்டுக்கு சென்று உடல்நலம் விசாரித்துள்ளார்.

    விஜயகாந்த், தே.மு.தி.க. சார்பில் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதியை மு.க.ஸ்டாலினிடம்  வழங்கினார்.

    இந்த சந்திப்பின் போது விஜயகாந்த், தே.மு.தி.க. சார்பில் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதியை மு.க.ஸ்டாலினிடம்  வழங்கினார்.

    மு.க.ஸ்டாலினுடன் ஆ.ராசா எம்.பி., அமைச்சர் துரைமுருகன் ஆகியோரும் விஜயகாந்திடம் உடல் நலம் விசாரித்தனர்.  மு.க.ஸ்டாலினை வாசல்வரை வந்து எல்.கே. சுதீஷ் வரவேற்று அழைத்து சென்றார்.

    மு.க.ஸ்டாலின், விஜயகாந்திடம் உடல்நலம் விசாரித்த போது அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினும், விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×