search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈஸ்வரன்
    X
    ஈஸ்வரன்

    மத்திய அரசு கண்டு கொள்ளாததே கொரோனா பரவலுக்கு காரணம்- ஈஸ்வரன் பேட்டி

    ஊரடங்கு கட்டுப்பாடுகள் மக்களின் வருமானத்திற்கு இடையூறு இல்லாதபடி விதிக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

    திருப்பூர்:

    அவினாசி ரோட்டில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி அலுவலகத்தில் தீரன் சின்னமலையின் 266-வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் பேசியதாவது:-

    சுதந்திர போராட்ட வீரரும் கொங்கு நாட்டை சேர்ந்தவருமான தீரன் சின்னமலை உருவப்படத்தை சட்டமன்றத்தில் வைக்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். மே 2-ந் தேதிக்குப்பிறகு அவரது படம் கொண்டு வரப்படும். விவேக் தடுப்பூசி செலுத்தி கொண்டு அனைவரையும் தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அந்த நினைவுகள் மறைவதற்குள் அவர் மறைந்து விட்டார் என்பது வருத்தமளிக்கிறது. மருத்துவர்கள் சார்பில் விவேக் தடுப்பூசி போட்டு கொண்டதற்கும் அவர் இறந்ததற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என விளக்கம் அளித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் அதை நம்பி தான் ஆக வேண்டும். ஏனென்றால் கோடிகணக்கான பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.

    விவேக்

    தற்போது கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்த பிறகு தடுப்பூசி போட அறிவுறுத்தி வருகின்றனர். மத்திய அரசு இதை கண்டு கொள்ளாமல் இருந்ததே இதற்கு காரணம். திருப்பூரில் முதல் கொரோனா அலை வீசிய போது சென்ற புலம்பெயர் தொழிலாளர் முழுமையாக திரும்பி வர வில்லை. அதற்குள் மீண்டும் கொரோனா தீவிரமடைந்து உள்ளது. இதனால் பின்னலாடை தொழில்கள் பாதிப்படைந்துள்ளது. மேலும் நூல்களின் விலையும் உயர்ந்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் ஒப்பந்தம் செய்யும் போது இருந்த விலை ஆடைகள் உற்பத்தி செய்யும் போது அதிகரிப்பது அவர்களை சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் மக்களின் வருமானத்திற்கு இடையூறு இல்லாதபடி விதிக்க வேண்டும்.

    வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் தி.மு.க. மற்றும் கொங்குநாடுமக்கள் தேசிய கட்சி, கூட்டணி கட்சிகள் சார்பில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க 4 பேர் எப்போதும் பணியில் இருந்து வருகின்றனர். ஆனால் அ.தி.மு.க. சார்பில் எந்த ஒரு நபரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வில்லை. இதுபெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஏதோ சதி இருப்பது போல தெரிகிறது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×