
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களின் குறைகளை மனுக்களாக பெற்று வருகிறார்.
இதுவரை 3 கட்ட பிரசாரம் மேற்கொண்டு உள்ள மு.க.ஸ்டாலின் 110 தொகுதிகளை உள்ளடக்கிய 23 மாவட்டங்களில் இந்த பிரசார கூட்டங்களை நடத்தி உள்ளார். 4-வது கட்டமாக நேற்று முன்தினம் மதுரையில் பிரசாரத்தை தொடங்கினார்.
இன்று கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து விழா மேடைக்கு சென்ற மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் குறைகளுக்கு பதிலளித்து பேசினார்.
நான் தேர்தலுக்காகவோ, அரசியலுக்காகவோ வருபவன் நான் அல்ல. எப்போதும் மக்களுடன் மக்களாக இருப்பவனே இந்த ஸ்டாலின்.
தமிழக மக்களுக்கு நான் உறுதி கொடுத்துள்ளேன். அந்த உறுதி என்னவென்றால் நான் ஆட்சி பொறுப்பேற்றதும் 100 நாளில் மக்கள் குறையை தீர்ப்பேன் என்பது தான். ஆட்சி பொறுப்பேற்றதும் கட்டாயம் அது நிறைவேற்றப்படும். இதற்காக என்று தனியாக ஒரு துறை உருவாக்கப்படும். அந்த துறை மூலம் தற்போது ஊர், ஊராக பெற்று வரும் மனுக்களை அலசி ஆராய்ந்து அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் அரசாங்கம் நடக்கவில்லை. உங்கள் அராஜகம் முடியும் நாள் வெகு தொலைவில் இல்லை. மிக அருகில் தான் உள்ளது. விரைவில் ஆட்சி மாறும். அப்போது காட்சியும் மாறும்.

இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு, சிங்கா நல்லூர், கோவை வடக்கு, கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.