search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல் முருகன்
    X
    எல் முருகன்

    தமிழர் நலன் குறித்து பேச ராகுல் காந்திக்கு அருகதை கிடையாது- எல்.முருகன் தாக்கு

    தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை இல்லை என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
    சென்னை:

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் அவருடைய உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப்படத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், துணைத்தலைவர் சக்ரவர்த்தி, நடிகை குஷ்பு உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அதனைத்தொடர்ந்து எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக பா.ஜ.க.வின் பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பூத்துக்கும் 30 பேர் கொண்ட கமிட்டி அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்துவிட்டது.

    நானும், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளருமான சி.டி.ரவியும் விரதம் இருந்து வருகிற 27-ந்தேதி பழனியில் காவடி ஏந்தி, வழிபட இருக்கிறோம். எங்களின் வேண்டுகோளை ஏற்று தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அறிவித்ததற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எல்.முருகன் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- ராகுல்காந்தியின் தமிழக வருகை பா.ஜ.க.வை துரத்தியடிக்கும் என கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறாரே?

    பதில்:- இந்தியாவில் இருந்தே காங்கிரஸ் துரத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் எங்கும் வரமுடியாது. ஒரு இடத்தில் கூட காங்கிரசால் தனித்து போட்டியிடமுடியாது.

    கேள்வி:- சசிகலா உடல்நிலை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகிறதே?

    பதில்:- யாராக இருந்தாலும் உடல்நிலை மிக முக்கியம். எனவே அவருக்கு நல்ல மருத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.

    கேள்வி:- தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைப்பதாக மு.க.ஸ்டாலினும், தமிழ் கலாசாரத்தை பற்றி மோடிக்கு என்ன தெரியும்? என ராகுல்காந்தியும் விமர்சித்துள்ளனரே?

    பதில்:- ராகுல்காந்திக்கு தமிழ் பற்றி என்ன தெரியும்? ஒரு திருக்குறளை உச்சரிக்க முடியுமா? இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு காரணமே காங்கிரசும், தி.மு.க.வும் தான். எனவே ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் போன்றவர்களுக்கு தமிழர் நலன் பற்றி பேச எந்த அருகதையும், தகுதியும் கிடையாது.

    மேற்கண்டவாறு எல்.முருகன் பதில் அளித்தார்
    Next Story
    ×