
சென்னை:
பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூடி பொழுதை கழிப்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பொங்கலுக்கு மறுநாள் மாட்டு பொங்கல் தினத்தன்றும், அதற்கு மறுநாள் காணும் பொங்கல் அன்றும், வருகிற 17-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றும் தொடர்ச்சியாக 3 நாட்கள் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொங்கல் விடுமுறை நாளில் நாளை மட்டுமே மெரினா கடற்கரைக்கு செல்ல முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மெரினாவில் நாளை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மெரினா கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
நாளை மெரினா கடற்கரைக்கு முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாநகராட்சி ஊழியர்களும் போலீசாருடன் இணைந்து நாளை மெரினாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.