search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரணாப் முகர்ஜி
    X
    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரணாப் முகர்ஜி

    பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூளையில் கட்டியை அகற்ற ஆபரேஷன் செய்ததை தொடர்ந்து, அவர் கோமா நிலையை அடைந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் கண்டறியப்பட்டது.
     
    இதற்கிடையே, டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்.  பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான பிராணாப் முகர்ஜி, உடல் நலக்குறைவால் புதுடெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    திரு.பிராணாப் முகர்ஜி அவர்கள், இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்து சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். இவர் நிதித்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திறம்பட செயலாற்றியவர்.

    மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை வைரவிழா, இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா உள்ளிட்ட பல விழாக்களில் ஜெயலலிதா அவர்களுடன், தலைமை விருந்தினராக பிராணாப் முகர்ஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தவர்.

    இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவரான பிராணாப் முகர்ஜி அவர்கள் சிறந்த பேச்சாளராகவும் விளங்கியவர். இவர் சிறந்த ஆட்சியாளராகவும், கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்புடன் பழகும்
    தன்மையுடையவராகவும் இருந்தார். இந்திய அரசின் உயரிய பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷன் விருதுகளை பெற்ற சிறப்புக்குரியவர்.

    இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜி அவர்களின் மறைவு இந்தியாவிற்கே ஒர் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது
    ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×