search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilnadu Chief Minister"

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் பையனூரில் கட்டப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். #MGRShootingSpot
    சென்னை:

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) சார்பில் பையனூரில் 15 ஏக்கர் பரப்பளவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் கட்டப்பட்டது. இதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்து பேசியதாவது:-

    1931-ம் ஆண்டுகளில் பேசும் படங்கள் வெளிவந்தாலும், 1950 மற்றும் 1960-ம் ஆண்டு காலகட்டம் தான் இந்திய சினிமாத் துறைக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இந்தக் காலத்தை இந்திய சினிமா உலகத்தின் பொற்காலம் என்றே அழைத்தனர்.

    அந்த சமயத்தில்தான் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் அதிக அளவில் வெளிவந்து, அவர் மிகப் பெரிய நடிகராக புகழ் பெற்று தமிழக மக்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்.

    புராண இதிகாச படங்கள் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில் சமுதாய படங்கள் வெளிவர காரணமாக இருந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜிஆர்.

    தன் திரைப்படங்கள் மூலம் சமுதாய மறுமலர்ச்சியை உண்டாக்கும் விதத்தில் கதை அமைப்பையும், திரைப் பாடல்களையும் உருவாக்கிய பெருமை எம்.ஜி.ஆரை சாரும்.

    சமூக கருத்துகளை, மக்களிடையே எடுத்துச் சென்றதில் திரைப்படங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

    22 சங்கங்கள் இணைந்த ஒரு கூட்டமைப்புதான் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம். அதாவது ‘பெப்சி’ என்ற இந்த அமைப்பு ஆகும்.

    திரைப்படத் தொழிலாளர்கள் நலனுக்கான இந்த அமைப்பு 1967-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. திரைப்படம் மற்றும் அரசியல் என்ற இரண்டையும் தனது இரு கண்களாக பாவித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இந்த அமைப்பை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.

    தற்போதைய கால மாற்றத்திற்கேற்ப. படப்பிடிப்பு நிலையங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்டது. படப்பிடிப்பு தளங்கள் இருந்த இடங்கள். தற்பொழுது குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களாக மாறி வருகின்றன.


    இந்த சூழ்நிலையில் திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து, சினிமாத் துறையின் மூலம் சமுதாய நலன் சார்ந்த கருத்துகளை மக்களிடையே விதைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்று சாதித்துக் காட்டிய எம்.ஜி.ஆர். பெயரால் படப்பிடிப்பு தளம் உருவாக்கி இருப்பது பாராட்டுக்குரியது.

    மேலும் பெப்சி என்ற அமைப்பு உருவாக உறுதுணையாக இருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பெயரை தங்களது முதல் படப்பிடிப்பு தளத்திற்கு வைத்தது, இந்த அமைப்பினர் அவருக்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

    110 அடி நீளமும் 100 அடி அகலமும் 56 அடி உயரமும் கொண்ட இந்த படப்பிடிப்புத் தளம் இந்தியாவிலேயே மிக உயர்ந்த படப்பிடிப்பு தளம் என்று அறிவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

    சென்னையின் பிற இடங்களிலும், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் இப்படிப்பட்ட படப்பிடிப்பு தளங்களை இந்த அமைப்பு உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    அதிக அளவில் படப்பிடிப்பு தளங்கள் உருவாக்கப்படுவதன் மூலம் தமிழ் படத் தயாரிப்பாளர்கள் வெளியிடங்களுக்குச் செல்லாமல் உள்ளூரிலேயே படப்பிடிப்பு நடத்த வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் அவர்கள் தயாரிக்கும் படங்களுக்கான செலவுகள் குறைய வாய்ப்பு ஏற்படுகிறது.

    மேலும் இதர மொழிப் படங்களும் இங்குள்ள படப்பிடிப்பு தளங்களில் பயன்படுத்திக் கொள்ள முன்வரும் வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் இங்குள்ள தமிழ் திரைப்படத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறுவது உறுதிப்படுத்தப்படும்.

    மிக உயர்ந்த எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தினை வெளியிலிருந்து எந்த உதவியும் பெறமாமல், உங்களது கூட்டு முயற்சியின் விளைவாக உருவாக்கி இருக்கிறீர்கள் என்பதை அறிவதில் நான் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    பெப்சி அமைப்பைச் சார்ந்த நீங்கள் அனைவரும் விடாமுயற்சியால் வெற்றி பெற்று உள்ளீர்கள் என்பதை உணர்ந்து உங்கள் அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர், ராஜூ, பாண்டியராஜன், டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொன்வண்ணன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். #MGRShootingSpot
    பல்கலைக்கழக மானிய குழு விவகாரம் குறித்த மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார். #EdappadiPalanisamy #Modi
    சென்னை:

    மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருந்து வருகிறது. இருப்பினும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, அணைகள் பாதுகாப்பு சட்டம் போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    பல்கலைக்கழக மானிய குழுவுக்கு பதிலாக இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக் கும் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

    இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.



    அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

    மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தினால் தயாரித்து அளிக்கப்பட்டுள்ள இந்திய உயர் கல்வி ஆணையத்துக்கான வரைவு சட்ட மசோதா மீது தமிழக அரசு கொண்டுள்ள சந்தேகம் குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

    அனைத்து மாநில அரசு களிடம் இருந்தும் அந்த மசோதா மீது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கருத்துகளை கோரியுள்ளது.

    ஒழுங்குமுறை மற்றும் நிதி ஆகிய இரண்டு அதிகாரங்களையும் கொண்ட பல்கலைக் கழக மானிய குழுவே (யு.ஜி.சி.) தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கருத்தாக உள்ளது.

    எனவே, யு.ஜி.சி.யை கலைத்துவிட்டு, அந்த இடத்தில் ஒழுங்குமுறை அதிகாரத்தை மட்டுமே கொண்டுள்ள இந்திய உயர் கல்வி ஆணையத்தை அமைக்க தேவை இல்லை.

    உயர் கல்வி நிறுவனங்களைக் பராமரித்து கண்காணிக்கவும், அவற்றின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் தரத்தை மேம்படுத்தும் பொறுப்புகளை யு.ஜி.சி. தன்னகத்தே வைத்துள்ளது. அவற்றோடு, பல்வேறு கல்வித் திட்டங்களுக்கு 1956-ம் ஆண்டில் இருந்து நிதி ஒப்பளித்து வருகிறது. இதுவரை அதன் மீது எந்த புகாரும் எழவில்லை.

    நிதிக்கான முன்மொழிவு களை மதிப்பிட்டு அதை வழங்கக்கூடிய திறன் யு.ஜி.சி.க்கு உள்ளது. மேலும் அந்த நிதியை வெளிப்படைத்தன்மையுடன் ஒதுக்குகிறது. யு.ஜி.சி.க்கான நிதி அளிக்கும் அதிகாரம் என்பது தன்னுடைய பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்து கொள்ளும் கூடுதல் செயல்திறனாக அமைந்துள்ளது.

    தற்போது கொண்டுவர முன்மொழியப்பட்டுள்ள சட்ட மசோதா, யு.ஜி.சி.க்கான நிதி அதிகாரத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கோ அல்லது வேறு அமைப்புக்கோ இடமாற்றம் செய்வதாக அமைந்துள்ளது.

    இதில் தமிழக அரசுக்கு பலமாக சந்தேகங்கள் உள்ளன. ஏனென்றால், பல்வேறு மத்திய அரசுத் துறைகளால் தமிழக அரசுக்கு அனுமதிக்கப்பட வேண்டிய நிதியைப் பெறுவதில் எங்களது அனுபவம் நேர்மறையாக இருந்ததில்லை. அதுவும் நிதி அளிக்கும் அதிகாரத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பெற்றுவிட்டால், தமிழகத்துக்கு தற்போது கிடைக்கும் 100 சதவீத நிதி, இனிமேல் மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு இடையே 60:40 என்ற வீதத்தில் அமைந்துவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    எனவே இந்த காரணங் களுக்காக, இந்திய உயர் கல்வி ஆணைய (யு.ஜி.சி. சட்டத்தை நீக்குதல்) சட்டம்-2018 என்ற வரைவு சட்ட மசோதாவை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. அதோடு, யு.ஜி. சி.யே தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை, தமிழக அரசு கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளார். 
    டெல்லியில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி புறப்படுகிறார். #NITIAayog #EdappadiPalanisamy
    புதுடெல்லி:

    நிதி ஆயோக் அமைப்பின் 4-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்துகொள்கிறார்கள்.

    அதன்படி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) மாலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது. 2 அமர்வுகளாக இந்த கூட்டம் நடைபெற இருப்பதாகவும், கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளையும் பிரதமர் மோடி தனித்தனியாக சந்திக்க இருப்பதாகவும் தெரிகிறது.

    எடப்பாடி பழனிசாமி அவரை சந்தித்து பேசும்போது, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பார் என்றும், தமிழகம் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவையும் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.

    நிதி ஆயோக் கூட்டம் முடிந்ததும், பொதிகை தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பும் எடப்பாடி பழனிசாமி, நாளை இரவே தமிழ்நாட்டுக்கு திரும்புகிறார். #NITIAayog #TamilnaduCM #EdappadiPalanisamy
    ×