search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MGR Century Shooting spot"

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் பையனூரில் கட்டப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். #MGRShootingSpot
    சென்னை:

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) சார்பில் பையனூரில் 15 ஏக்கர் பரப்பளவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் கட்டப்பட்டது. இதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்து பேசியதாவது:-

    1931-ம் ஆண்டுகளில் பேசும் படங்கள் வெளிவந்தாலும், 1950 மற்றும் 1960-ம் ஆண்டு காலகட்டம் தான் இந்திய சினிமாத் துறைக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இந்தக் காலத்தை இந்திய சினிமா உலகத்தின் பொற்காலம் என்றே அழைத்தனர்.

    அந்த சமயத்தில்தான் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் அதிக அளவில் வெளிவந்து, அவர் மிகப் பெரிய நடிகராக புகழ் பெற்று தமிழக மக்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்.

    புராண இதிகாச படங்கள் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில் சமுதாய படங்கள் வெளிவர காரணமாக இருந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜிஆர்.

    தன் திரைப்படங்கள் மூலம் சமுதாய மறுமலர்ச்சியை உண்டாக்கும் விதத்தில் கதை அமைப்பையும், திரைப் பாடல்களையும் உருவாக்கிய பெருமை எம்.ஜி.ஆரை சாரும்.

    சமூக கருத்துகளை, மக்களிடையே எடுத்துச் சென்றதில் திரைப்படங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

    22 சங்கங்கள் இணைந்த ஒரு கூட்டமைப்புதான் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம். அதாவது ‘பெப்சி’ என்ற இந்த அமைப்பு ஆகும்.

    திரைப்படத் தொழிலாளர்கள் நலனுக்கான இந்த அமைப்பு 1967-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. திரைப்படம் மற்றும் அரசியல் என்ற இரண்டையும் தனது இரு கண்களாக பாவித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இந்த அமைப்பை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.

    தற்போதைய கால மாற்றத்திற்கேற்ப. படப்பிடிப்பு நிலையங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்டது. படப்பிடிப்பு தளங்கள் இருந்த இடங்கள். தற்பொழுது குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களாக மாறி வருகின்றன.


    இந்த சூழ்நிலையில் திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து, சினிமாத் துறையின் மூலம் சமுதாய நலன் சார்ந்த கருத்துகளை மக்களிடையே விதைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்று சாதித்துக் காட்டிய எம்.ஜி.ஆர். பெயரால் படப்பிடிப்பு தளம் உருவாக்கி இருப்பது பாராட்டுக்குரியது.

    மேலும் பெப்சி என்ற அமைப்பு உருவாக உறுதுணையாக இருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பெயரை தங்களது முதல் படப்பிடிப்பு தளத்திற்கு வைத்தது, இந்த அமைப்பினர் அவருக்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

    110 அடி நீளமும் 100 அடி அகலமும் 56 அடி உயரமும் கொண்ட இந்த படப்பிடிப்புத் தளம் இந்தியாவிலேயே மிக உயர்ந்த படப்பிடிப்பு தளம் என்று அறிவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

    சென்னையின் பிற இடங்களிலும், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் இப்படிப்பட்ட படப்பிடிப்பு தளங்களை இந்த அமைப்பு உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    அதிக அளவில் படப்பிடிப்பு தளங்கள் உருவாக்கப்படுவதன் மூலம் தமிழ் படத் தயாரிப்பாளர்கள் வெளியிடங்களுக்குச் செல்லாமல் உள்ளூரிலேயே படப்பிடிப்பு நடத்த வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் அவர்கள் தயாரிக்கும் படங்களுக்கான செலவுகள் குறைய வாய்ப்பு ஏற்படுகிறது.

    மேலும் இதர மொழிப் படங்களும் இங்குள்ள படப்பிடிப்பு தளங்களில் பயன்படுத்திக் கொள்ள முன்வரும் வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் இங்குள்ள தமிழ் திரைப்படத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறுவது உறுதிப்படுத்தப்படும்.

    மிக உயர்ந்த எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தினை வெளியிலிருந்து எந்த உதவியும் பெறமாமல், உங்களது கூட்டு முயற்சியின் விளைவாக உருவாக்கி இருக்கிறீர்கள் என்பதை அறிவதில் நான் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    பெப்சி அமைப்பைச் சார்ந்த நீங்கள் அனைவரும் விடாமுயற்சியால் வெற்றி பெற்று உள்ளீர்கள் என்பதை உணர்ந்து உங்கள் அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர், ராஜூ, பாண்டியராஜன், டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொன்வண்ணன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். #MGRShootingSpot
    ×