search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர்
    X
    அமைச்சர் விஜயபாஸ்கர்

    சேலம் மாவட்டத்தில் பிளாஸ்மா சிகிச்சை விரைவில் தொடங்கப்படும்- அமைச்சர் விஜயபாஸ்கர்

    சேலம் மாவட்டத்தில் பிளாஸ்மா சிகிச்சை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நேற்று மாலை வந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் தொழு நோயாளிகளுக்கு என தனியாக சிகிச்சை அளிக்கும் வார்டுகளை ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு கொரோனா நோயை தடுக்க சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறது. சென்னையில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு இணையாக சேலம் மாவட்டத்திலும் விரைவில் பிளாஸ்மா சிகிச்சையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள். இதனால் ஏராளமானவர்கள் குணம் அடைந்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆத்தூர் உதவி கலெக்டர் துரை, ஆத்தூர் தாசில்தார் அன்புச்செழியன், நகரசபை ஆணையாளர் ஸ்ரீதேவி, அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

    இதற்கிடையே ஆத்தூர் மாரிமுத்து ரோடு பகுதியில் ஒரே தெருவை சேர்ந்த 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த பகுதி முழுவதும் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்து அங்கு முகாமிட்டுள்ள மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
    Next Story
    ×