search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் நிவாரண பொருட்களை பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்
    X
    நாகர்கோவிலில் நிவாரண பொருட்களை பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

    பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

    மதுக்கடைகளை திறக்க கூடாது என்றும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
    நாகர்கோவில்:

    ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்கோவில் 27-வது வார்டு பா.ஜனதா சார்பில் 2 ஆயிரம் பேருக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் மது பிரியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மதுவை மறந்து வந்தனர். இதை பயன்படுத்தி பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதை விட்டுவிட்டு மீண்டும் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    தற்போது உள்ள சூழ்நிலையில் கையில் காசு இருக்காது. எனவே மது பிரியர்கள் வீட்டிலுள்ள பாத்திரங்களை அடமானம் வைத்து குடிக்க வேண்டிய நிலை ஏற்படும். அரசு கொடுத்த ஆயிரம் ரூபாயும் மதுக்கடைக்கு தான் போகும். நிதி பற்றாக்குறை இருப்பதால்தான் மதுக்கடைகளை திறப்பதாக கூறுகிறார்கள். மதுக்கடையை திறப்பது தவறு.

    நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. இதற்கு என் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை போதுமானதாக இல்லை தான். அதே சமயம் அரசின் சூழ்நிலையையும் பார்க்க வேண்டும். மு.க.ஸ்டாலின் அரசை குறைகூறி வருவதாக கூறுகிறீர்கள். எல்லா அரசியல் கட்சிகளும் அரசியல் செய்யத்தான் செய்வார்கள். ஆனால் எரிகிற வீட்டில் போய் அரசியல் செய்யக்கூடாது. போலீசார் கைது செய்துள்ள காசி விவகாரம் தமிழகத்துக்கு அவமானம். குமரி மாவட்டத்துக்கு தலைகுனிவு. இதில் அவர் பா.ஜனதாவைச் சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். ஆனால் அது தவறு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவி மீனாதேவ், பா.ஜனதா நாகர்கோவில் மாநகர தலைவர் நாகராஜன், ராஜன், உமாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×