search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்
    X
    சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழகத்தில் கொரோனா பரவுதல் விரைவில் குறையும் - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

    தமிழ்நாட்டில் விரைவில் கொரோனா வைரஸ் நோய் பரவுதல் எண்ணிக்கை குறையும் என்று தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் கூறிய0தாவது:-

    கொரோவை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதல்படி அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக தனி படுக்கை வசதிகள் உருவாக்கி இருப்பதோடு, தனியார் ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் பேசி அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

    அந்த வகையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் 1500 படுக்கைகள் ஒதுக்குகின்றனர். அதேபோல சவிதா மருத்துவ கல்லூரி, மியாட் மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் 500 படுக்கைகள் ஒதுக்க உள்ளனர்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் மற்றும் மருத்தவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர்

    தற்போது பி.சி.ஆர். எனப்படும் கருவி மூலமாக கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. இந்த கருவி மூலம் நாசி அல்லது தொண்டை மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யப்படும். இதன் முடிவுகள் வருவதற்கு 5 மணி நேரம் ஆகும்.

    இந்த நிலையில் விரைவாக அந்த இடத்திலேயே பரிசோதனை செய்யும் அதிவிரைவு சோதனை கருவிகளை வாங்க உள்ளோம். ஒரு லட்சம் கருவிகள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அவை 10-ந்தேதி வரும். இந்த கருவி மூலம் ரத்த மாதிரியை வைத்து பரிசோதிக்கப்படும். எனவே விரைவில் முடிவுகளை கண்டறிவதால் அதிகம் பேருக்கு சோதனை நடத்த முடியும்.

    தற்போது நோய் தாக்குதலுக்கு ஆளாகி அறிகுறி இல்லாதவர்களால் நோய் பரப்புவது காணப்படுகிறது. புதிய கருவி மூலம் சோதனை நடத்திவிட்டால் நோய் தாக்கியவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

    இந்தியா முழுவதும் 170 சோதனை மையங்கள் உள்ளது. அதில் 17 மையங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது. அரசு துறையில் மட்டும் 11 மையங்கள் உள்ளன. இந்த வாரத்தில் மேலும் 10 மையங்களை உருவாக்க இருக்கிறோம். நோய் பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், கடுமையான சுவாச நோய் தொற்று இருப்பவர்கள் என அனைவரையும் பரிசோதித்து வருகிறோம்.

    அட்லாண்டாவில் உள்ள நோய் கட்டுப்பாட்டு மையம், உலக சுகாதார அமைப்பு, உலக வங்கி, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ஆகியவற்றுடன் அவ்வப்போது தொடர்பில் இருந்து பேசி வருகிறோம்.

    இதுமட்டு மல்லாமல் பல மூத்த மருத்துவ நிபுணர்கள், வைரஸ் ஆய்வு நிபுணர்கள் ஆகியோருடனும் தொடர்பில் இருக்கிறோம்.

    இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சரியான பாதையில் செல்கிறோம். இங்கிலாந்து நாட்டில் இதேபோல சமூக விலகல் திட்டம் கொண்டு வந்தபோது அதை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை.

    இத்தாலியில் இருந்து தொடர்ந்து விமானங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால் அந்த நாட்டில் நோய் பரவுதல் அதிகமானது. 

    இவ்வாறு நடந்துவிடக் கூடாது என்பதற்காக ஊரடங்கு மற்றும் சமூக விலகல் திட்டங்களை சரியாக செய்தோம். சீனாவை போலவே கிருமி நீக்கம் செய்யப்பட்டது.

    டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி சோதனை செய்தோம். இதற்காக ஒரு மைக்ரோ திட்டத்தை தொடங்கினோம். இதனால் சமூக பரவல் எதுவும் இல்லை.

    தமிழ்நாட்டில் விரைவில் நோய் பரவுதல் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    நோய் தடுப்புக்காக முதலில் அரசு ரூ.60 கோடி வழங்கியது. அதன்பிறகு முதல்-அமைச்சர் சட்ட சபையில் ரூ.500 கோடி அறிவித்தார். தற்போது ரூ.3200 கோடி தயாராக வைத்துள்ளோம். முதல்-அமைச்சர் நிலைமையை முழுமையாக கண்காணித்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×