search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜூ
    X
    அமைச்சர் செல்லூர் ராஜூ

    மு.க.ஸ்டாலின் வீட்டுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம்- செல்லூர் ராஜூ பேச்சு

    அ.தி.மு.க. அரசை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

    மதுரை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பழங்காநத்தத்தில் மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் நடந்தது. மேற்கு 2-ம் பகுதி செயலாளர் பைக்காரா கருப்புசாமி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஏழைகளுக்கு தையல் எந்திரங்கள் மற்றும் கிரைண்டர், மூன்று சக்கர சைக்கிள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தொட்டில் குழந்தை திட்டம் முதல் முதியோர் உதவித்தொகை வரை பெண்கள் சமுதாயம் மேம்பட திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    தாலிக்கு தங்கம் வழங்கி பெண்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் அம்மா. அவரது வழியில் எடப்பாடி பழனிசாமி நலத்திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தி வருகிறார்.

    தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் இருண்ட காலமாக இருந்தது. மின்வெட்டு காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டன. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

    அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அ.தி.மு.க. அரசை எதற்கெடுத்தாலும் குறை கூறும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் தான்.

    ஆனால் அவரும் அ.தி.மு.க. அரசின் சலுகைகளை பெற்றுக்கொண்டு இந்த அரசை விமர்சனம் செய்து வருகிறார். இதனை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    ஸ்டாலின்

    மக்களுக்கு சேவை செய்கிற இயக்கம் அ.தி.மு.க. அ.தி.மு.க. அம்மாவின் லட்சியமான இன்னும் 100 ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்யும். எனவே தி.மு.க.வுக்கு எதிர்காலம் இல்லை. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆகலாம் என்று கனவு காண்கிறார். அவரது கனவு பலிக்காது.

    மக்களை தூண்டிவிட்டு இந்த அரசுக்கு எதிராக எண்ணற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவரது கனவு பகல் கனவாகவே முடியும். எனவே மக்கள் நலனில் அக்கறை கொண்ட அ.தி.மு.க. இயக்கத்தை மக்கள் எப்போதும் ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×