search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை சட்டசபையில் முதல்-மந்திரி நாராயணசாமி பேசிய போது எடுத்த படம்.
    X
    புதுவை சட்டசபையில் முதல்-மந்திரி நாராயணசாமி பேசிய போது எடுத்த படம்.

    புதுவை சட்டசபையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக புதுவை சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    குறிப்பாக காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி காங்கிரஸ் ஆளும், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுவையிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    எனவே இந்த தீர்மானத்தை இங்கும் நிறைவேற்றுவது என்று காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்தது. இதற்காக சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததது.

    இதற்கு பாரதிய ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது. புதுவை மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் புதுவை சட்டசபைக்கு குறைவான அதிகாரங்களே உள்ளன. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்ப்பதற்கு இந்த சட்டசபைக்கு அதிகாரம் இல்லை.

    எனவே இந்த தீர்மானத்தை சட்டசபையில் விவாதிக்க அனுமதிக்க கூடாது என்று பாரதிய ஜனதா சார்பில் கவர்னரிடம் மனு கொடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் புதுவை யூனியன் பிரதேச சட்ட விதிகள்படி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தை பற்றி விவாதிக்க முடியாது.

    புதுவை சட்டசபைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள்.


    எனவே இந்த தீர்மானத்தை சட்டசபையில் விவாதத்திற்கு கொண்டுவரக்கூடாது என்று கூறி இருந்தார்.

    ஆனால் அதை காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று காலை சட்டசபை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க. பங்கேற்காமல் புறக்கணித்தது.

    பாரதிய ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை சபையில் தாக்கல் செய்தார்.

    இதைத்தொடர்ந்து தீர்மானம் மீது விவாதம் நடத்த சபாநாயகர் சிவக்கொழுந்து அனுமதி அளித்தார். அதில், அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் பாலன், காங்கிரஸ் உறுப்பினர்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தி.மு.க. உறுப்பினர்கள் கீதா ஆனந்தன், வெங்கடேசன், சுயேச்சை உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசினார்கள்.

    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்து பேசினார். தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

    இதனால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×