search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோதிமணி எம்.பி., செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. மற்றும் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
    X
    ஜோதிமணி எம்.பி., செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. மற்றும் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    வெற்றியை மாற்றி அறிவித்ததாக கூறி ஜோதிமணி, செந்தில் பாலாஜி உள்ளிருப்பு போராட்டம்

    கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றியை மாற்றி அறிவித்ததாக கூறி ஜோதிமணி எம்.பி., செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பதிவான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் 14- வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் கலையரசி, தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் லோகநாயகி ஆகியோர் போட்டியிட்டனர்.

    அதில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் கலையரசி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.

    இதேபோல் 2-வது வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன் வெற்றிபெற்றதாக நள்ளிரவில் தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.

    இதுப்பற்றி அறிந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணி, தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. மற்றும் கட்சியினர் காலை 7 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு வந்தனர்.

    பின்னர் அங்கு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் க.பரமத்தியில் பரபரப்பு நிலவியது. போராட்டம் தொடர்பாக செந்தில் பாலாஜி கூறியதாவது:-

    நியாயமாக நடுநிலையோடு நடக்கவேண்டிய உள்ளாட்சித் தேர்தலை அரசு எந்திரத்தை கொண்டு இரவோடு இரவாக அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றதாக அறிவித்து வருகின்றனர்.

    கரூரில் உள்ள 8 ஒன்றியங்களில் நள்ளிரவில் இரவோடு இரவாக முழு காவல் துறையையும், அரசு எந்திரத்தையும் கையில் வைத்துக்கொண்டு வாக்குச் சாவடிகளை கைப்பற்றி அங்கிருக்கும் முகவர்களை வெளியேற்றி விட்டு அவர்களாகவே வெற்றியை அறிவித்து வருகின்றனர்.

    பரமத்தி ஒன்றியத்தில் இரண்டு இடங்களை அ.தி.மு.க. கைப்பற்ற திட்டமிட்டு அதிகாரிகளை வைத்து தன்னிச்சையாக அவர்கள் வெற்றியை அறிவித்துள்ளனர்.

    பல வாக்குச்சாவடிகளில் முறையாக வாக்கு எண்ணிக்கை நடத்தாமல் தவறுதலாக கூட்டலில் பிழை ஏற்பட்டுவிட்டது எனக்கூறி அந்த வார்டுகளில் மீண்டும் எண்ணிக்கை நடத்தி அதில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது போல் அறிவித்து வருகின்றனர். க.பரமத்தி 14-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் லோகநாயகியின் வெற்றியை அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

    ஜோதிமணி எம்.பி. கூறுகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள 17 ஊராட்சி ஒன்றியங்களில் 10 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் எனது சொந்த ஊரான கூடலூர் பகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தும், முறைகேடாக அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அஞ்சூர் பஞ்சாயத்திலும் சட்டவிரோதமாக காங்கிரஸ் வெற்றி பறிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 8 மணிக்கே எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று அதிகாலை தேர்தல் அதிகாரிகள் முறைப்படி அறிவித்து சான்றிதழ் வழங்காமல் அ.தி.மு.க. வெற்றிபெற்றதாக தெரிவித்துள்ளனர்.

    கலெக்டர், திட்ட அலுவலர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை மிரட்டி இந்த வெற்றியை அறிவித்துவிட்டார்கள். மக்களின் தீர்ப்பை மதிக்காமல் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். வாக்குகள் வித்தியாசம் எப்படி இருந்தாலும் அதனை முறையாக அறிவிக்க வேண்டும். மக்களின் உரிமைகளையும், ஜனநாயகத்தையும் அதிகாரிகள் மதிக்கவில்லை என்றார்.

    நள்ளிரவு முதல் வாக்கு எண்ணும் மையத்தில் திரண்ட கட்சியினர் இன்று காலையும் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இதுவரை அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×