
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு, மாநகராட்சி மேயர், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில், மாநகராட்சி மேயர், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வேண்டி விருப்ப மனு அளித்துள்ளவர்கள், தாங்கள் சார்ந்த மாநகராட்சி வார்டு, நகர மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகிறவர்கள் 22.11.2019 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சம்பந்தப்பட்ட மாவட்டத் தலைநகரங்களில், விருப்ப மனுக்களைப் பெறுவதற்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கழக நிர்வாகிகளிடம், உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
மாநகராட்சி மேயர், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வேண்டி ஏற்கெனவே கட்டணம் செலுத்தி விருப்ப மனு அளித்துள்ளவர்கள், கழகப் பொதுக்குழு முடிந்தவுடன், தாங்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணத் தொகைக்கான அசல் ரசீதுடன் 25.11.2019 முதல் 29.11.2019 வரை தலைமைக் கழகத்திற்கு நேரில் வந்து, அத்தொகையினை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.