search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட் மதுரை கிளை
    X
    ஐகோர்ட் மதுரை கிளை

    7 பேர் கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர் விடுவிப்பு: தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு கண்டனம்

    மதுரை மேலவளவு ஊராட்சிமன்றத் தலைவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர் விடுதலையில் அரசாணையின் நகல் வழங்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 1996-ம் ஆண்டு பட்டியலினத்தைச்சேர்ந்த முருகேசன் வெற்றி பெற்றார். இதுதொடர்பாக இரு தரப்பினரிடையே முன் விரோதம் ஏற்பட்டது.

    இந்த விரோதத்தில் 1997-ம் ஆண்டில் முருகேசன் உள்பட 7 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உச்சநீதி மன்றத்திலும் இது உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 3 பேர் அண்ணா பிறந்த நாளையொட்டி நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டனர். தண்டனை பெற்றவர்களில் ஒருவர் இறந்து விட்ட நிலையில் தற்போது மீதம் உள்ள 13 பேரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    13 பேரின் விடுதலையை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த மூத்த வக்கீல் ரத்தினவேல் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

    அதில், எஸ்.சி-எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கொலை வழக்கில் உச்சநீதி மன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை ரத்து செய்ய சட்டத்தில் இடம் இல்லை. எனவே 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேர் விடுதலையின் அரசாணையின் நகல் வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் விதித்த ஒரு தண்டனை காலத்தை, தமிழக அரசு எளிதாக கையாண்டு குற்றவாளிகளை விடுவித்து இருப்பது கண்டனத்துக் குரியது. மேலும் 13 பேர் விடுதலை செய்யப்பட்டதின் அரசாணையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டன.

    மேலும் 13 பேர் விடுதலை வருத்தம் அளிக்கிறது. மனித உயிர் எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது. அரசாணை இதுவரை வழங்கப்படாத நிலையில் 13 பேரையும் அவசரமாக விடுவித்தது ஏன்? அவர்கள் என்ன சமூகத்திற்கு மிக முக்கியமானவர்களா? என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

    இதேபோல் தர்மபுரியில் பஸ் எரிப்பில் 3 மாணவிகள் இறந்த வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

    இதுபோன்ற சம்பவங்களால் பயம் குறைந்து சமூகத்தில் குற்றங்கள் அதிகரித்து வழிவகுக்கும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

    மதுரை மேலவளவு ஊராட்சிமன்றத் தலைவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட 13 பேர் விடுதலை செய்யப்பட்டதன் ஆவணங்களை சமர்ப்பித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை நாளை (19-ந் தேதி) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×