search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுக்கும் பகுதி அடையாளமிடப்பட்டுள்ளதை காணலாம்.
    X
    கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுக்கும் பகுதி அடையாளமிடப்பட்டுள்ளதை காணலாம்.

    கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் பணிகளுக்கு மக்கள் எதிர்ப்பு

    திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் பணிகளுக்கு மக்கள் எதிர்ப்பால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருக்காட்டுப்பள்ளி:

    திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சினம்பூண்டி கிராம பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை தீர்மானித்து அளவீடு பணிகளை தொடங்கியது. இங்கு மணல் குவாரி அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் என்று அனைத்து கட்சியினர் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பணிகள் நிறுத்தப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் அளவீடு செய்யப்பட்டு சுற்று வட்டத்தில் கற்கள் நடப்பட்டன.

    மணல் குவாரிக்கான அலுவலகம் ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது, அதில் கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்பட்டுள்ளது. இவற்றை கண்ட திருச்சினம்பூண்டி கிராம விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

    இதையடுத்து மணல் குவாரி அமைய உள்ள இடத்தில் இன்ஸ்பெக்டர் கென்னடி, கிராம நிர்வாக அதிகாரி பரமேஸ்வரி ஆகியோர் முகாமிட்டனர். திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன், மணல் எடுப்பதற்கான சிறப்பு உதவி பொறியாளர்கள் ராஜா,அன்புச்செல்வன் ஆகியோரும் மணல் எடுக்க உள்ள கொள்ளிடம் ஆற்றுப் பகுதிக்கு வந்தனர்.

    பின்னர் கோவிலடி கிராம நிர்வாக அலுவலகத்தில் போராட்டக்குழு சார்பில் திருச்சினம்பூண்டி ராஜேந்திரனுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அரசு மற்றும் உயர்நீதிமன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு மணல் எடுக்கப்படும். அனைத்தையும் கண்காணிக்க கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்பட்டுள்ளது, அரசே நேரடியாக மணல் விற்பனை செய்வதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.

    இதுகுறித்து மற்றவர்களிடம் கலந்து பேசி தெரிவிப்பதாக ராஜேந்திரன் தெரிவித்தார். இந்த பேச்சு வார்த்தையில் அகரப்பேட்டை வருவாய் ஆய்வர் பிரவீண், கோவிலடி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர். காலையில்இருந்து பரபரப்பாக இருந்த கொள்ளிடம் ஆற்று பகுதி பேச்சு வார்த்தைக்கு பின்னர் அமைதியானது.

    Next Story
    ×