search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    அதிமுக ஆட்சி கவிழ்வது கனவல்ல, விரைவில் நனவாகும் - முக ஸ்டாலின்

    கோமா நிலையில் இருக்கும் அதிமுக ஆட்சி கவிழ்வது கனவல்ல; விரைவில் நனவாகும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    சென்னை:

    தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணையும் விழா பொதுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கின்றது, விசாரணை கமி‌ஷன் வைக்க வேண்டும் என்று முதன் முதலில் சொன்னது யார் என்று கேட்டால் ஓ.பி.எஸ். அவரை சமாதானம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. இன்றைக்கு ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த விசாரணைக் கமி‌ஷன் தொடர்ந்து நீடித்துக் கொண்டு, முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

    அந்த விசாரணை கமி‌ஷனில் இருந்து முதன் முதலில் சொன்ன ஓ.பி.எஸ்யை கூப்பிட வேண்டும் என்று 6 முறை சம்மன் அனுப்பி இருக்கிறார்கள் இதுவரையில் ஒரு முறை கூட அதை ஏற்றுக்கொண்டு ஆஜராகாத ஒருவர் தான் இன்றைக்கு துணை முதல்-அமைச்சராக இருக்கக்கூடிய ஓ. பன்னீர் செல்வம் என்பதை மறந்து விடாதீர்கள்.

    தி.மு.க. முறையாக தேர்தலை சந்தித்து 234 தொகுதிகளில் குறைந்தது 200 தொகுதிகளாவது தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்து கம்பீரமாக இழுபறியாக இல்லாமல் ஆட்சி அமைக்கும்.

    இன்றைக்கு சாகப் போறானோ நாளைக்கு சாகப் போறானோ என்று ஐ.சி.யூ.வில் இருக்கின்றது இப்பொழுது இருக்கக்கூடிய ஆட்சி அதை மறந்து விடாதீர்கள். ஐ.சி.யூ என்று கூட சொல்லமாட்டேன் கோமா நிலையில் இருக்கின்றது. ஐ.சி.யூ.வில் இருப்பவனைக்கூட காப்பாற்றி விடலாம். ஆனால், இப்போது இருக்கக்கூடிய ஆட்சி கோமா நிலையில் இருக்கின்றது.

    பாராளுமன்றம்

    நம் முகத்தைப் பார்த்து நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள் அந்த வெற்றி தான் இன்றைக்கு நாம் பெற்றிருக்கக்கூடிய வெற்றி. அதற்காக தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த மக்களுக்கும் நான் இந்த நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டவனாக இருக்கின்றேன்.

    இன்று இல்லை என்றாலும் நாளைக்கு நாம் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். தி.மு.க. தான் நாளைக்கு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப் போவது. நீங்கள் எல்லோரும் மறந்து விடுவீர்களா, தேர்தல் நேரத்தில் தந்திருக்கக்கூடிய அத்தனை உறுதிமொழிகளையும் மீண்டும் தேர்தலை நாம் சந்திக்கின்ற நேரத்தில் தரப்படுகின்ற அந்த தேர்தல் வாக்குறுதிகளையும் ஒட்டு மொத்தமாக சேர்த்து நிறைவேற்றுவோம்.

    பள்ளிக் கல்வியில் இந்தி கட்டாயமாக இருக்க வேண்டும் என்று முயற்சி எடுத்த நேரத்தில் அதை திரும்பப் பெற வைத்தது நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தான். ரெயில்வே துறையில் தமிழும் பேசக்கூடாது ஆங்கிலத்திலும் பேசக்கூடாது இந்தியில் பேச வேண்டும் என்று ஒரு அறிவிப்பு சர்குலர் அனுப்பியதும், அனுப்பிய 1 மணி நேரத்தில் அதை திரும்பப் பெற வைத்திருக்கின்றோம் என்றால் அது நம்முடைய தி.மு.க.வின் எம்.பி.க்களால் தான் என்பதை மறந்து விடக் கூடாது. அதேபோல் தபால் துறையில் தேர்வு எழுதுவதற்கு தமிழ் கிடையாது இந்தி மட்டும் தான் என்ற அறிக்கையை எதிர்த்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தோம். என்ன பலன் கிடைத்திருக்கிறது என்றால் நடத்திய தேர்வை ரத்து செய்து இனி தமிழிலும் தேர்வு எழுதலாம் என்ற உத்திரவாதத்தை பெற்றிருக்கக்கூடிய கட்சி தான் தி.மு.க.

    ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும், மீத்தேன் திட்டமாக இருந்தாலும் இன்றைக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

    ஒரு பக்கம் காவேரி பிரச்சினை சேலம் உருக்காலை பிரச்சினை ‘நெக்ஸ்ட்’ தேர்வு பிரச்சனை, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை இப்படி பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலையில் பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

    சட்டமன்றத்தில் நாள் தோறும் குரல் கொடுத் திருக்கின்றோம் இது தான் தி.மு.க.வின் வரலாறு. இந்த நிலையில் தான் நாம் நம்முடைய பணியை ஆற்றிக் கொண்டு இருக்கின்றோம். எனவே நான் மீண்டும் சொல்லுகின்றேன் நடந்திருக்கக்கூடிய தேர்தலில் பாராளுமன்றத்தில் இது ஒரு மிகப்பெரிய வெற்றி அதை நான் மறுக்கவில்லை. அது நமக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய அங்கீகாரம். அதேபோல், சட்டமன்றத் திற்கான இடைத்தேர்தல் இது ஆட்சிக்காகவோ, ஆட்சி மாற்றத்திற்காக நடைபெற்ற தேர்தல் அல்ல.

    ஆட்சியை கவிழ்க்க கனவு கண்டு கொண்டிருக்கின்றார்கள் என்று தொடர்ந்து நம்மை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் கனவெல்லாம் காண வேண்டிய அவசியம் இல்லை நினைவாகவே விரைவில் நடக்கப்போகின்றது அப்படி நடக்கப்போகக்கூடிய சூழ் நிலைக்கு உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் விரைவில் தயாராக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×