search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் இடைத்தேர்தல்: உதயநிதி ஸ்டாலினை களம் இறக்க ஆலோசனை
    X

    திருவாரூர் இடைத்தேர்தல்: உதயநிதி ஸ்டாலினை களம் இறக்க ஆலோசனை

    திருவாரூர் தொகுதியில் வருகிற 28-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளதால் உதயநிதி ஸ்டாலினை களம் இறக்க ஆலோசனை நடந்து வருகிறது. #thiruvarurbyelection #UdhayanidhiStalin #mkstalin

    சென்னை:

    திருவாரூர் தொகுதியில் வருகிற 28-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தி.மு.க.வும், அ.தி. மு.க.வும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இன்றும் நாளையும் இரு கட்சிகளும் விருப்ப மனுக்களை வாங்குகின்றன.

    விருப்ப மனு கொடுப்பவர்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார். அன்றே தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்பதும் விரைவில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் திருவாரூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் யாரை களம் இறக்குவது என்பது குறித்து நேற்று மு.க.ஸ்டாலின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று காலை அண்ணா அறிவாலயத்திலும், மாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டிலும் இந்த ஆலோசனை நடந்தது.

    திருவாரூர் தொகுதியில் இருந்து கருணாநிதி 2 முறை தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாராவது ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. மூத்த தலைவர்களில் சிலர் கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கருணாநிதியின் மகள்கள் செல்வி, கனிமொழி ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.

    ஆனால் அவர்களை இடைத்தேர்தலில் நிறுத்த வேண்டாம் என்று சில மூத்த உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.


    இதைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலினை திருவாரூர் தொகுதியில் போட்டியிட செய்யலாமா? என்று 2 மூத்த உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் இந்த கருத்து எழுந்த உடனே மு.க.ஸ்டாலின் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

    கொளத்தூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் நிலையில் அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு இன்னொரு தொகுதி இடைத்தேர்தலில் நிற்பது நல்லதல்ல என்று அவர் கூறியதாக தெரிகிறது. மேலும் தேவையில்லாமல் கொளத்தூர் தொகுதிக்கு ஏன் இடைத்தேர்தல் நடத்த செய்ய வேண்டும் என்று அவர் அந்த திட்டத்துக்கு ஆரம்பத்திலேயே முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.

    இந்த நிலையில் திருவாரூர் தொகுதி வேட்பாளர் பற்றி இன்றும் தி.மு.க. மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இன்று மாலை மு.க.ஸ்டாலினை மீண்டும் சந்தித்து பேச உள்ளனர். அப்போது திருவாரூரில் போட்டியிட ஸ்டாலினை வலியுறுத்துவோம் என்று மூத்த தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அந்த மூத்த தலைவர் மேலும் கூறியதாவது:-

    திருவாரூர் தொகுதியில் கலைஞர் போட்டியிட்ட 2 தடவையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். அந்த தொகுதியில் மீண்டும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.வை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது எங்களது விருப்பமாகும்.

    திருவாரூரில் தற்போதைய சூழ்நிலையில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்றால் அதற்கு தகுதியான வேட்பாளர் மு.க.ஸ்டாலின் ஒருவர்தான். எனவேதான் அவரை களம் இறக்க நாங்கள் விரும்புகிறோம். அவர் பெறும் இமாலய வெற்றி பாராளுமன்ற தேர்தலுக்கு புத்துணர்ச்சியுடன் பணியாற்ற உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருசாரார் மனநிலை இவ்வாறு இருக்க மற்றொரு சாரார் இதை ஏற்க மறுத்தனர். மு.க.ஸ்டாலினை திருவாரூர் தொகுதியில் போட்டியிட சொல்வது அவசியம் இல்லாதது என்று கூறி உள்ளனர். இதையே மு.க.ஸ்டாலினும் ஏற்றுக் கொண்டு இருப்பதாக தெரியவந்து உள்ளது.

    மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை அவர் முக்கியமான ஒரு வேட்பாளரை தேர்வு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. அது பற்றிய விவரங்கள் 4-ந்தேதி மாலை வேட்பாளர் நேர்காணல் முடிந்த பிறகு முழுமையாக தெரிந்து விடும்.

    இதற்கிடையே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினை திருவாரூர் தொகுதியில் களம் இறக்கலாம் என்ற யோசனை தி.மு.க. மூத்த தலைவர்கள் முன் எழுந்து உள்ளது. உதயநிதி ஸ்டாலின் படங்களில் நடித்து மக்கள் மனதில் அறிமுகமாகி இருப்பதால் அவருக்கு திருவாரூர் தொகுதியில் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது.

    உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக இளைஞர் அணி நிர்வாகிகள் உள்பட பல்வேறு அணிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தி.மு.க.வின் அடுத்த தலைமுறை தலைவர் என்பதால் இப்போதே உதயநிதிக்கு அந்த வாய்ப்பை வழங்கலாம் என்றும் சில மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் தற்போது உதயநிதிக்கு தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. எனவே அவரை திருவாரூர்தொகுதி இடைத்தேர்தலில் களம் இறக்கும் யோசனைக்கு ஆதரவு பெருகி உள்ளது.

    உதயநிதியின் இந்த அரசியல் பிரவேசத்துக்கு மு.க. ஸ்டாலின் பச்சை கொடி காட்டுவாரா? நாளை மறுநாள் தெரிந்துவிடும். #thiruvarurbyelection #UdhayanidhiStalin #mkstalin

    Next Story
    ×