search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம், புதுவையில் 3 நாட்கள் மழை பெய்யும்- வானிலை மையம் தகவல்
    X

    தமிழகம், புதுவையில் 3 நாட்கள் மழை பெய்யும்- வானிலை மையம் தகவல்

    தமிழகம் மற்றும் புதுவையில் வருகிற 29-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. #IMD #TNRains
    சென்னை:

    வங்க கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி அரபிக் கடலுக்கு சென்று விட்டது.

    அதன் பிறகு தமிழகத்தின் மேல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது.

    மழை படிப்படியாக குறைந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகம்-புதுவையில் வறண்ட வானிலை நிலவுகிறது. இது மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் வியட்நாம், தாய்லாந்தையொட்டியுள்ள சியாம் வளைகுடா பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது அந்தமான் கடல் பகுதிக்கு பரவிவருகிறது.

    தொடர்ந்து மேற்கு திசை நோக்கி காற்று விசுவதால் அந்தமான் கடல் பகுதியில் 2 நாளில் மேலடுக்கு சுழற்சி உருவாகி வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) தமிழக கடற்கரை பகுதி வரை பரவுகிறது.

    இதனால் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகிறது.

    வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் டிசம்ப ர் 1-ந்தேதி வரை 3 நாட்கள் மழை பெய்யும் என்றும், 30-ந்தேதியும், டிசம்பர் 1-தேதியும் மிக பலத்த மழை இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


    வடமாவட்டங்களில் மிதமாகவும், தென் மாவட்டங்களில் மிக பலத்த மழையும் பெய்யும். அதன் பிறகு டிசம்பர் முதல் வாரத்திலும் மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    சென்னையை பொறுத்த வரை வடகிழக்கு பருவமழையானது சராசரி அளவைக் காட்டிலும் 47 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. சென்னையில் இந்த சீசனில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவான 60 செ.மீ.க்கு பதில் 32 செ.மீ. மட்டுமே பெய்துள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் முடிய இருக்கிறது. இனிவரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வானிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இடைவெளிவிட்டு மீண்டும் மழை பெய்யும். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை காட்டிலும் தர்மபுரி, கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

    சென்னையில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் ஒரு சில நேரங்களில் வெப்பம் அதிகரித்து இருந்தது. அதிகபட்சமாக நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் 30.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. நாளை வெப்பம் மேலும் அதிகரித்து 31டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.  #IMD #TNRains
    Next Story
    ×