search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சிகள் முடிவு
    X

    முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சிகள் முடிவு

    இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 10-ந்தேதி நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கட்சிகள் முடிவெடுத்துள்ளது. #PetrolPriceHike #DMK #Congress
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது. அதை கண்டித்தும் பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வலியுறுத்தியும், பெட்ரோல் மீதான வரியை மத்திய-மாநில அரசுகள் குறைக்க கோரியும் வருகிற 10-ந்தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த போராட்டத்துக்கு பா.ஜனதாவுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.

    இந்த நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கிரிராஜன், ஹான்ஸ்டன் டைன் (தி.மு.க.), மல்லை சத்யா (ம.தி.மு.க.) வீரபாண்டியன் (இந்திய கம்யூ.), ஆறுமுக நயினார் (மார்க்சிஸ்ட் கம்யூ.), பாலாஜி, வன்னியரசு (விடுதலை சிறுத்தை), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), அன்புராஜ் (தி.க.), கண்ணன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி), கதிரவன் (பார்வர்டு பிளாக்), முகமது முபாரக் (எஸ்.டி.டி.பி.ஐ.) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தை முழு அளவில் வெற்றி பெற செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த முழு அடைப்பின் நோக்கத்தையும், பெட்ரோல்- டீசல் விலை உயர்வையும் மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில் போராட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

    மக்கள் பிரச்சனைக்காக அனைத்து கட்சிகளும் முன் எடுத்துள்ள இப்போராட்டத்துக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து பொதுமக்கள் பல்வேறு அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிலாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    அனைத்து கட்சி கூட்டம் 11 மணிக்கு தொடங்கியது. கூட்டத்துக்கு வந்த தலைவர்களை முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகர், எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் சொர்ணசேதுராமன், தாமோதரன், பவன்குமார், தமிழ்செல்வன், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாட்சா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    கூட்டம் முடிந்ததும் அனைத்து கட்சி தலைவர்களும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது திருநாவுக்கரசர் கூறியதாவது:-


    இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முழு அடைப்பு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் முழு அடைப்பை வெற்றிகரமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் முடிவெடுத்துள்ளன.

    அதன்படி அன்று அனைத்து கடைகளும் அடைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெறும். வணிகர் அமைப்புகள் அனைத்தும் கடைகளை அடைப்பதாக உறுதி அளித்துள்ளன. இன்றைய கூட்டத்தில் பங்கேற்காத கட்சிகளிடமும் ஆதரவு கேட்டுள்ளோம்.

    பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, கமல்ஹாசன் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினேன். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை சொல்வதாக தெரிவித்துள்ளார்கள். முழு அடைப்பு நாளன்று பால், மருந்து ஆகியவற்றுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படும். மற்ற அனைத்தும் மூடப்படும். பொதுமக்களின் சுமையை குறைக்க நடத்தப்படும். போராட்டத்துக்கு மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PetrolPriceHike #DMK #Congress

    Next Story
    ×