search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியாக கட்சி தொடங்க மாட்டேன்- மு.க. அழகிரி
    X

    தனியாக கட்சி தொடங்க மாட்டேன்- மு.க. அழகிரி

    தனியாக கட்சி தொடங்க மாட்டேன் என்றும், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 1 மாதத்தில் தெரிவிப்பதாகவும் மு.க. அழகிரி கூறினார். #DMK #MKAzhagiri #Karunanidhi #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி நேற்று சென்னையில் திடீரென அடுத்தடுத்து அளித்த பேட்டிகள் அரசியல் களத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் அனைவரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று கூறிய அவர், கட்சி தொடர்பான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

    மு.க.அழகிரியின் இந்த பேட்டியால், தி.மு.க.வில் அவருக்கும், செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டு இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இந்த சலசலப்பை பொது மக்களும், அரசியல் நிபுணர்களும் உற்றுப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

    ஸ்டாலினைப் பொருத்த வரை அவர் இன்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தை கூட்டி முடித்து விட்டார். அடுத்த மாதம் பொதுக்குழு கூட உள்ளது. அதில் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டு விடுவார். இதன் தொடர்ச்சியாக தி.மு.க. சார்பில் 5 நகரங்களில் நடத்தப்படும் “கருணாநிதிக்கு புகழ் வணக்கம்” தெரிவிக்கும் கூட்டங்களில் அவர் ‘பிசி’யாகி விடுவார்.

    இந்த நிலையில் மு.க. அழகிரியின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் எப்படி இருக்கும் என்பதே மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர் பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இதற்கு விடை காண மு.க.அழகிரியை “மாலை மலர்” நிருபர் தொடர்பு கொண்டு பேட்டி கண்டார்.

    அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு மு.க. அழகிரி அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. செயற்குழு இன்று கூடுகிறதே?

    பதில்:- செயற்குழுவிற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.

    கேள்வி:- உங்கள் ஆதரவாளர்களை திரட்டி எப்போது அடுத்த கட்ட முடிவு எடுப்பீர்கள்?

    பதில்:- ஒரு மாதம் காத்திருங்கள். அதன்பிறகு நல்ல முடிவை எதிர்பார்க்கலாம்.

    கேள்வி:- மதுரையில் “கலைஞர் தி.மு.க.” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதே? நீங்கள் புதிய கட்சி தொடங்க திட்டமா?

    பதில்:- தனியாக கட்சி தொடங்கும் எண்ணம் கிடையாது. பொறுத்திருங்கள்.

    கேள்வி:- உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும்?


    பதில்:- தி.மு.க. தலைவர் சமாதியில் எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். அவர் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கிறார். விரைவில் நல்ல முடிவு வரும்.

    கேள்வி:- தி.மு.க.வில் உங்களை மீண்டும் சேர்க்கக் கூடாது என பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதே?

    பதில்:- என் பாதை தனி. அந்த பாதையில் நான் போய் கொண்டே இருப்பேன்.

    இதற்கிடையே மு.க. அழகிரி தனது குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேலும் சில பேட்டிகளில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் மு.க.அழகிரி கூறி இருப்பதாவது:-

    தி.மு.க.வில் சில தவறுகள் நடக்கிறது. அதனால்தான் என்னை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்க அவர்கள் பயப்படுகிறார்கள். என்னை கட்சியில் சேர்த்தால் தவறுகளை சுட்டிக்காட்டி கேள்வி கேட்பேன் என்று பயப்படுகிறார்கள். எனவே என்னை கட்சியில் திரும்ப சேர்க்க மாட்டார்கள்.

    நான் வெளிப்படுத்திய ஆதங்கம் எங்கள் குடும்பம் சம்பந்தப்பட்டது இல்லை. கட்சி தொடர்பானது. தி.மு.க.வுக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அந்த சொத்துக்களும், கட்சி நிதிகளும் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது.

    தி.மு.க. நிதி வட்டிக்கு விடப்பட்டுள்ளது. அந்த வட்டியில் இருந்து கிடைக்கும் லாபம் கட்சிக்கு வரவில்லை. அந்த லாப பணம் எங்கே போகிறது? கட்சியில் இருப்பவர்களுக்கு இந்த தவறு நன்கு தெரியும். தி.மு.க. நிதியில் இருந்து கிடைக்கும் லாபத்தால் யார்-யார் பயன் அடைகிறார்கள் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்.

    நான் தி.மு.க.வில் இருந்திருந்தால் இந்த தவறை செய்ய விட்டு இருக்க மாட்டேன். அதனால்தான் என்னை கட்சியில் சேர்க்க அவர்கள் விரும்பவில்லை. என்றாலும் கட்சி நிதி மற்றும் சொத்துக்களை சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

    நான் இப்படி சொல்வதால் தலைவர் பதவிக்கு ஆசைப்படுகிறேன் என்று அர்த்தம் அல்ல. தலைவராக எனக்கு விருப்பமும் இல்லை. ஆசையும் இல்லை. எனது தந்தையை போல கட்சிக்கு உழைக்கவே நான் ஆசைப்படுகிறேன். தொண்டனாகவே இருந்து தி.மு.க.வை வலிமைப்படுத்த செயல்படுவேன்.

    தி.மு.க.வின் அடிப்படை கொள்கைகள், சித்தாந்தம் அனைத்தும் தனிப்பட்ட சிலரது சுயநலத்துக்காக பாதிக்கப்பட்டுள்ளன. தங்கள் நலனை முன் நிறுத்தி தி.மு.க.வின் கொள்கைகளை விட்டுக் கொடுத்து சமரசம் ஆகி விட்டனர்.

    2009-ம் ஆண்டு தேர்தலின்போது கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை தி.மு.க.வுக்கு முதன் முதலாக பெற்று அங்கு தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தோம். ஆனால் 2014-ம் ஆண்டு அதே தொகுதியில் தி.மு.க. 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதில் இருந்தே தி.மு.க.வில் உள்ளவர்களின் அணுகு முறை எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

    தி.மு.க. தற்போது இருக்கும் நிலையிலேயே திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தால் தோல்விதான் கிடைக்கும். சரியானபடி திட்டமிடாவிட்டால் தி.மு.க.வுக்கு ஆர்.கே.நகரில் என்ன நிலை ஏற்பட்டதோ அந்த நிலைதான் ஏற்படும். மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு விடும்.

    எனவேதான் தி.மு.க.வை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்கள் என்னை கட்சி பணியாற்ற விரும்புகிறார்கள். நானும் நீண்ட நாட்களாக இருந்த ஆதங்கத்தை வெளியிட்டுள்ளேன். இனி என் தந்தை பார்த்துக் கொள்வார்.

    தற்போது நான் வெளியிட்டுள்ள கருத்து என் குடும்பத்தினரால் வந்தது இல்லை. என்னை கட்சியில் சேர்க்க குடும்ப உறவுகள் யாரும் எந்த முயற்சியும் செய்யவில்லை. அவர்களது நோக்கம் என்ன என்றும் தெரியவில்லை. என் தந்தையிடம் தவறான தகவலை சொல்லியே என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள்.


    என் தந்தை உயிருடன் இருந்தால், நிச்சயம் ஒருநாள் என்னை மீண்டும் கட்சியில் சேர்த்து இருப்பார். அவருக்கு என்னைப் பற்றி தெரியும். கட்சிக்காக நான் எப்படி கடினமாக உழைப்பேன் என்பதும் அவருக்குத் தெரியும்.

    கட்சிக்காக நான் பல தடவை வெற்றி தேடி கொடுத்துள்ளேன். வெற்றியோ தோல்வியோ... கட்சிக்காக நான் கடுமையாக பாடுபட்டுள்ளேன். சட்டசபை தேர்தலின்போது என்னை ஆண்டிப்பட்டி தொகுதி பொறுப்பாளராக நியமனம் செய்திருந்தனர்.

    அப்போது அந்த தொகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டார். நான் களப்பணி ஆற்றியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா அந்த தொகுதியில் மேலும் 2 நாட்கள் தங்கி இருந்து பிரசாரம் செய்து விட்டுப் போனார்.

    தி.மு.க.வின் வளர்ச்சி தற்போது முடங்கியுள்ளது. ஸ்டாலின் தலைமையில் கட்சி மோசமாகி விட்டது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு ஒன்றே அதற்கு உதாரணமாக உள்ளது. கட்சிக்கு இன்னும் பல பிரச்சனைகள், சோதனைகள் வர உள்ளது. அதையெல்லாம் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

    இப்போதே சில தி.மு.க. தலைவர்கள் ரஜினியுடன் தொடர்பில் இருக்கிறார்கள். தலைவர் இருந்த போதும் கட்சியில் மாறுபட்ட கருத்துக்கள் எழும். ஆனாலும் தலைவர் கட்சியை திறம்பட வழி நடத்திச் சென்றார். அது அவரது பாணி.

    ஸ்டாலினுக்கு அந்த தந்திரங்கள் தெரியவில்லை. அவர் ஒரு குழு போல செயல்படுகிறார். கட்சியில் உள்ள மற்றவர்கள் பற்றி அவர் கண்டுகொள்வதே இல்லை.

    தி.மு.க.வில் என்னை மீண்டும் சேர்க்கும்படி நான் ஒரு போதும் கேட்கமாட்டேன். அவர்களாக என்னை கட்சியில் சேர்க்க வேண்டும். ஆனால் அப்படி சேர்க்கமாட்டார்கள்.

    அப்படி நான் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டால் எனக்கு முக்கியத்துவம் வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். அதோடு கட்சியில் நான் முக்கியமான ஆளாக மாறிவிடுவேன் என்று நினைக்கிறார்கள். என் மீதான இந்த கெட்ட எண்ணத்தால்தான் என்னை கட்சியில் சேர்க்காமல் இருக்கிறார்கள்.

    நான் இப்போது சிறிதளவு தான் எனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளேன். விரைவில் இதுபற்றி முழுமையான தகவல்களை தெரிவிப்பேன். தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஆலோசனை நடத்திவிட்டு பதில் சொல்வேன்.

    நான் அதிரடியாக எந்த முடிவும் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு விட்டது. காலம் வரும் போது அவை வெளியில் வரும்.

    தற்போதைய தி.மு.க. தலைமை ஆளும் கட்சியான அ.தி.மு.க.வை எதிர்த்து சரியான முறையில் அரசியல் செய்யவில்லை. முட்டை கொள்முதல் மற்றும் வினியோகத்தில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. ஆனால் அதை தி.மு.க. தலைமை கண்டுக்கொள்ளவில்லை.

    அதுபோல சென்னை- சேலம் இடையே அமைக்க திட்டமிட்டுள்ள பசுமைவழி திட்டம் மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. ஆனால் தி.மு.க. தலைமை அந்த பிரச்சனையை சரியான முறையில் கையாளவில்லை. ஒரு அறிக்கை மட்டும் வெளியிட்டனர். அறிக்கை மட்டும் வெளியிட்டால் போதுமா?

    ஆளும் கட்சியான அ.தி.மு.க.வை தி.மு.க. சரியான முறையில் எதிர்க்கொள்ளவில்லை. கடுமையாக எதிர்த்து போராடவும் இல்லை. அரசுக்கு ஆதரவாக மாறிவிட்டார்கள். ஆளும் கட்சியுடன் அவர்களுக்கு ரகசிய உடன்பாடு உள்ளது. அவ்வளவுதான்.

    இவ்வாறு மு.க.அழகிரி கூறினார். #DMK #MKAzhagiri #Karunanidhi #MKStalin
    Next Story
    ×