search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கலில் ஒரே நாளில் 3 பேர் படுகொலை: போலீசார் விசாரணை
    X

    திண்டுக்கலில் ஒரே நாளில் 3 பேர் படுகொலை: போலீசார் விசாரணை

    திண்டுக்கலில் இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி உள்பட 3 துப்புரவு தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் இன்று ஒரே நாளில் 3 துப்புரவு தொழிலாளர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

    மனதை கதிகலங்க வைத்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    திண்டுக்கல் நெட்டு தெருவை சேர்ந்தவர் குருசாமி. அவரது மகன்கள் பில்லி வீரா என்ற மதுரைவீரன் (வயது39). சரவணன் (37). இவர்களது பாலமுருகன் (45). இவர்கள் 3 பேரும் துப்புரவு தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    இன்று காலை துப்புரவு வண்டியுடன் பணிக்கு சென்றனர். பாலமுருகன் திண்டுக்கல் சிலுவத்தூர் ரோட்டில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம கும்பல் பாலமுருகனை கீழே தள்ளி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    மதுரை வீரன் திண்டுக்கல் நாகல்நகர் அருகில் உள்ள பாவா லாட்ஜ் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவரையும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் மதுரை வீரன் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    வீராவின் தம்பி சரவணன் என்.வி.ஜி.பி. தியேட்டர் ரோட்டில் சவுராஸ்டிரா காலனியில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரையும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடியது. இதில் சரவணன் துடிதுடித்து இறந்தார்.

    அடுத்தடுத்து நடந்த இந்த கொலை சம்பவங்கள் திண்டுக்கல் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காலையில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு மாணவர்கள் சென்று கொண்டிருந்த நேரத்திலும், அலுவலகத்திற்கு பணியாளர்கள் சென்ற நேரத்திலும் இந்த கொலை சம்பவம் நடந்து என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனையடுத்து இறந்தவர்களின் உடல்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டன.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி உள்பட 3 பேர் அடுத்தடுத்து வெட்டி கொலை செய்யப்பட்டதால் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அவர்களது உறவினர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

    இதனால் ஆஸ்பத்திரி வளாகமே மிகுந்த பரபரப்புக்கு உள்ளானது. சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் மற்றும் வடக்கு, தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விரைந்து வந்தனர்.

    அவர்களிடம் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், இதற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கதறி அழுதனர். போலீசார் அவர்களை ஆறுதல் படுத்தினர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் இந்த கொலைகள் பழிக்கு பழியாக நடத்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நெட்டுதெருவை சேர்ந்த சோமு என்ற சோமசுந்தரம் என்பவர் கிழக்கு ரத வீதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    அந்த கொலை வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்ட வீரா, சவணன், பாலமுகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளி வந்தனர். எனவே பழிக்கு பழியாக அவர்கள் இன்று ஒரே நாளில் தீர்த்து கட்ட முடிவு செய்து இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என தெரிவித்தனர்.

    திண்டுக்கல் நகரில் இதற்கு முன்பு இதுபோன்ற கொடூரமான கொலைகள் நடந்ததில்லை என்பதால் ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த 3 கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவங்களை அடுத்து திண்டுக்கல் நகரில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    வாககனங்களில் செல்பவர்களையும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களையும் தீவிரமாக கண்காணித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×