search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் தயார் நிலையில் மருத்துவ குழுவினர் : அமைச்சர் விஜயபாஸ்கர்
    X

    தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் தயார் நிலையில் மருத்துவ குழுவினர் : அமைச்சர் விஜயபாஸ்கர்

    தியாகராய நகரில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் அவசர சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக டாக்டர்கள் தயாராக உள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை சில்க்ஸ் கட்டிடம் இருக்கும் பகுதியில் புகை மூட்டத்தால் பொது மக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டாலோ அல்லது மீட்பு குழுவினருக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டாலோ அதற்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும், மருந்து உள்ளிட்ட உபகரணங்கள் அடங்கிய வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. டாக்டர்கள் குழுவினரும் அங்கு குவிந்துள்ளனர்.

    இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ குழுவினரை சந்தித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீ விபத்தில் ஏற்பட்ட கரும்புகை தற்போது குறைந்துள்ளது. இருப்பினும் அதனால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவசர சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக டாக்டர்கள் தயாராக உள்ளனர். சுகாதாரத்துறை சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வகையில் மருத்துவ குழு இங்கு பணியில் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் உஸ்மான் ரோடு மேம்பாலத்தில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக தி.நகர் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இணை கமி‌ஷனர் பவானீஸ்வரி தலைமையில் துணை கமி‌ஷனர் அரவிந்தன் உள்ளிட்ட போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


    மாம்பலம் போக்குவரத்து போலீசாரும் வெளியிடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த போக்குவரத்து போலீசாரும் மாற்று பாதைகளில் வாகனங்கள் செல்ல வழி செய்தனர்.

    மாம்பலம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் சென்னை சில்க்ஸ் கட்டிடம் இருக்கும் பகுதியில் போக்குவரத்து போலீசாரை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
    Next Story
    ×