search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
    X

    நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

    அரசியலில் நடிக்கும் தலைவர்களுக்கு மத்தியில் நடிகர் ஒருவர் அரசியலுக்கு வருவது எவ்வளவோ மேல் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

    மதுரை:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழில் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்கான நடவடிக் கையை மோடி அரசு செய்து வருகிறது.

    மோடி தலைமையிலான அரசு கடந்த 3 ஆண்டுகளாக மீனவர் பிரச்சினையில் நிரந்தர தீர்வுக்காக குரல் கொடுத்து வருகிறது. தமிழக மீனவர் பிரதிநிதிகள், மத்திய அரசுடன் 6 தடவை பேச்சு நடத்தும் அளவுக்கு சுமூக சூழ்நிலை உருவாகி உள்ளது.

    தமிழக மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிக்கும் தொழிலில் போதிய வசதிகள் செய்து தர மத்திய அரசு தயாராகி வருகிறது. இதற்காக மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் முதல் தடவையாக 100 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. இதே போன்று இந்திய நிதி ஆயோக் மூலமாக 100 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது.

    இதன் மூலம் 750 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை மீனவர்கள் பெற முடியும். இதில் 50 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குகிறது. 40 சதவீத நிதி கூட்டுறவு வங்கிகள் தருகின்றன. மீதமுள்ள 10 சதவீத நிதியை மீனவர்கள் வங்கி கணக்கில் செலுத்தினால் போதும்.

    தமிழகத்தில் மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன் பிடிக்கும் பயிற்சியை தந்து வருகிறோம். ஒரு குழுவிற்கு 20 பேர் என்ற அடிப்படையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மீனவர்களில் யார் யாருக்கு பயிற்சிகள் தர வேண்டும் என்பதை மாநில அரசு பரிந்துரை செய்து வருகிறது. தமிழகத்தில் மூக்கையூர், குட்டிக்கால் மீன் பிடி துறைமுகங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    மதுரை மாவட்டத்தை பொறுத்த வரை அகல இரட்டை பாதை மற்றும் மின் மயமாக்குதல் பணிகளில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

    இதில் ஒரு பகுதியாக ரூ. 3,400 கோடி செலவில் மதுரை, கன்னியாகுமரி, மணியாச்சி, தூத்துக்குடி, நாகர்கோவில், திருவனந்த புரம் இடையே இரட்டை ரெயில்பாதை மற்றும் மின் மயமாக்கலுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

    இதில் 50 சதவீத நிதியை மாநில அரசுகள் தர வேண்டும். இதற்காக மத்திய ரெயில்வே அமைச்சகம் கடந்த ஒரு வருடமாக தமிழகம், கேரளாவிடம் நிதி தரக்கோரி வருகிறது. அதற்கு இதுவரை பதில் இல்லை.

    எனவே நான், மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபுவிடம் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினேன். அதன் பிறகு நிதி ஆயோக் மூலமாக முழு பணத்தையும் மத்திய அரசு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    இரட்டை ரெயில் பாதை, மின்மயமாக்கல் பணிகளுக்கு ரூ. 3940 கோடி செலவாகும் என்று திட்ட மிட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் 4 ஆண்டுகளில் முடிவடையும்.

    பிரதமர் மோடியுடனான சந்திப்பு அரசின் நடை முறைகளின்படி நடத்தப்படுவதாகும். சந்திப்புக்கான காரணங்கள் தரப்பட வேண்டும்.

    ஓ.பி.எஸ். எதற்காக பிரதமரை சந்தித்தார்? மு.க.ஸ்டா லின் எதற்காக பிரதமரை சந்திக்க விரும்புகிறார்? என்பது பற்றிய விபரங்கள் எனக்கு தெரியாது.

    உள்ளாட்சி தேர்தலில் சொந்த பலத்தில் தேர்தல் களத்தை சந்திப்பது என்பதில் உறுதியாக உள்ளோம். அரசியலில் நடிக்கும் தலைவர்களுக்கு மத்தியில் நடிகர் ஒருவர் அரசியலுக்கு வருவது எவ்வளவோ மேல்.

    ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். எனக்கு தெரியாது.


    அ.தி.மு.க.வினர் உள் கட்சி பிரச்சினை காரணமாக பிரிந்து இருக்கிறார்கள். 2 பிரிவுகளும் இணைந்தால் அவர்களுக்குத்தான் நல்லது. ஆனாலும் இரு அணிகளின் இணைப்பை வலியுறுத்த நாங்கள் தயாராக இல்லை.

    தமிழை வியாபாரமாக கருதி அரசியல் செய்து விற்றுப்பிழைத்த கழகங்கள் அடுத்த தலைமுறைக்கு தமிழே தெரியாமல் தடுத்து துரோகம் செய்து விட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×