என் மலர்
செய்திகள்
- மதுரை ஐகோர்ட் வளாகத்திற்கு மட்டும் தான் மத்திய படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
- தனி நீதிபதியின் உத்தரவால் மத பிரச்சனை ஏற்படும் நிலை உள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அதிகாரிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேற்று பிற்பகலில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் வக்கீல் அருண் சுவாமிநாதன் உள்ளிட்டோர் முறையிட்டனர்.
அதன் பேரில் நேற்று மாலை இந்த வழக்கு அவசர மனுவாக விசாரிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் ராம ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். அவர்களுக்கு மதுரை ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள மத்திய பாதுகாப்பு படையினர் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோவில் செயல் அலுவலர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நேற்று மதுரை ஐகோர்ட் நிர்வாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக முறையிடப்பட்டது.
இதையடுத்து அவர் இன்று இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்து இருந்தார். அதன் பேரில் இன்று நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு இந்த வழக்கு காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபத்தை தனி நபர்கள் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. மேலும் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தவருக்கு பாதுகாப்பாக மத்திய படை சி.ஐ. எஸ்.எப். செல்ல வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல.
மதுரை ஐகோர்ட் வளாகத்திற்கு மட்டும் தான் மத்திய படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வேறு பணிகளுக்கு அவர்களை அமர்த்த அதிகாரம் கிடையாது. மேலும் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சம்பந்தமாக ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த மலையில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக தனி நீதிபதி எந்த உத்தரவையும் பிறப்பிக்க அதிகாரம் இல்லை. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவு என்பது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவால் மத பிரச்சனை ஏற்படும் நிலை உள்ளது.
இதனால் அரசின் அச்சம் உண்மையாகி விட்டது. நேற்று திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டு காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தனி நீதிபதியின் உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. சட்டத்தை மீறி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கலாம், விளக்கம் கேட்கலாம். ஆனால் வேறு உத்தரவுகளை பிறப்பிக்க இயலாது. திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படும் என்பதால் தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக 30 நாட்கள் அவகாசம் இருந்தும் தனி நீதிபதி அவசரம் காட்டுவது ஏன்.
இவ்வாறு அரசு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது.
தொடர்ந்து மனுதாரர் தரப்பில் கூறுகையில், திருப்பரங்குன்றத்தில் பிரிட்டிஷ் காலத்தின்போது தீபத்தூணில் தீபம் ஏற்றுவது நிறுத்தப்பட்டது. அதனை நாம் ஏன் பின்பற்ற வேண்டும். தீபம் ஏற்றுவது என்பது தமிழர்களின் மரபு கலாச்சாரம், பழக்கம், பண்பாடு ஆகும்.
ஐகோர்ட் உத்தரவின்படி தீபம் ஏற்ற செல்லும்போது போலீசார் பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவித்தனர். இதன் காரணமாக தனி நீதிபதியிடம் முறையிட்ட பின் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் சென்றோம். ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாததால் தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தோம் என்றனர்.
பின்னர் நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கின் உத்தரவு நகல் கொடுத்த பின் 13 மணி நேரத்திற்கு பின் மேல்முறையீடு தாக்கல் செய்தது ஏன்? நேற்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு வந்தபோதும் கோவில் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டாமா? ஒரு மதத்தின் நம்பிக்கையை தடுப்பது எப்படி சமூக நல்லிணக்கம் ஆகும்.
திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன்? எப்போது பிறப்பிக்கப்பட்டது? அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூண் கோவிலை விட பழைமையானதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பு தீபத்தூண் பழையானது தான். ஆனால் கோவிலை விட பழைமையானது தான் என தெரியவில்லை.
தொடர்ந்து நீதிபதிகள் திருப்பரங்குன்றம் மலையில் யாருக்கும் பாதிப்பில்லாமல் தீபம் ஏற்றுவதை ஒரு தரப்பினர் ஏன் தடுக்க வேண்டும்.
மத நல்லிணக்கம் என்பது ஒருவரை, மற்றொருவர் எதுவும் செய்யவிடாமல் தடுப்பதில் அல்ல. இருதரப்பும் இணைந்து தங்களுக்கானவற்றை செய்து கொள்வதிலும், செய்ய அனுமதிப்பிதிலும் தான் உள்ளது. இந்த வழக்கின் உத்தரவு இன்றே பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
- பாமகவை அன்புமணி அபகரித்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு
- பாமக தலைவர் யார் என்பதில் பிரச்சனை இருக்கிறது என்றால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம்.
வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக கூறியுள்ள தேர்தல் ஆணையம்," பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். தரவுகள் உள்ளது" என குறிப்பிட்டுள்ளது.
மேலும், கட்சித் தலைவர் பதவி குறித்த தனது முரண்பாடுகளை தீர்க்க நீதிமன்றத்தை அணுக ராமதாசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், பாமகவை அன்புமணி அபகரித்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, "தற்போதைய ஆவணங்களின் அடிப்படையில்தான் அன்புமணியை பாமக தலைவராக ஏற்கிறோம். பாமக தலைவர் யார் என்பதில் பிரச்சனை இருக்கிறது என்றால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம். இரு தரப்பும் பிரச்சனைக்குரியதாக இருந்தால் தேர்தல் ஆணையம் படிவம் A மற்றும் படிவம் B-யில் இரு தரப்பு கையெழுத்து போடுவதை ஏற்காமல், சின்னமும் முடக்கி வைக்கப்படும்" என்று தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து ராமதாஸ் தரப்பு இது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
- கோவில்களில் பாதுகாப்பு-கூட்டத்தை கட்டப்படுத்துவது காவல்துறை மற்றும் தேவசம்போர்டின் பொறுப்பு.
- பவுன்சர்களை நியமிப்பது தவறான நடைமுறை என்று மனுதாரர் வாதிட்டார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திரிபுனித்துராவில் பூர்ணத்ரயீசர்கோவில் இருக்கிறது. மிகவும் பழமையான விஷ்ணு கோவிலான இங்கு பெரிய தீபம் ஏற்றும் விழாவில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் பவுன்சர்கள் நியமிக்கப்பட்டதற்கு எதிராக மராடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் எனபவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு ஐகோர்ட்டு நீதிபதிகள் ராஜா, விஜயராகவன், ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மற்றும் தேவசம்போர்டு தரப்பில் ஆஜரானவர்கள் வாதிட்டனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்தும் பவுன்சர்கள் கருப்பு ஆடைகள், பேண்ட் மற்றும் காவி சால்வைகள் அணிந்திருந்தனர். அவர்கள் அணிந்திருந்த டி-சர்ட்டில் பவுன்சர் என்று எழுதப்பட்டிருந்தது. கோவில்களில் பாதுகாப்பு-கூட்டத்தை கட்டப்படுத்துவது காவல்துறை மற்றும் தேவசம்போர்டின் பொறுப்பு. அதற்காக பவுன்சர்களை நியமிப்பது தவறான நடைமுறை என்று மனுதாரர் வாதிட்டார்.
அதே நேரத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பவுன்சர்கள் அனுப்பப்பட்டனர் என்று தேவசம்போர்டு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், கோவில்களில் பாதுகாப்புக்காக மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பவுன்சர்களை நியமிக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் பவுன்சர் என்று எடிதப்பட்டிருக்கும் டிசர்ட் அணிந்தும், பொருத்தமற்ற உடைகளை அணிந்தும் பணியாளர்கள் மற்றும் பவுன்சர்களை கோவில்களில் பாதுகாப்பு பணியில் நியமிக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு தெளிவுபடுத்தியது.
- இந்தியா-அமெரிக்கா இடையே வரி விவகாரத்தில் இன்னும் உடன்பாடு ஏற்படாமல் உள்ளது.
- இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் இழுபறிநிலை நீடித்து வருகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அந்நிய செலாவணி சந்தையில் நேற்று வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. முதல் முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90.30 வரை சரிந்தது.
இந்த நிலையில் இன்றும் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைந்தது. ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு 90.43 வரை சரிந்தது.
இந்தியா-அமெரிக்கா இடையே வரி விவகாரத்தில் இன்னும் உடன்பாடு ஏற்படாமல் உள்ளது. இதனால் இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் இழுபறிநிலை நீடித்து வருகிறது. அதன் தாக்கம் அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பில் மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக அந்நிய செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
- ஸ்டீவன் சுமித் வித்தியாசமாக தனது கண்களுக்கு நேர் கீழாக சிறிய பட்டை போன்று கருப்பு வர்ணத்தை தீட்டியுள்ளார்.
- வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் இதே போன்ற கருப்பு பட்டையுடன் விளையாடி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஸ் தொடரின் 2-வது டெஸ்ட் பகல் இரவாக பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. இதில் முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டிக்கான பயிற்சியின் போது ஆஸ்திரேலிய அணியின் பொறுப்பு கேப்டன் ஸ்டீவன் சுமித் வித்தியாசமாக தனது கண்களுக்கு நேர் கீழாக சிறிய பட்டை போன்று கருப்பு வர்ணத்தை தீட்டியுள்ளார். இதற்கு முன்பு வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பால் இதே போன்ற கருப்பு பட்டையுடன் விளையாடி இருக்கிறார்.
அவரது பாணியை பின்பற்றும் சுமித்திடம் இது பற்றி நிருபர்கள் கேட்ட போது, 'சந்தர்பாலிடம் நான் குறுஞ்செய்தி அனுப்பி இது பற்றி கேட்டேன். அதற்கு அவர் இவ்வாறு கண்ணுக்கு கீழ் பகுதியில் கருப்பு வர்ணம் இருக்கும் போது, கண்களை கூசும் வகையிலான ஒளி 65 சதவீதம் தடுக்கப்படுவதாக கூறினார். அது உண்மை தான் என்பதை பயிற்சியின் போது நானும் உணர்ந்தேன். மேலும் அவர் உங்களது புகைப்படங்களை பார்த்தேன். அதை தவறாக வரைந்துள்ளீர்கள் என்று கூறினார். இப்போது அதை சரி செய்து விட்டேன்' என்றார்.
- உயிரிழந்த சரவணனின் உடல் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
- ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உடலுக்குநடிகர்கள் சிவக்குமார் மற்றும் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
வயது மூப்பின் காரணமாக இன்று காலை உயிரிழந்த சரவணனின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- சிறுமி கடைசியாக ஒரு பெண்ணுடன் மாடிப்படி ஏறி சென்றது தெரியவந்தது.
- எதுவும் நடக்காதது போல கதவை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அரியானா மாநிலம் பானிபட் அருகிலுள்ள நவுலதா கிராமத்தில் ஒரு வீட்டில் திருமண விழா நடந்தது. விழா கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்த நிலையில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை திடீரென காணவில்லை.
சிறுமியின் உறவினர்கள் அவளை தேடினர். திருமண மண்டபத்தில் பல பகுதிகளில் சிறுமியை தேடியும் அவளை காணவில்லை. இதனால் திருமண வீட்டில் பரபரப்பு உண்டானது. சிறுமியை காணாததால் பெற்றோர், உறவினர்கள் கவலை அடைந்தனர்.
இதனிடையே மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள தண்ணீர் நிரம்பிய பெரிய வாளியில் சிறுமி தலை நீரில் மூழ்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பளிச் என்று உடை அணிந்து அங்கும் இங்கும் விளையாடி திரிந்த சிறுமி அலங்கோலமாக இறந்து கிடப்பதை பார்த்து உறவினர்கள் கதறினர்.
உடனடியாக என்.சி. மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி குழந்தையின் தாத்தா பால் சிங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வந்து விசாரணை நடத்தியபோது அந்த சிறுமி நீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். சிறுமி திருமண வீட்டில் விளையாடியது, அவர் யார் யாருடன் பேசினார் என வீடியோ பதிவுகளை வைத்து விசாரித்தனர்.
அப்போது சிறுமி கடைசியாக ஒரு பெண்ணுடன் மாடிப்படி ஏறி சென்றது தெரியவந்தது. அந்த பெண் திருமண வீட்டினரின் அத்தை பூனம் (வயது 34) என்றும் தெரியவந்தது. உடனே பூனத்தை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. பூனம் தன்னைவிட யாரும் அழகாக இருக்கக் கூடாது என்ற பொறாமையில் சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. திருமண வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியின் அழகு கொலையாளி பூனத்துக்கு பொறாமையை ஏற்படுத்தியது.
தனது குடும்பத்தில் இப்படி ஒரு அழகான சிறுமியா என்று அவளிடம் பேச்சு கொடுத்த பூனம் பின்னர் அவளை ஏமாற்றி மாடிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியிடம் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவருமாறு கூறியுள்ளார்.
தன் உயிரையே பறிக்கத்தான் தண்ணீர் கொண்டுவர பூனம் சொல்கிறார் என்பதை அறியாத சிறுமி வாளியில் தண்ணீரை மாடிக்கு கொண்டு சென்றார். ஒரு அறைக்குள் சிறுமியை அழைத்து சென்ற பூனம் வாளியில் உள்ள தண்ணீருக்குள் சிறுமியின் தலையை அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் எதுவும் நடக்காதது போல கதவை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் பூனம் இதுபோன்று 3 குழந்தைகளை கொலை செய்தது தெரியவந்தது. பூனத்துக்கு 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது. இயல்பாகவே பூனத்துக்கு தன்னைவிட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்ற கர்வம் இருந்தது. 2023-ம் ஆண்டில் அவரது மைத்துனியின் 9 வயது சிறுமி இஷிகாவை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றார். இதை அவரது 3 வயது மகன் சுபத் பார்த்து விட்டான்.
அவன் இஷிகா கொலையை வெளியில் சொல்லிவிடுவான் என பயந்து சுபத்தையும் கொலை செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது தாய் வீட்டில் உறவினரின் 6 வயது மகள் ஜியாவை நீரில் மூழ்கடித்து கொன்றார். அடுத்தடுத்த இந்த கொலைகளை உறவினர்கள் தற்செயலாக நடந்த விபத்து என்று நம்பப்பட்ட நிலையில் சிறுமி கொலை தொடர்பாகப் பூனத்திடம் போலீசார் விசாரித்த போது, பொறாமையின் காரணமாகத் தான் இந்த கொலைகளைச் செய்ததாக ஒப்புக் கொண்டார். இந்த கொடூர சம்பவம் அரியானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
- அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
- மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்துகொள்ளவுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
அவ்வகையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.
இந்நிலையில் மலேசியாவில் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட ரசிகை ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், முதல்ல நான் போட்டோ எடுக்க முயற்சி பண்ணப்போ அஜித் சார் என்ன திட்டிட்டாரு. ஆனா அதுக்கு அப்புறம் அவரே கூப்பிட்டு ஒரு செல்பி எடுத்து கொடுத்தாரு. என் வாழ்நாள் கனவு நனவாகிடுச்சி. அந்த ஒரு நொடி எனக்கு உலகத்தையே மறக்க வச்சிருச்சு'' என்று ஆனந்த கண்ணீருடன் மலேசிய ரசிகை பேசியுள்ளார்.
- உயிரிழந்த சரவணனின் உடல் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
- ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சரவணனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
வயது மூப்பின் காரணமாக இன்று காலை உயிரிழந்த சரவணனின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- அக்ரம் 104 டெஸ்டில் 414 விக்கெட் வீழ்த்தி 16-வது இடத்தில் உள்ளார்.
- ஸ்டார்க் 102 டெஸ்டில் 414 விக்கெட் கைப்பற்றி அவரை சமன் செய்துள்ளார்.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஸ் தொடரின் 2-வது டெஸ்ட் பகல் இரவாக பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிச்சேல் ஸ்டார்க்கின் அபாரமான பந்து வீச்சால் தொடக்க வீரர் பென் டக்கெட் , ஒலி போப் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்கள். 5 ரன்னில் இங்கிலாந்து 2 விக்கெட்டை இழந்தது.
2 விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) சாதனையை ஸ்டார்க் சமன் செய்தார். அக்ரம் 104 டெஸ்டில் 414 விக்கெட் வீழ்த்தி 16-வது இடத்தில் உள்ளார். ஸ்டார்க் 102 டெஸ்டில் 414 விக்கெட் கைப்பற்றி அவரை சமன் செய்துள்ளார்.
மேலும் டெஸ்ட் போட்டிகளில் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகளை (26) வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (19) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெமர் ரோச் (10) உள்ளனர்.
- கருமேகங்கள் திரண்டு வானம் இருண்டு கனமழை கொட்டி தீர்த்தது.
- சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தாலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை கடந்த 30-ந்தேதி முதல் வட தமிழகத்தில் பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மட்டுமின்றி ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 3 நாட்கள் பலத்த மழை பெய்தது.
30-ந் தேதி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 1-ந் தேதி முதல் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கியது. பகலும் இரவாக காட்சிஅளித்தது. கருமேகங்கள் திரண்டு வானம் இருண்டு கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் சென்னை வாசிகள் வீடுகளில் முடங்கினர். டிட்வா புயல் சென்னை அருகே மையம் கொண்டதால் விட்டு விட்டு கனமழை பெய்தது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இன்று காலை 7 மணி வரை மழை தூறிக் கொண்டே இருந்தது. சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தாலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி நின்றதாலும், ஒரு சில பகுதிகளில் மழைநீர் வடியாததாலும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று மழை நின்றதால் சூரிய பிரவேசம் இருந்தது. சென்னை மக்கள் வெயிலை இன்று பார்த்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். தினமும் பயன்படுத்திய துணிமணிகள் எல்லாம் வீடுகளில் உலர வைக்க முடியாமல் இருந்தனர்.
வெயில் இன்று தலைகாட்டியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். பயன்படுத்திய உடைகளையெல்லாம் துவைத்து வெயிலில் காய வைத்தனர்.
மழையால் சாலையோர கடைகள் காணாமல் போனது. காய்கறி, பழங்கள் விற்கும் சிறு வியாபாரிகள் இன்று மீண்டும் விற்பனையை தொடங்கினர். சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் கனமழை மற்றும் குளிரால் வெயிலை தேடும் நிலை ஏற்பட்டது.
- யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
- அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு நடனப் புயல்- இசைப்புயல் இணைந்துள்ள படம் 'மூன்வாக்'. அதாவது பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்துள்ள இப்படத்தை என்.எஸ்.மனோஜ் இயக்கி உள்ளார். 'மூன்வாக்' என்பது 'பாப்' இசை உலகின் மன்னர் என்று போற்றப்படும் மைக்கேல் ஜாக்சனின் உலகப் புகழ் பெற்ற நடன அசைவாகும். இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.
இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். குடும்ப பொழுதுபோக்காக, நகைச்சுவை கலந்து உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு உரிமையை 'லஹரி மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 'மூன்வாக்' படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடல்களின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.






