என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டிட்வா புயலால் தொடர் மழை- சென்னையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று வெயில் தலைகாட்டியது
- கருமேகங்கள் திரண்டு வானம் இருண்டு கனமழை கொட்டி தீர்த்தது.
- சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தாலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை கடந்த 30-ந்தேதி முதல் வட தமிழகத்தில் பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மட்டுமின்றி ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 3 நாட்கள் பலத்த மழை பெய்தது.
30-ந் தேதி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 1-ந் தேதி முதல் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கியது. பகலும் இரவாக காட்சிஅளித்தது. கருமேகங்கள் திரண்டு வானம் இருண்டு கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் சென்னை வாசிகள் வீடுகளில் முடங்கினர். டிட்வா புயல் சென்னை அருகே மையம் கொண்டதால் விட்டு விட்டு கனமழை பெய்தது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இன்று காலை 7 மணி வரை மழை தூறிக் கொண்டே இருந்தது. சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தாலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி நின்றதாலும், ஒரு சில பகுதிகளில் மழைநீர் வடியாததாலும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று மழை நின்றதால் சூரிய பிரவேசம் இருந்தது. சென்னை மக்கள் வெயிலை இன்று பார்த்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். தினமும் பயன்படுத்திய துணிமணிகள் எல்லாம் வீடுகளில் உலர வைக்க முடியாமல் இருந்தனர்.
வெயில் இன்று தலைகாட்டியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். பயன்படுத்திய உடைகளையெல்லாம் துவைத்து வெயிலில் காய வைத்தனர்.
மழையால் சாலையோர கடைகள் காணாமல் போனது. காய்கறி, பழங்கள் விற்கும் சிறு வியாபாரிகள் இன்று மீண்டும் விற்பனையை தொடங்கினர். சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் கனமழை மற்றும் குளிரால் வெயிலை தேடும் நிலை ஏற்பட்டது.






