என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் - மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி
- மதுரை ஐகோர்ட் வளாகத்திற்கு மட்டும் தான் மத்திய படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
- தனி நீதிபதியின் உத்தரவால் மத பிரச்சனை ஏற்படும் நிலை உள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அதிகாரிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேற்று பிற்பகலில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் வக்கீல் அருண் சுவாமிநாதன் உள்ளிட்டோர் முறையிட்டனர்.
அதன் பேரில் நேற்று மாலை இந்த வழக்கு அவசர மனுவாக விசாரிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் ராம ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். அவர்களுக்கு மதுரை ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள மத்திய பாதுகாப்பு படையினர் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோவில் செயல் அலுவலர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நேற்று மதுரை ஐகோர்ட் நிர்வாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக முறையிடப்பட்டது.
இதையடுத்து அவர் இன்று இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்து இருந்தார். அதன் பேரில் இன்று நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு இந்த வழக்கு காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபத்தை தனி நபர்கள் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. மேலும் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தவருக்கு பாதுகாப்பாக மத்திய படை சி.ஐ. எஸ்.எப். செல்ல வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல.
மதுரை ஐகோர்ட் வளாகத்திற்கு மட்டும் தான் மத்திய படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வேறு பணிகளுக்கு அவர்களை அமர்த்த அதிகாரம் கிடையாது. மேலும் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சம்பந்தமாக ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த மலையில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக தனி நீதிபதி எந்த உத்தரவையும் பிறப்பிக்க அதிகாரம் இல்லை. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவு என்பது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவால் மத பிரச்சனை ஏற்படும் நிலை உள்ளது.
இதனால் அரசின் அச்சம் உண்மையாகி விட்டது. நேற்று திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டு காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தனி நீதிபதியின் உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. சட்டத்தை மீறி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கலாம், விளக்கம் கேட்கலாம். ஆனால் வேறு உத்தரவுகளை பிறப்பிக்க இயலாது. திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படும் என்பதால் தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக 30 நாட்கள் அவகாசம் இருந்தும் தனி நீதிபதி அவசரம் காட்டுவது ஏன்.
இவ்வாறு அரசு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது.
தொடர்ந்து மனுதாரர் தரப்பில் கூறுகையில், திருப்பரங்குன்றத்தில் பிரிட்டிஷ் காலத்தின்போது தீபத்தூணில் தீபம் ஏற்றுவது நிறுத்தப்பட்டது. அதனை நாம் ஏன் பின்பற்ற வேண்டும். தீபம் ஏற்றுவது என்பது தமிழர்களின் மரபு கலாச்சாரம், பழக்கம், பண்பாடு ஆகும்.
ஐகோர்ட் உத்தரவின்படி தீபம் ஏற்ற செல்லும்போது போலீசார் பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவித்தனர். இதன் காரணமாக தனி நீதிபதியிடம் முறையிட்ட பின் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் சென்றோம். ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாததால் தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தோம் என்றனர்.
பின்னர் நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கின் உத்தரவு நகல் கொடுத்த பின் 13 மணி நேரத்திற்கு பின் மேல்முறையீடு தாக்கல் செய்தது ஏன்? நேற்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு வந்தபோதும் கோவில் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டாமா? ஒரு மதத்தின் நம்பிக்கையை தடுப்பது எப்படி சமூக நல்லிணக்கம் ஆகும்.
திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன்? எப்போது பிறப்பிக்கப்பட்டது? அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூண் கோவிலை விட பழைமையானதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பு தீபத்தூண் பழையானது தான். ஆனால் கோவிலை விட பழைமையானது தான் என தெரியவில்லை.
தொடர்ந்து நீதிபதிகள் திருப்பரங்குன்றம் மலையில் யாருக்கும் பாதிப்பில்லாமல் தீபம் ஏற்றுவதை ஒரு தரப்பினர் ஏன் தடுக்க வேண்டும்.
மத நல்லிணக்கம் என்பது ஒருவரை, மற்றொருவர் எதுவும் செய்யவிடாமல் தடுப்பதில் அல்ல. இருதரப்பும் இணைந்து தங்களுக்கானவற்றை செய்து கொள்வதிலும், செய்ய அனுமதிப்பிதிலும் தான் உள்ளது. இந்த வழக்கின் உத்தரவு இன்றே பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.






