என் மலர்
செய்திகள்
- தமிழ்ப் பண்பாட்டை மீட்டெடுக்கும் ஆத்திக சக்திகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி
- அனைத்து இல்லங்களிலும் அகல் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும்
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் மீண்டும் தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை வரவேற்பதாக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை இதயம் நெகிழ வரவேற்கிறேன்!
தமிழ்ப் பண்பாட்டை மீட்டெடுக்கும் ஆத்திக சக்திகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியைப் பறைசாற்றும் விதம் நூற்றாண்டு நிகழ்வு அரங்கேறியுள்ளது. முருக பக்தர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முருக பக்தர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இதைக் கொண்டாடும் விதமாக, அனைத்து இல்லங்களிலும் அகல் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும் என்றும் நம் இல்லங்களில் நாளை காலை "வெற்றிவேல்! வீரவேல்!'' என மாக்கோலமிட வேண்டுமெனவும் உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
வெற்றிவேல்! வீரவேல்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு, இந்த சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது.
- இந்த வழக்கில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை?
சென்னை:
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையின் மேற்பகுதியில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
நேற்றைய தினம் திமுக அரசு, உயர்நீதிமன்ற உத்தரவையும், முருகப் பெருமான் பக்தர்களின் நம்பிக்கையையும் வெளிப்படையாக மீறி, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் ஆபத்தை உருவாக்கியிருக்கும் நிலையில் இன்று இந்த தீர்ப்பு வந்துள்ளது.
பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு, இந்த சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது. கடந்த டிசம்பர் 2-ம் தேதி அன்றே இந்து சமய அறநிலையத் துறையை முறைகேடாகப் பயன்படுத்தி, அவசரமாக மேல்முறையீடு செய்ய வைத்தும், பின்னர் அவ்வழக்கில் அலட்சியம் காட்டி, காலம் தாழ்த்தியும் வந்த திமுக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பிறகே பதிலளிக்க முன்வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, பக்தர்களின் பாதுகாப்புக்காக உயர்நீதிமன்றம் நியமித்த CISF, மற்றும் மாநில காவல்துறை இடையே தேவையற்ற மோதலை உருவாக்கி, இறுதியில் 144 தடையுத்தரவையும் பிறப்பித்தது திமுக அரசு.
இந்த வழக்கில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை?
நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு அளிக்க வேண்டிய தேவை இருப்பது, அது தர்கா நிர்வாகம் மட்டுமே. ஆனால் அவர்கள் மேல்முறையீடு செய்யவில்லை. ஏனெனில் சிக்கந்தர் தர்கா அருகிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது குறித்த வரலாறும், இருதரப்பு ஒப்பந்தமும் இருப்பதை தர்கா நிர்வாகிகள் நன்கு அறிவார்கள்.
தமிழக மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தும் தங்கள் அநாகரிக அரசியல் நாடகங்களை திமுக எப்போது நிறுத்தப் போகிறது?
திமுக அரசு குறைந்தபட்சம் இனியாவது உயர்நீதிமன்ற உத்தரவை மதிப்பார்களா அல்லது தங்கள் வழக்கமான பிரிவினை நாடகங்களைத் தொடரப் போகிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
- ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் சேர்க்க பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு
- இதுபோன்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் கருத்து
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள ஆசிட் வீச்சு வழக்குகள் தொடர்பான விவரங்களை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிட் வீச்சில் இருந்து தப்பிய ஷாஹீன் மாலிக் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும் கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மாலிக்கின் வழக்கு தற்போது வரை விசாரணையில் இருப்பது வெட்கக்கேடானது எனவும் கருத்து தெரிவித்தனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மாலிக் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, "சட்ட அமைப்பை எவ்வளவு கேலிக்கூத்தாக்குவது இது. 16 வருடம் இப்படிப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது வெட்கக்கேடானது. ஒரு நாட்டின் தேசிய தலைநகராலேயே இதை கையாள முடியவில்லை என்றால், வேறு யார் செய்வார்கள்? இது தேசத்திற்கே அவமானம்" என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கு ஏன் முடிவுக்கு வரவில்லை என்பதை விளக்கி, பொதுநல மனுவிலேயே ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கும் உத்தரவிட்டார். விசாரணையின்போது, ஆசிட் வீச்சில் இருந்து தப்பியவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான சவால்களை மாலிக் விவரித்தார். அவர்களில் பலர் நிரந்தர காயங்களுடன் வாழ்கின்றனர். செயற்கை உணவு குழாய்கள் தேவைப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், அதனால் சில நலத்திட்டங்களை பெறமுடியும் எனவும் வாதிட்டார்.
இதனைத்தொடர்ந்து ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் சேர்க்க சட்டம் அல்லது தேவைப்பட்டால் அவசரச் சட்டம் மூலம் சட்டத்தை திருத்துவது குறித்து பரிசீலிக்குமாறு தலைமை நீதிபதி மத்திய அரசை வலியுறுத்தினார். மேலும் சரியான நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இதுபோன்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
- தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- 2024-25-ம் ஆண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை தொடும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் அவர் கூறியதாவது:
தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024-25 மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் கார்களின் விற்பனை 20.8 சதவீதமும், இருசக்கர வாகனங்களின் விற்பனை 33 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 18 சதவீதமும் அதிகரித்துள்ளது.
அதேபோல், பெட்ரோல், டீசல் கார்களின் கார்களின் விற்பனை 4.2 சதவீதமும், இரு சக்கர வாகனங்களின் விற்பனை 14 சதவீதமும் மூன்று சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 6 சதவீதமும் அதிகரித்துள்ளது.
வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்களின் சந்தை 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டும். ஆண்டுக்கு 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் 400-க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களின் ஸ்டார்ட் அப் சந்தையை உருவாக்கும் என தெரிவித்தார்.
- இருதரப்பினரும் அங்கிருந்த நாற்காலி, தட்டு என கையில் கிடைத்ததை வைத்து மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர்.
- வரதட்சணைக் கேட்டதே திருமணம் நிற்க காரணம் என மணமகள் தரப்பு விளக்கம்
பீகாரின் புத்தகயாவில் ரசகுல்லா பற்றாக்குறையால் திருமணம் நின்றுபோனது ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 29 அன்று புத்த கயாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருமண சடங்குகள் முடிந்த நிலையில், ரசகுல்லா பற்றவில்லை என பெண்ணின் வீட்டார் பிரச்சனையை தொடங்கியதாக புத்தகயா போலீசார் தெரிவித்தனர். பேச்சு திடீரென மோதலாக மாற இருதரப்பினரும் அங்கிருந்த நாற்காலி, தட்டு என கையில் கிடைத்ததை வைத்து மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் பலரும் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மணமகளின் குடும்பத்தினர் பொய்யான வரதட்சணை வழக்கைப் பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர். சண்டை நடந்து கொண்டிருக்கும் போது, மணமகளுக்கு பரிசளிக்க கொண்டு வந்த நகைகளை மணமகளின் குடும்பத்தினர் எடுத்துச் சென்றதாக மணமகனின் தாயார் முன்னி தேவி குற்றம் சாட்டினார். மேலும் ஹோட்டல் புக்கிங்கையும் அவர்களே செய்ததாக மணமகனின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மணமகனின் குடும்பத்தினர் திருமணத்தைத் தொடர ஒப்புக்கொண்டாலும், மணமகளின் குடும்பத்தினர் மறுத்ததாக, மணமகன் தரப்பு உறவினர் தெரிவித்தனர்.
- திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
- தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு நேற்று மாலை அவசர மனுவாக விசாரிக்கப்பட்டது.
மதுரை:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அதிகாரிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று பிற்பகலில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் வக்கீல் அருண் சுவாமிநாதன் உள்ளிட்டோர் முறையிட்டனர்.
அதன்பேரில் நேற்று மாலை இந்த வழக்கு அவசர மனுவாக விசாரிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் ராம ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். அவர்களுக்கு மதுரை ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய பாதுகாப்பு படையினர் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோவில் செயல் அலுவலர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நேற்று மதுரை ஐகோர்ட் நிர்வாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் முறையிடப்பட்டது.
அதன் பேரில் இன்று நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் இந்த வழக்கு காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபத்தை தனி நபர்கள் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சம்பந்தமாக ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த மலையில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக தனி நீதிபதி எந்த உத்தரவையும் பிறப்பிக்க அதிகாரம் இல்லை. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யவேண்டும். தனி நீதிபதியின் உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. சட்டத்தை மீறி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
தொடர்ந்து மனுதாரர் தரப்பில் கூறுகையில், ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாததால் தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தோம் என்றனர்.
அதன்பின், நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கு நேற்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு வந்தபோதும் கோவில் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டாமா? ஒரு மதத்தின் நம்பிக்கையை தடுப்பது எப்படி சமூக நல்லிணக்கம் ஆகும். திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன்? எப்போது பிறப்பிக்கப்பட்டது? அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் யாருக்கும் பாதிப்பில்லாமல் தீபம் ஏற்றுவதை ஒரு தரப்பினர் ஏன் தடுக்க வேண்டும். மத நல்லிணக்கம் என்பது ஒருவரை, மற்றொருவர் எதுவும் செய்யவிடாமல் தடுப்பதில் அல்ல. இருதரப்பும் இணைந்து தங்களுக்கானவற்றை செய்து கொள்வதிலும், செய்ய அனுமதிப்பிதிலும் தான் உள்ளது. இந்த வழக்கின் உத்தரவு இன்றே பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்ய மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிப்பார் எனவும் தெரிவித்தனர்
இந்நிலையில், 144 தடை உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இன்று மாலையே திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். மனுதாரர் 10 பேருடன் சென்று தீபமேற்ற பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்பு தராவிடில் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும். நாளை காலை 10 மணிக்கு காவல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
- உயிரிழந்த சரவணனின் உடல் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
- ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்
இன்று காலை வயது மூப்பின் காரணமாக பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்.பி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "ஏ.வி.எம். சரவணன் அவர்களுக்கும் எனக்கும் உள்ள உறவு அண்ணன் - தம்பி உறவு போன்றது. குகனுக்கு இருக்கும் சோகத்தில் எனக்கும் பங்கு இருப்பதாக நான் உரிமை கொண்டாடுகிறேன். நான் தனி மரம் அல்ல, AVM என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி இன்று வளர்ந்து வந்திருக்கிறேன். இந்த தோப்பில் பல ஆசான்கள் எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் ஒருவனின் அஞ்சலி இது" என்று பேசியுள்ளார்.
- அக்ரம் 104 டெஸ்டில் 414 விக்கெட் வீழ்த்தி 16-வது இடத்தில் உள்ளார்.
- ஸ்டார்க் 102 டெஸ்டில் 418 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஸ் தொடரின் 2-வது டெஸ்ட் பகல் இரவாக பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிச்சேல் ஸ்டார்க்கின் அபாரமான பந்து வீச்சால் தொடக்க வீரர் பென் டக்கெட் , ஒலி போப் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்கள். 5 ரன்னில் இங்கிலாந்து 2 விக்கெட்டை இழந்தது.
6 விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற வாசிம் அக்ரமின் சாதனையை 23 ஆண்டுகளுக்கு பிறகு மிட்செல் ஸ்டார்க் முறியடித்தார். அக்ரம் 104 டெஸ்டில் 414 விக்கெட் வீழ்த்தியிருந்தார். ஸ்டார்க் 102 போட்டிகளில் விளையாடிய தற்போது வரை 418 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக இலங்கை வீரர் ஜமிந்தா வாஸ் 111 போட்டிகளில் 355 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதனை தொடர்ந்து நியூசிலாந்து வீரர் போல்ட் (317), இந்தியாவின் ஜாகீர் கான் (311) ஆகியோர் உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் பட்டியலில் இந்தியாவின் ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளுடன் 15-வது இடத்திலும் தென் ஆப்பிரிக்காவின் ஷான் பொல்லாக் 421 விக்கெட்டுகளுடன் 14-வது இடத்தில் உள்ளார். இவர்களின் சாதனைகளையும் மிட்செல் ஸ்டார்க் கூடிய சீக்கிரத்தில் முறியடிக்க உள்ளார்.
- தொழிலதிபர் வீட்டு திருமண விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டார்.
- பான் மசாலா விளம்பரத்தில் ஷாருக்கான், "நாக்கிலே குங்குமப்பூ" என்று கூறுவார்.
டெல்லியில் நடைபெற்ற தொழிலதிபர் வீட்டு திருமண விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டார்.
அப்போது ஷாருக்கானிடம், பிரபல பான் மசாலா விளம்பரத்தில் வரும், "நாக்கிலே குங்குமப்பூ" (Zubaan Kesari) என்ற டயலாக்கை கூறுமாறு வற்புறுத்தி கேட்டதால் சிரிப்பலை எழுந்தது.
இதையடுத்து பேசிய ஷாருக்கான்,"இந்த தொழிலதிபர்களிடம் நீங்கள் ஒருமுறை பிசினஸ் செய்தால், அவர்கள் உங்களை ஒருபோதும் விட மாட்டார்கள், அதிலும் குட்கா காரர்கள் அதிக பணம் தருகிறார்கள். நான் அதைச் செய்ய பணம் வாங்குகிறேன். தயவுசெய்து இதை உன் அப்பாவிடம் சொல்லுங்கள். நல்ல விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும். நான் இங்கே நின்றுகொண்டு நாக்கிலே குங்குமப்பூ என்பதை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அது தவறு, அது தடைசெய்யப்பட்டுள்ளது. நீ என் ரசிகனா அல்லது விமலின் (பான் மசாலா நிறுவனம்) ரசிகனா?" என தனேக்கே உரிய பாணியில் கிண்டல் அடித்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இப்படி சங்கப்படுத்துவது தவறு என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
- ஆந்திர அரசு ஒதுக்கிய 480 ஏக்கர் நிலத்தினை அதானி நிறுவனத்திற்கு மாற்ற ரெய்டன் இன்ஃபோடெக் ஒப்புதல்
- மாநில அரசு ரூ.22,000 கோடியை ஊக்கத்தொகையாக வழங்குகிறது
ஏஐ தரவு மையங்கள் அமைப்பதற்காக ஆந்திர அரசு ஒதுக்கிய 480 ஏக்கர் நிலத்தினை அதானி நிறுவனத்திற்கு மாற்ற ரெய்டன் இன்ஃபோடெக் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் அனகப்பள்ளி மாவட்டங்களில் அமையவுள்ள இந்த திட்டத்தில் அதானி இன்ஃப்ரா (இந்தியா) பிரைவேட் லிமிடெட், அதானி கோனெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், அதானி பவர் இந்தியா பிரைவேட் லிமிடெட், பாரதி ஏர்டெல் லிமிடெட், என்எக்ஸ்ட்ரா டேட்டா லிமிடெட் மற்றும் என்எக்ஸ்ட்ரா விசாக் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் தங்கள் கூட்டாளிகள் என முன்னரே மாநில அரசிடம் கூகிளுக்கு சொந்தமான ரெய்டன் தெரிவித்தது.
இந்நிலையில்," 28/11/2025 ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன்படி, விசாகப்பட்டினம் மற்றும் அனகப்பள்ளி மாவட்டங்களில் உள்ள 480 ஏக்கர் நிலத்தை அதானி இன்ஃப்ரா (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு அரசாங்கம் இதன் மூலம் அனுமதி அளிக்கிறது" என டிசம்பர் 2 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் ஏஐ தரவு மையங்களை அமைக்க ரெய்டன் நிறுவனம் ரூ. 87,500 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ள நிலையில், மாநில அரசு ரூ.22,000 கோடியை ஊக்கத்தொகையாக வழங்குகிறது.
- டாக்காவில் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 23ம் தேதி கலிதா ஜியா அனுமதிக்கப்பட்டார்.
- கலிதா ஜியாவுக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
டாக்கா:
அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 23ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே நீரழிவு, கல்லீரல், சிறுநீரக பிரச்சனைகள், இதய கோளாறு போன்ற உடல்நலப் பிரச்சனைகளால் அவர் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கலிதா ஜியாவை மேல் சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்ல உள்ளோம் என அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.
அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், கலிதா ஜியாவின் உடல்நலப் பாதிப்பு அக்கட்சிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.
கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு முறை வங்கதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் டெல்லி வருகிறார்.
- இந்தியாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை சந்திப்பது வழக்கம்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை ரஷிய அதிபர் புதின் டெல்லி வருகிறார்.
இந்த சூழலில், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் புதினுக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தியிடம் புதின் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "பொதுவாக இந்தியாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை சந்திப்பது வழக்கம். வாஜ்பாய், மன்மோகன் சிங் அரசாங்கத்தில் இதுதான் நடந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. நான் சந்திப்பதை மோடி அரசு விரும்பவில்லை. நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம், எதிர்கட்சித் தலைவரை சந்திக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்படுவதாக அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள்" என்று தெரிவித்தார்.






