என் மலர்
நீங்கள் தேடியது "pending trials"
- ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் சேர்க்க பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு
- இதுபோன்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் கருத்து
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள ஆசிட் வீச்சு வழக்குகள் தொடர்பான விவரங்களை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிட் வீச்சில் இருந்து தப்பிய ஷாஹீன் மாலிக் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும் கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மாலிக்கின் வழக்கு தற்போது வரை விசாரணையில் இருப்பது வெட்கக்கேடானது எனவும் கருத்து தெரிவித்தனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மாலிக் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, "சட்ட அமைப்பை எவ்வளவு கேலிக்கூத்தாக்குவது இது. 16 வருடம் இப்படிப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது வெட்கக்கேடானது. ஒரு நாட்டின் தேசிய தலைநகராலேயே இதை கையாள முடியவில்லை என்றால், வேறு யார் செய்வார்கள்? இது தேசத்திற்கே அவமானம்" என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கு ஏன் முடிவுக்கு வரவில்லை என்பதை விளக்கி, பொதுநல மனுவிலேயே ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கும் உத்தரவிட்டார். விசாரணையின்போது, ஆசிட் வீச்சில் இருந்து தப்பியவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான சவால்களை மாலிக் விவரித்தார். அவர்களில் பலர் நிரந்தர காயங்களுடன் வாழ்கின்றனர். செயற்கை உணவு குழாய்கள் தேவைப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், அதனால் சில நலத்திட்டங்களை பெறமுடியும் எனவும் வாதிட்டார்.
இதனைத்தொடர்ந்து ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் சேர்க்க சட்டம் அல்லது தேவைப்பட்டால் அவசரச் சட்டம் மூலம் சட்டத்தை திருத்துவது குறித்து பரிசீலிக்குமாறு தலைமை நீதிபதி மத்திய அரசை வலியுறுத்தினார். மேலும் சரியான நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இதுபோன்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.






