என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்கனவே 2 ஏவுதளங்கள் உள்ளன.
    • குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கான ஏவுதளமும் கட்டப்பட்டு வருகிறது.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஒரே நேரத்தில் 2 புதிய ஏவுதளங்களை உருவாக்கி திறன்களை விரிவுபடுத்த உள்ளது. குறிப்பாக, ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்கனவே 2 ஏவுதளங்கள் உள்ளன.

    தற்போது 30 டன் எடையை தூக்கி செல்லும் ராக்கெட்டுகளை ஏவும் திறன் கொண்ட 3-வது ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கான ஏவுதளமும் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த 2 ஏவுதளங்களும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இஸ்ரோவின் வளர்ந்து வரும் ஏவுதளத்தின் சக்தியை அதிகரிப்பதுடன், திறன்களையும் மேம்படுத்த உதவும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.

    • ரெயிலில் ஒவ்வொரு பெட்டிகளாக ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து புறப்பட்ட ரெயில் காலை 11.40 மணிக்கு கன்னியாகுமரி வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கியதும் ரெயிலில் ஒவ்வொரு பெட்டிகளாக ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது முன்பதிவு அல்லாத பெட்டி ஒன்றில் இருக்கைக்கு கீழே ஒரு டிராலி பேக் கிடந்தது. இதைப்பார்த்த போலீசார் உடனே பேக்கை திறந்து பார்த்தனர். அப்போது அதில் 12 பொட்டலங்கள் கஞ்சா இருந்தன.இதைத் தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த கஞ்சாவை வெளி மாநிலத்தில் இருந்து மர்ம ஆசாமிகள் கடத்தி வந்துள்ளனர். ஆனால் கஞ்சாவானது நேராக குமரி மாவட்டத்துக்கு கடத்தி வரப்பட்டதா? அல்லது ரெயில் வரும் வழியில் வேறு ஏதாவது ஊருக்கு அனுப்பி வைத்ததை எடுக்காமல் விட்டதால் அது நேராக குமரி மாவட்டத்துக்கு வந்ததா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோடை விடுமுறைக்கு மக்கள் அதிக அளவில் சொந்த ஊர் செல்வது வழக்கம்.
    • இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஏப்ரல்-மே மாதங்களில் விடப்படுகிறது. கோடை விடுமுறையின்போது பேருந்துகள் மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். எனவே கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதற்கிடையே, கோடை விடுமுறைக்கு மக்கள் அதிக அளவில் சொந்த ஊர் செல்வது வழக்கம். இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.

    இந்நிலையில், தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு ஏப்ரல் 4-ம் தேதி முதல் இருந்து 27-ம் தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் கோடை கால அதிவேக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    நாளை காலை 8 மணிக்கு சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில்கள் அதிவேக ரெயில்களாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பயணிகள் கோரிக்கை ஏற்று சிறப்பு ரெயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    • ஒடிசாவைச் சேர்ந்த ராமச்சந்தர் என்பவரை வெறிநாய் கண்டித்துள்ளது.
    • ரேபிஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது,

    வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த புலம் பெயர் தொழிலாளி ராம் சந்தர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒடிசாவைச் சேர்ந்த ராம் சந்தர் என்பவருக்கு வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், மருத்துவமனையில் அறிவிப்பு பலகையின் கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்து தனது உயிரை மாய்த்து அவர் கொண்டார் .

    • அடிப்படை பணி முதல் உயர் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் வரை பாலியல் உணர்திறன் பயிற்சி அளிக்க வேண்டும்.
    • அரசு பணிகளுக்கு பாலியல் உணர்திறன் பாடத்தில் தேர்ச்சியை கட்டாயமாகக் வேண்டும்.

    தமிழகத்தில் சமூக நலத்துறையில் இருந்து பிரித்து மகளிர் மேம்பாட்டுக்கென தனித்துறையை ஏன் உருவாக்க கூடாது?. அடிப்படை பணி முதல் உயர் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் வரை பாலியல் உணர்திறன் பயிற்சி அளிக்க வேண்டும். அரசு பணிகளுக்கு பாலியல் உணர்திறன் பாடத்தில் தேர்ச்சியை கட்டாயமாகக் வேண்டும். நிறுவனங்கள் உருவாக்கத்தில் பாலியல் உணர்திறன் தகுதிச் சான்றிதழை கட்டாயப்படுத்தவும். பரிந்துரைகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசு செயலர்களிடம் கலந்து பேசி செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • 2026-ல் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் திமுக தற்போது நாடகங்களை மேற்கொண்டு இருக்கிறது.
    • இந்த முறை மக்கள் திமுக-விற்கு வாக்களிக்க போவதில்லை. அதிமுக-தான் வெற்றிபெறும்.

    தமிழகத்தில் மும்மொழி கொள்கை மூலமாக இந்தியை திணிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முயன்று வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இந்த நிலையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை, "மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு அனைத்தையும் செய்தது காங்கிரஸ். 2026-ல் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் திமுக தற்போது நாடகங்களை மேற்கொண்டு இருக்கிறது. இந்த முறை மக்கள் திமுக-விற்கு வாக்களிக்க போவதில்லை. அதிமுக-தான் வெற்றி பெறும்" என்றார்.

    • சமக்கல்வி கையெழுத்து இயக்கத்திற்குப் பெருமளவில் ஆதரவளித்து வருகின்றனர்.
    • யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    தி.மு.க.வின் அறுபதாண்டு கால பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழக மக்கள் முழுமையாகப் புரிந்து கொண்டு, சமக்கல்வி கையெழுத்து இயக்கத்திற்குப் பெருமளவில் ஆதரவளித்து வருகின்றனர்.

    ஆனால், நாட்டு நடப்பே தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    கண்களைத் திறந்து பாருங்கள் முதலமைச்சரே, உங்கள் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல.

    அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான, சமமான கல்வி கிடைப்பதை இனியும் உங்களால் தடுக்க முடியாது என பதிவிட்டுள்ளார் .

    • தமிழக அரசுத் துறைகளில், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களே ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தப்படுகின்றனர்.
    • சிறப்புத் திட்ட செயலாக்கத்துறைக்கு தற்காலிக ஆலோசகராக பணிபுரிவதற்கு ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்க விளம்பரம்.

    epsஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2021-ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, வெற்றி பெற்று கடந்த 4 ஆண்டுகளாக நிர்வாகத் திறமையற்ற ஆட்சியை நடத்தி வருகிறார்.

    2021 திமுக தேர்தல் அறிக்கையில் அரசு துறைகளில் 5.50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், வாக்குறுதி எண்.187-ன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், தற்போதைய பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

    ஆனால், உண்மையில் தமிழக அரசுத் துறைகளில், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களே ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தப்படுகின்றனர். குறிப்பாக, தலைமைச் செயலகத்திலேயே பணி ஓய்வு பெற்று ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருக்கும் பிரிவு அலுவலர்கள், சார்பு, துணை, இணை மற்றும் கூடுதல் செயலாளர்கள் நிலையில் பலர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறைக்கு மாதம் 1 லட்சம் தொகுப்பு ஊதியத்தில், தற்காலிக ஆலோசகராக பணிபுரிவதற்கு தலைமைச் செயலகத்தில் துணைச் செயலாளர் பதவி நிலைக்கு குறையாத பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் 21.3.2025-க்குள் விண்ணப்பிக்க நாளிதழ்களில் விளம்பரம் வந்துள்ளது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எப்போது லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும் என்று, தகுதி வாய்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் தவமிருக்கும் நிலையில், அவர்களின் தலையிலும், மற்றும் தற்போது பதவி உயர்விற்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களின் தலையிலும், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசின் இந்த விளம்பரம் பேரிடியாக விழுந்துள்ளது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக தேர்வு நடத்தி அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் குறித்த காலத்தில் நிரப்பி, படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • தங்கள் தலைமையில்தான் கோவில் திருவிழா நடத்தப்பட வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது.
    • கோவில் திருவிழாவில் பங்கேற்க அனைத்து பிரிவினருக்கும உரிமை உள்ளது.

    நாமக்கல் மாவட்டம் ஜமீன் இளம்பிள்ளை கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை நடத்தக்கோரி பரத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் "தங்கள் தலைமையில்தான் கோவில் திருவிழா நடத்தப்பட வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது.

    கோவில் திருவிழாவில் பங்கேற்க அனைத்து பிரிவினருக்கும உரிமை உள்ளது. திருவிழா குறித்து ஆண்டுதோறும் அமைதிப் பேச்சவார்த்தை நடத்த தேவையில்லை" எனத் தெரிவித்தது.

    • நாங்கள் கூறிய அதே கருத்தை மத்திய அரசும் வலியுறுத்தியிருப்பது பாமகவின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
    • மத்திய அரசின் ஆணையை ஐ.பி.எல். அமைப்பு உறுதியாக பின்பற்ற வேண்டும்.

    ஐபிஎல் போட்டியின்போது தொலைக்காட்சிகளிலும், மைதானத்திலும் மது, புகையிலை விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமாலுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    இந்தியாவில் வரும் 22-ஆம் தேதி தொடங்கவுள்ள ஐ.பி.எல் போட்டிகளின் போது விளையாட்டு அரங்குகளிலும், தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் போதும் மது மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்களை அனுமதிக்கக் கூடாது என்று ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. மக்கள் நலன் கருதி மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

    இது தொடர்பாக ஐ.பி.எல் அமைப்புக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அருண்சிங் துமாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,''இளைஞர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் முன்னுதாரணமாக திகழ்வதாலும், அவர்கள் சுகாதாரமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதாலும், ஐ.பி.எல் போட்டி இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழா என்பதாலும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும், மத்திய அரசின் சுகாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதிலும் ஐ.பி.எல் அமைப்புக்கு சமூக, தார்மீகக் கடமை உள்ளது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் சரியானது ஆகும்.

    கிரிக்கெட் போட்டிகள் மூலம் புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான மறைமுக விளம்பரங்கள் திணிக்கப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத் தாயகம் அமைப்பும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசு, கிரிக்கெட் வாரியங்களுக்கு நான் பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். பசுமைத் தாயகம் அமைப்பு கிரிக்கெட் மைதானம் முன்பாக பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது.

    இந்தியா ஒரு விளையாட்டு தேசமாக உருவெடுத்து வருகிறது. விளையாட்டுகளை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதனை உறுதி செய்கின்றன. விளையாட்டு அணிகள் மீதும் வீரர்கள் மீதும் தங்களது அன்பையும் விசுவாசத்தையும் விளையாட்டு ரசிகர்கள் வெறித்தனமாக வெளிப்படுத்தி வருகின்றனர். விளையாட்டுகள் மீதான இளைஞர்களின் பேரார்வத்தை புகையிற்ற புகையிலை நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை திணிப்பதற்கான ஒரு வாய்ப்பாக பார்க்கின்றன. இதைத் தடுக்கும் புகையிலைப் பொருட்களின் விளம்பரம், ஊக்குவிப்பு நடவடிக்கைகள், புரவலர் செயல்பாடுகள் ஆகியவற்றை முழுமையாக தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதே கருத்தை மத்திய அரசும் வலியுறுத்தியிருப்பது பாமகவின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

    மத்திய அரசின் ஆணையை ஐ.பி.எல். அமைப்பு உறுதியாக பின்பற்ற வேண்டும். சென்னை உள்பட ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் விளையாட்டு அரங்குகள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் போது மது மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்களை ஐ.பி.எல் அமைப்பு தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவையில் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை 4 ஆடுகளை அடித்து கொன்றது.
    • வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர்.

    கோவை வடவள்ளி அடுத்த சிறுவாணி சாலை ஓணாப்பாளையம் பகுதியில் வெண்ணிலா என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு இந்த தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, தோட்டத்தில் வளர்த்து வந்த 8 ஆடுகளில் 4 ஆடுகளை அடித்து கொன்றது.

    இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதேபோல் தொண்டாமுத்தூர் பகுதியிலும் புகுந்த சிறுத்தை, அங்கும் ஆடுகளை அடித்து கொன்றது.

    இதையடுத்து வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர். பிடிபட்ட சிறுத்தையின் உடலில் காயங்கள் இருப்பதால், வனத்துறையினர் கால்நடை டாக்டர் குழுவினர் அதனை கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில், காயமடைந்து உடல் மெலிந்து காணப்பட்ட சிறுத்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    • சந்தை விலையை விட 107% கூடுதலாக நிர்ணயித்து வழங்கியதால் தமிழக அரசுக்கு ரூ.992 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் குற்றச்சாட்டு.
    • இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் இந்த ஊழல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அரவை நிலையங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லவும், அவை அரிசியாக்கப்பட்ட பிறகு வட்ட கொள்முதல் மையங்களுக்கு கொண்டு செல்லவும் சரக்குந்து சேவையை பெறுவதற்கான ஒப்பந்தத்தை முருகா எண்டர்பிரைசஸ், கந்தசாமி அண்ட் கோ, கார்த்திகேயா எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சந்தை விலையை விட 107% கூடுதலாக நிர்ணயித்து வழங்கியதால் தமிழக அரசுக்கு கடந்த இரு ஆண்டுகளில் ரூ.992 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அறப்போர் தொண்டு நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் இந்த ஊழல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    அறப்போர் இயக்கம் கூறியுள்ள இந்த குற்றச்சாட்டுகளை எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. இப்போது ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனங்கள் தவிர வேறு எந்த நிறுவனமும் இந்த ஒப்பந்த நடைமுறையில் பங்கேற்க முடியாத அளவுக்கு விதிகள் திருத்தப்பட்டதாகவும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க இந்திய உணவுக்கழகத்தின் தென்னிந்திய இயக்குனர் மறுத்து விட்ட நிலையில், அவரை விடுப்பில் செல்ல வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவருக்கு அடுத்த அதிகாரியான துணை இயக்குனரை வைத்து ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அப்படியானால் இதன் பின்னணியில் கூட்டுச் சதி நடந்திருப்பதாகவே பொருள். இந்த கண்டுகொள்ளாமல் விட முடியாது.

    அறப்போர் இயக்கம் கூறியுள்ள இந்தக் குற்றச்சாட்டை தனித்துப் பார்க்க முடியாது. பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் உரியவர்களை சென்றடையாமல் கசிந்து செல்வதால் 2022-23ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இலவசமாக வழங்கப்பட வேண்டிய அரிசி மக்களுக்கு வழங்கப்படாமல் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டதன் மூலமாக மட்டும் ரூ.1900 கோடி தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சிக்குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையும் இந்தக் குற்றச்சாட்டையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

    பொதுவினியோகத் திட்டத்தில் வழங்குவதற்கான அரிசி நியாயவிலைக் கடைகளுக்கு சென்றடைந்த பிறகு கடத்திச் செல்லப்பட வாய்ப்பு கிடையாது. மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய அரிசி, அவற்றை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் சரக்குந்துகள் மூலமாகவே கடத்தப்படுவதாக நுகர்பொருள் வாணிபக் கழகத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஒருபுறம் அரிசிக் கடத்தல் மூலமும், இன்னொருபுறம் சரக்குந்துகளுக்கு போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதன் மூலமும் மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

    நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் போக்குவரத்து ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த உண்மை நிலையை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. எனவே, மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

    ×