என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வாடகை கார், ஆட்டோக்களும் ஓடவில்லை.
    • 1500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    மத்திய அரசு வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதனை மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளிலும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி சட்டமாக இயற்றி உள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த நிலையில் புதிய வக்பு திருத்த சட்டமானது இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாக கூறி வக்பு திருத்த சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இன்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.

    இதனிடையே நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஜமாத் தலைவர்கள், தி.மு.க., ம.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், த.மு.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், வியாபாரிகள் இணைந்து கடை யடைப்பு போராட்டத்திற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தனர்.

    அதன்படி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நெல்லை மேலப்பாளையத்தில் இன்று சுமார் 1500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டி ருந்தது.

    இதன் காரணமாக சந்தை ரவுண்டானா முக்கு பகுதிகள், பஜார் வீதிகள், அண்ணா வீதி, நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடைகள் அடைப்பால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மெடிக்கல், பால் கடைகள் உள்ளிட்டவை தவிர சுமார் 95 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    அவர்களுக்கு ஆதரவாக வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களும் இயங்கவில்லை. சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடாததால் பள்ளி-கல்லூரி, ஆஸ்பத்திரி, அரசு அலுவலகங்கள் செல்லும் மக்கள் பெரிதும் பாதிப் படைந்தனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக மேலப்பாளையம் நகரின் முக்கிய வீதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3-வது நாளாக தொடர்ந்து 2 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் நடைபெறும்.
    • 28-ந்தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்திருவிழா நிறைவடைகிறது.

    திருச்சி:

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவதலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3.15 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் காலை 4.30 மணிமுதல் காலை 5.30மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து காலை 6.15மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகள் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார்.

    அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாளை 19-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    விழாவின் 2-ம் நாளான நாளை (19-ந்தேதி) மாலை கற்பகவிருஷ வாகனத்திலும், 20-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 21-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 22-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 23-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

    24-ந்தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 25-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. 27-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. 28-ந்தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்திருவிழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 

    • தினந்தோறும் விலை உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
    • நான்காவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து 'கிடுகிடு'வென உயர்ந்து வந்து, கடந்த 12-ந் தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அப்போது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்த வண்ணம் காணப்படுகிறது. இதனிடையே கடந்த 15-ந்தேதி சற்று குறைந்த நிலையில் மீண்டும் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது. தினந்தோறும் விலை உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,940-க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,560-க்கும் விற்பனையாகிறது. தமிழ் புத்தாண்டில் இருந்து இந்நாள் வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நான்காவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    17-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360

    16-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,520

    15-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760

    14-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    13-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,160

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    17-04-2025- ஒரு கிராம் ரூ.110

    16-04-2025- ஒரு கிராம் ரூ.110

    15-04-2025- ஒரு கிராம் ரூ.110

    14-04-2025- ஒரு கிராம் ரூ.108

    13-04-2025- ஒரு கிராம் ரூ.110

    • அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோரின் பேச்சு சர்ச்சையான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
    • அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் துறைரீதியான பணியை விரிவுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகள், பேச்சு இருக்கக்கூடாது என அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் துறைரீதியான பணியை விரிவுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோரின் பேச்சு சர்ச்சையான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    • கோவிலில் பாதுகாப்புக்காக 800 போலீசார் குவிக்கப்பட்டனர்.
    • கோவிலில் ஒரு தரப்பினர் தரிசனம் செய்ய மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

    விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 7.4.2023 அன்று நடந்த தீமிதி திருவிழாவில் ஒரு தரப்பினர் வழிபட மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டது.

    இதையடுத்து கடந்த 7.6.2023 அன்று கோவில் தற்காலிகமாக பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர் சென்னை ஐகோர்ட் உத்தரவின்பேரில் 9 மாதங்களுக்குப்பிறகு கோவில் கதவு திறக்கப்பட்டு பக்தர்கள் யாரும் இன்றி ஒருகால பூஜை அர்ச்சகர் அய்யப்பன் மூலம் செய்யப்பட்டது. இந்த நடைமுறையே தொடர்ந்து 11 மாதங்களாக பின்பற்றப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கோவிலுக்குள் அனைத்து தரப்பு மக்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்றும், சாமி தரிசனம் செய்ய செல்பவர்களை தடுத்தால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    அதன்படி, அனைத்து தரப்பு மக்களின் வழிபாட்டுக்காக நேற்று அதிகாலை 5.35 மணியளவில் கோவில் திறக்கப்பட்டது. முன்னதாக கோவிலில் பாதுகாப்புக்காக 800 போலீசார் குவிக்கப்பட்டனர்.

    மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டது. அதன்படி காலை 6.20 மணியளவில் பக்தர்கள், கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் செல்போன்கள், கேமராக்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    இதில் ஒரு தரப்பினரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

    இதற்கிடையே கோவிலில் ஒரு தரப்பினர் தரிசனம் செய்ய மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாங்கள் கட்டிய கோவிலுக்குள் அவர்களை போலீசார் அழைத்துச்சென்று எப்படி சாமி கும்பிட வைக்கலாம், எல்லோரும் சமம் என்கிறார்களே அப்படியானால் அவர்களுக்கு மட்டும் சலுகை வழங்குவது ஏன்? அவர்களுக்கு வழங்குகின்ற கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் எங்களுக்கும் வழங்குங்கள் என்றுகூறி போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரையும் போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இதனை தொடர்ந்து, மற்றொரு தரப்பினர் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்கு வருவதாக கூறி இருந்தனர். ஆனால் பக்தர்கள் யாரும் வராததால் கோவில் நடை மூடப்பட்டது.

    நேற்று பட்டியலின மக்கள் சென்று அம்மனை வழிபட்ட நிலையில், இன்று மற்றொரு சமூகத்தினர் கோவிலுக்கு வரவில்லை. 

    • ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் ஆட்டோ வழங்கப்பட்டது.
    • இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, ஆண்கள் சிலர் மாநகர சாலைகளில் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன.

    சென்னை:

    சென்னை மாநகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக, பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட 'இளஞ்சிவப்பு' ஆட்டோ சேவை நடைமுறைப்படுத்தப்படும் என சமூகநலத்துறை சார்பில் கடந்த ஆண்டு மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்தை, கடந்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி, மகளிர் தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து முதல் கட்டமாக 165 பெண்களுக்கு இளஞ்சிவப்பு ஆட்டோக்களை வழங்கினார். ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் ஆட்டோ வழங்கப்பட்டது. 2-ம் கட்டமாக பயனாளிகளை தேர்வு செய்யும் பணியில் சமூக நலத்துறை ஈடுபட்டு வருகிறது. இளஞ்சிவப்பு ஆட்டோ 2-ம் கட்ட பயனாளிகள் தேர்வுக்காக இதுவரை 141 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த சூழலில், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, ஆண்கள் சிலர் மாநகர சாலைகளில் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, சமூகநலத்துறை கள ஆய்வு குழு கடந்த சில நாட்களாக ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை சில ஆண்கள் வணிக ரீதியிலான போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்தியது கண்டறியப்பட்டு உள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உடல் நல பிரச்சனைகள் காரணமாக பெண் பயனாளிகள் ஆட்டோக்களை ஓட்டாத நாட்களில், கணவர்கள் ஓட்டியது தெரியவந்திருக்கிறது. இருப்பினும், பெண்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆட்டோக்களை பெண்களே ஓட்ட வேண்டும் என்றும், விதிகளை மீறினால் ஆர்.டி.ஓ. மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூக நலத்துறை எச்சரித்துள்ளது.

    • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
    • நாளை கட்டணமின்றி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.

    உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை நாளை கட்டணமின்றி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரிய, கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    அந்த வகையில், நாளை உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    • வக்பு திருத்தச் சட்டத்தின் பிற்போக்கான அம்சங்களை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
    • முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து, இந்த தீங்கிழைக்கும் வக்பு திருத்த சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டது.

    வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிரான வழக்கில், சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வக்பு சொத்துகளை பாதுகாக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி.

    சிறுபான்மை சகோதரர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம்.

    வக்பு திருத்தச் சட்டத்தின் பிற்போக்கான அம்சங்களை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

    முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து, இந்த தீங்கிழைக்கும் வக்பு திருத்த சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டது.

    சட்டத்தில் பல பிற்போக்குத்தனமான விதிகளுக்கு நீதித்துறை இடைக்கால தடை விதித்ததில் மகிழ்ச்சி.

    உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை மூலம் வக்பு உடமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது.
    • கட்சி நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கழகத் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும்.

    அதிமுக கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்கள், எவ்வித கருத்துகளையும் கட்சித் தலைமையின் அனுமதி பெறாமல் ஊடகங்கள், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க கூடாது என்று அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கழக நிர்வாகிகளுக்கும், கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களுக்கும் அன்பு வேண்டுகோள்!

    கழக நிறுவனத் தலைவர் 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் காலந்தொட்டும்; நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு தொடர்ந்தும், 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

    கழகத்தின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கழகத் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும்.

    ஆகவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும்; கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், கழகத்தின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், கழகத் தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்னபிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விண்வெளித் துறையில் தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • இந்தியாவிலேயே முதல் முறையாக விண்வெளிக்கு என்று கொள்கையை தமிழ்நாடு வகுத்துள்ளது.

    தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

    தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    விண்வெளித் துறையில் தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    விண்வெளித் துறையில் அரும்புநிலை நிறுவனங்களை ஊக்குவிக்க புதிய தொழில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

    விண்வெளித்துறையில் நிறுவனங்களையும், புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி துறையில் ரூ.10,000 கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்ப்பது தான் இந்த கொள்கையின் முக்கிய பங்கு.

    இந்தியாவிலேயே முதல் முறையாக விண்வெளிக்கு என்று கொள்கையை தமிழ்நாடு வகுத்துள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தவெக கட்சி கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது.
    • பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் பெரியார் அன்பு வழக்கு தொடர்ந்தார்.

    தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் பெரியார் அன்பு தொடர்ந்த வழக்கில்," தவெக கட்சி கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தவெக கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் இதுதொடர்பாக ஏப்ரல் 29ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ×