என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கட்சி நிலைப்பாடு குறித்து பத்திரிகை, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது- நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. கட்டுப்பாடு
    X

    கட்சி நிலைப்பாடு குறித்து பத்திரிகை, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது- நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. கட்டுப்பாடு

    • 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது.
    • கட்சி நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கழகத் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும்.

    அதிமுக கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்கள், எவ்வித கருத்துகளையும் கட்சித் தலைமையின் அனுமதி பெறாமல் ஊடகங்கள், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க கூடாது என்று அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கழக நிர்வாகிகளுக்கும், கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களுக்கும் அன்பு வேண்டுகோள்!

    கழக நிறுவனத் தலைவர் 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் காலந்தொட்டும்; நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு தொடர்ந்தும், 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

    கழகத்தின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கழகத் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும்.

    ஆகவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும்; கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், கழகத்தின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், கழகத் தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்னபிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×