என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தி.மு.க. நிர்வாகி குணா தனது மோட்டார் சைக்கிளை சாலையில் போட்டு தீ வைத்து எரித்தார்.
    • தீக்குளிக்க முயன்ற பாக்கியராஜை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    தமிழக அமைச்சரவை நேற்று மாற்றம் செய்யப்பட்டது. இதில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது விழுப்புரம் மாவட்ட தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கக்கோரி திருவெண்ணை நல்லூர் கடை வீதியில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் ஜோதி தலைமையில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது தி.மு.க. நிர்வாகி குணா தனது மோட்டார் சைக்கிளை சாலையில் போட்டு தீ வைத்து எரித்தார்.

    அந்த சமயத்தில் திருவெண்ணை நல்லூர் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் பாக்கியராஜ் திடீரென பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அவரை மற்ற நிர்வாகிகள் காப்பாற்றினர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணை நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    மேலும் தீக்குளிக்க முயன்ற பாக்கியராஜை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கவுன்சிலர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பொதுமக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் தி.மு.க. ஆட்சியில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
    • மோசடி நிறுவனங்களிடம் இருந்து அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.103 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

    சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * நிதி நிறுவனங்களில் பணம் செலுத்தி பொதுமக்கள் ஏமாறாமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    * பொதுமக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் தி.மு.க. ஆட்சியில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    * மோசடி நிறுவனங்களிடம் இருந்து அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.103 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

    * தி.மு.க. ஆட்சியில் ரூ.319 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடுரோட்டில் லாரி தீப்பற்றி எரிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    குன்னம்:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து வெள்ளை எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி ஒரு லாரி சென்றது. லாரியை கரூர் கிருஷ்ணராயபுரம் குப்பனம்பட்டியை சேர்ந்த கதிர்வேல் (வயது 23) என்பவர் ஓட்டினார்.

    லாரி பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள அயன் பேரையூர் சமத்துவபுரம் அருகே சென்றபோது எதிர் பாராதவிதமாக லாரியின் டயர் வெடித்து தீப்பற்றியது. உடனே டிரைவர் கதிர்வேல் லாரியில் இருந்து கீழே இறங்கினார்.

    சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது.

    பின்னர் இதுபற்றி பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் லாரி முழுவதுமாக எரிந்து சேதமானது. தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னர் அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. நடுரோட்டில் லாரி தீப்பற்றி எரிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • கொடைக்கானலில் அடுத்த மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
    • பிரையண்ட் பூங்கா முழுவதும் பூக்களின் அணிவகுப்பு போல காட்சியளிக்கும்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து குடை பிடித்தபடியும், நனைந்தபடியும் அனைத்து இடங்களையும் கண்டு ரசித்து வருகின்றனர்.

    தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் கோடை வெயில் சுட்டெரித்து வருவதாலும் கொடைக்கானலை நோக்கி உள்ளூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    கொடைக்கானலில் அடுத்த மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டன.

    அந்த மலர் நாற்றுக்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்டன. மேலும் மலர் செடிகளுக்கு கவாத்து செய்யப்பட்டு பராமரிப்பு பணியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பிரையண்ட் பூங்காவில் உள்ள மலர் செடிகளில் தற்போது பல வண்ணப்பூக்கள் பூத்துக்குலுங்கி வருகின்றன. இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    குறிப்பாக சால்வியா, பேன்சி, கேலண்டுல்லா, பிங்க் ஆஸ்டர், லில்லியம் உள்ளிட்ட பல்வேறு மலர் செடிகள் பல வண்ணங்களில் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    அதன் அருகில் நின்று அவர்கள் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். கோடை விழா தொடங்குவதற்கு முன்பாக மற்ற செடிகளில் உள்ள பூக்களும் பூக்கத் தொடங்கி விடும். அப்போது பிரையண்ட் பூங்கா முழுவதும் பூக்களின் அணிவகுப்பு போல காட்சியளிக்கும். மலர் கண்காட்சி நாட்களில் லட்சக்கணக்கான பூக்கள் இங்கு பூத்துக்குலுங்கும். இதனை ரசிப்பதற்காகவே அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நகராட்சி மற்றும் காவல் துறை, சுற்றுலா அதிகாரிகள் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டாலும் கோடை சீசன் காலங்களில் கூடுதல் வாகனங்கள் வந்து செல்ல கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் வந்து செல்வதற்கும் அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏரிச்சாலை உள்ளிட்ட அ னைத்து சுற்றுலா இடங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

    • இரவு பகலாக மக்களை பாதுகாக்க அயராது பணியாற்றும் காவலர் நலனை தி.மு.க. அரசு பேணி பாதுகாத்து வருகிறது.
    • காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு காவல்துறைக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    * இரவு பகலாக மக்களை பாதுகாக்க அயராது பணியாற்றும் காவலர் நலனை தி.மு.க. அரசு பேணி பாதுகாத்து வருகிறது.

    * காவலர் சேர்மநல நிதி 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

    * காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    * பணியில் இருக்கும்போது காவலர்கள் உயிரிழந்தால் ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிகிச்சை பலனின்றி சந்தனகுமார் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள செட்டிக்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 35). செங்கல் சூளை தொழிலாளி.

    அதே பகுதியை சேர்ந்தவர் ரெஜிமன் (19). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் இரவு நேரங்களில் காற்றாலைகளில் வேலைக்கு சென்று சிறுக சிறுக பணம் சேர்த்து வந்தார்.

    இவ்வாறு அவர் சேமித்து வைத்திருந்த பணத்தின் ரூ.28 ஆயிரத்தை சந்தனகுமாருக்கு கடனாக கொடுத்துள்ளார்.

    குறிப்பிட்ட காலத்தில் அந்த பணத்தை சந்தகுமார் திருப்பி கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ரெஜிமன் தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு சந்தனகுமாரிடம் கேட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை ரெஜிமன், சந்தனகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது கடனை திருப்பி தருமாறு சந்தனகுமாரிடம் கேட்டார். அப்போது சந்தனகுமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ரெஜிமனை வெட்ட முயன்றுள்ளார்.

    இதைப்பார்த்த ரெஜிமன் ஆவேசமடைந்தார். மேலும் சந்தனகுமாரிடம் இருந்து அரிவாளை பறித்த ரெஜிமன் அந்த அரிவாளால் சந்தனகுமாரை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் அலறிதுடித்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சந்தனகுமார் பரிதாபமாக இறந்தார்.

    முன்னதாக பழவூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ரெஜிமனை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு சந்தனகுமார் பலியானதால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பழவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
    • 17 கல்லூரிகள் கலைஞர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்.

    சட்டசபை உறுப்பினர்களின் கோரிக்கையை அடுத்து கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் கலைஞர் பல்கலைக்கழகம் சட்ட முன்வடிவை சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வேந்தராக கொண்டு கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைகிறது. கலைஞர் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சர் இருப்பார். 17 கல்லூரிகள் கலைஞர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் சட்டமுன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குருந்தன்கோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.
    • நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் ஆம்புலன்ஸ் சேவை ஒன்றினை விஜய் வசந்த் எம்.பி. கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நடைக்காவில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் திபாகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


    குருந்தன்கோடு அருள்மிகு காரிபள்ளி ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவிலில் விஜய் வசந்த் எம்.பி. சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் மேற்கூரை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்டார்.


    S. T. மங்காடு, பால்குளம் சி. எஸ். ஐ புதிய ஆலய அர்ப்பணிப்பு விழா மற்றும் சபை நாள் விழாவில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.


    கொடுப்பைக்குழியில் நடைபெற்ற குருந்தன்கோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் உட்பட ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 23-ந்தேதி சவரனுக்கு ரூ.2,200-ம், ஒரு கிராம் ரூ.275-ம் ஏறிய வேகத்திலேயே சரிந்தது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்த வண்ணம் இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த 22-ந்தேதி புதிய உச்சமாக சவரன் ரூ.74,320-க்கு விற்பனையானது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இனி, தங்கம் விலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், மறுநாளே அர்ந்தர் பல்டி அடித்தது. 23-ந்தேதி சவரனுக்கு ரூ.2,200-ம், ஒரு கிராம் ரூ.275-ம் ஏறிய வேகத்திலேயே சரிந்தது. அதனை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் விற்பனையாகி வருகிறது. நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,005-க்கும் சவரன் ரூ.72,040-க்கும் விற்பனையாகிறது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.71 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.8,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    1 கிலோ பார் வெள்ளி ஆயிரம் ரூபாய் குறைந்து ரூ.1 லட்சத்து 11ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    27-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    26-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    25-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    24-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    23-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    27-04-2025- ஒரு கிராம் ரூ.112

    26-04-2025- ஒரு கிராம் ரூ.112

    25-04-2025- ஒரு கிராம் ரூ.111

    24-04-2025- ஒரு கிராம் ரூ.111

    23-04-2025- ஒரு கிராம் ரூ.111

    • அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
    • அரசு பணியாளர்கள், ஆசிரியர்களின் பிள்ளைகளின் கல்விக்காக தரப்படும் கல்வி முன்பணம் உயர்த்தி வழங்கப்படும்.

    தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய நிகழ்வு தொடங்கியது. சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டிருந்த ஈட்டிய 15 நாள் விடுப்புக்கான பணப்பலனை மீண்டும் பெறலாம்.

    * அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும்.

    * அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    * அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

    * ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    * அரசு பணியாளர்கள், ஆசிரியர்களின் பிள்ளைகளின் கல்விக்காக தரப்படும் கல்வி முன்பணம் உயர்த்தி வழங்கப்படும்.

    * தொழில்நுட்ப கல்விக்கான முன்பணம் ரூ.1 லட்சமாகவும் கலை, அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் படிப்பு முன்பணம் ரூ.50,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    * அரசு பணியாளர், ஆசிரியருக்கான மகப்பேறு விடுப்பு காலம் ஓராண்டாக உயர்த்தப்படும்.

    * மகப்பேறு விடுப்பு காலத்தை பதவி உயர்வுக்கு தகுதி காலமாக எடுத்துக்கொள்ளப்படும்.

    * பழைய பென்சன் திட்டம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு செப்டம்பர் 30-க்குள் அறிக்கை அளிக்க அறிவுறுத்தி உள்ளார்.

    • இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் உக்கிரம் எப்படி இருக்குமோ? என்பது பலருடைய ஆவலாக இருந்து வருகிறது.
    • கடந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானதுதான் அந்த ஆண்டின் உச்சபட்சமாக பார்க்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலான 25 நாட்களுக்கு 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் கணக்கிடப்பட்டு வருகிறது.

    கோடை காலத்தையொட்டி வரும் கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவம் ஆடும். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பல இடங்களில் உச்சபட்ச வெயில் பதிவாகும்.

    அந்தவகையில் நடப்பாண்டில் கோடைகாலம் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்தே வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. அதிலும் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உணரமுடிகிறது.

    இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ஆங்காங்கே வெப்ப சலனத்தால் கோடை மழை ஓரளவுக்கு வெப்பத்தில் இருந்து தப்பிக்க வழி செய்கிறது. அதுவும் வருகிற 30-ந்தேதிக்கு பிறகு ''குட்-பை'' சொல்ல இருக்கிறது.

    இப்படி இருக்கும் சூழலில் வெயிலின் உக்கிரத்தை கக்கும் அக்னி நட்சத்திரம் அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக அடுத்த மாதம் 1-ந்தேதியில் இருந்தே பல இடங்களில் வெயிலின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

    வீடுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சில நிமிடங்கள் மின் விசிறி நிறுத்தப்பட்டாலே வியர்த்து கொட்டும் அளவுக்கு அசவுகரியத்தை உணருகிறோம். அப்படி பார்க்கையில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் உக்கிரம் எப்படி இருக்குமோ? என்பது பலருடைய ஆவலாக இருந்து வருகிறது.

    இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர்களிடம் கேட்டபோது அவர்கள், 'லா-நினோ மற்றும் ஐ.ஓ.டி. என்று கூறப்படும் கடல் அமைப்புகள் சமநிலையில் இருப்பதால், கடல் சார்ந்த அலைவுகள் முற்றிலுமாக வலுவிழந்து, மழைக்கான சாதகமான சூழல் எதுவும் ஏற்படாத நிலை இருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் வெப்பம் சற்று உயர்ந்தே காணப்படும். இருப்பினும் வெப்ப அலை வீசும் அளவுக்கு இருக்காது என்பது ஆறுதல் வார்த்தையாக இருந்தாலும், வறண்ட காற்று மற்றும் அதிக ஈரப்பதத்தால் உணரும் வெப்பநிலையின் தாக்கம் இருக்கும். இதனால் அசவுகரியத்தை நாம் உணருவோம்' என்றனர்.

    கடந்த ஆண்டு (2024) அக்னி நட்சத்திர காலத்தில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானதுதான் அந்த ஆண்டின் உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு வெயில் பதிவாகாது என்ற வானிலை ஆய்வாளர்களின் பதில் ஆறுதலை கொடுக்கிறது. ஆனாலும் கடல் சார்ந்த அலைவுகள் தொடர்ந்து அதே நிலை நீடித்தால், நிலைமை எப்படி இருக்கும்? என்பது அப்போதுதான் தெரியும்.

    • நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ளது.
    • இதில் 2 வெற்றி, 7 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 7 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.

    இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் கூறியதாவது:

    ஐ.பி.எல். ஏலத்திலேயே சி.எஸ்.கே. அணி தோற்றுவிட்டது. நல்ல பிளேயர்களை வாங்குவதற்கு போதுமான பணம் இருந்தும் அந்த பிளேயர்களை வாங்க சிஎஸ்கே ஏன் ஆர்வம் காட்டவில்லை? கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர்களை ஏன் சிஎஸ்கே வாங்கவில்லை?

    இந்த ஐபிஎல் ஏலத்தைப் பொறுத்தவரை தோனியின் தலையீடு ஏதும் இல்லை. முழுக்க முழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுத்த முடிவு.

    தோனியைப் பொறுத்தவரை 43 வயதிலும் அணிக்கு தேவையானதை களத்தில் இருந்து செய்கிறார். சி.எஸ்.கே. அணிக்காக கேப்டன்சி, விக்கெட் கீப்பிங், பேட்டிங் என தன்னால் முடிந்த அத்தனை உழைப்பையும் கொடுக்கிறார். ஆனால் அணியில் இருக்கும் மற்ற பிளேயர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு மோசமாக விளையாடி நான் பார்த்தது இல்லை. இளம் பிளேயர்கள் மற்றும் வாய்ப்பு கிடைத்தவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும்.

    என்னைப் பொறுத்தவரை தோனி அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளிலும் விளையாடுவார். சி.எஸ்.கே. நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.

    ×