என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
- 1,330 திருக்குறள்களும் பளிங்கு கற்களில் செதுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன.
சென்னை நுங்கம்பாக்கத்தில் திருவள்ளுவரின் நினைவாக 1974-1976 ஆம் ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது.
இது திராவிட மற்றும் பல்லவர் கட்டிடக்கலை பாணியில், 5 ஏக்கர் பரப்பளவில் ஒரு முக்கிய நினைவுச்சின்னமாக அமைந்துள்ளது.
10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழடைந்திருந்த வள்ளுவர் கோட்டம், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
பணிகள் நிறைடைந்த நிலையில், வள்ளுவர் கோட்டம் புதிய பொலிவுடன் நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
வள்ளுவர் கோட்டத்தில், அய்யன் வள்ளுவர் கலையரங்கம்: 1,548 இருக்கைகளுடன் அதிநவீன ஏர் கண்டிஷனர் வசதி, குறள் மணிமாடம்: 1,330 திருக்குறள்களும் பளிங்கு கற்களில் செதுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் நூலகம்: 100 பேர் அமரக்கூடிய ஆராய்ச்சி மையம், மல்டி-லெவல் பார்க்கிங்: 164 வாகனங்கள் நிறுத்த வசதி, உணவகம் (கஃபெடேரியா) மற்றும் ஒலி-ஒளி காட்சிக்கூடம் உள்ளிட்ட புதிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
- திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூா்:
தமிழ்நாடு மின் பகிர்மான கழக தஞ்சை உதவி செயற் பொறியாளர் பாலகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர் அழுத்த மின்பாதைகளில் நாளை (சனிக்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டாம்பட்டி, ராராம்பட்டி, சானூரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, அள்ளூர், அல்சகுடி, அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சக்கரைசாமந்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேப்போல் தஞ்சை மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேறி, திட்டை, பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், தஞ்சை அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஜனாதிபதி இன்று அவரது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
நமது நாட்டில் பெண்கள் அதிகாரமளிப்பின் ஒளிரும் சின்னமாக நீங்கள் திகழ்கிறீர்கள்.
நீங்கள் நாட்டை கருணை, கண்ணியம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் வழிநடத்திச் செல்லும்நிலையில், உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் வலிமையும் தொடர்ந்து கிடைக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்ற எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
- வாகனங்களை முறைப்படுத்தும் நோக்கில் தான் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை முருக பக்தர் மாநாடு நாளை மறுநாள் (22-ந்தேதி, ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வரக்கூடிய பக்தர்கள் அந்தந்த மாவட்டங்களில் இருந்து வாகனத்திற்கான அனுமதி பாஸ் வாங்கி வர வேண்டுமென தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த உத்தரவினை எதிர்த்து இந்து முன்னணி சார்பாக மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் நீதிபதி ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்து முன்னணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனந்தபத்மநாபன், வாகனத்தில் வரக்கூடியவர்கள் முறையான வாகன அனுமதி பாஸ் இருந்தால் மட்டுமே மதுரை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மதுரை அண்ணா நகர் காவல் துறை இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு பிறப்பிப்பதற்கு இவருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்ற எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, "இதுபோன்று அதிக அளவில் பொது மக்கள் கூட கூடிய மாநாடுகளுக்கு வரக்கூடிய வாகனங்களை முறைப்படுத்து வதற்காக அனுமதி பாஸ் வழங்குவது வழக்கமான நடைமுறை இந்த உத்தரவுகளை தலைமை காவலருக்கு மேல் உள்ள அதிகாரிகள் வழங்கலாம் என சட்டம் உள்ளது" என தெரிவித்தார்.
மேலும், "இந்த உத்தரவு என்பது மாநாடுக்கு வரக்கூடிய வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கு இல்லை, வாகனங்களை முறைப்படுத்தும் நோக்கில் தான் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மாநாடுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் காவல்துறை போலீஸ் சோதனை மையம் அமைக்க வேண்டும். மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் வாகன காப்பீடு, ஓட்டுனர் உரிமம், ஓட்டுனரின் ஆதார் அட்டை, வாகன பதிவுச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை காவல்துறையிடம் வழங்க வேண்டும்.
இதனை பதிவு செய்த பின்னர்தான் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்கள் பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- அரசாணை பெறப்பட்டவை எத்தனை? செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் எவ்வளவு? என்பது போன்ற விவரங்களை ஆய்வு செய்தார்.
- பரந்தூர் விமான நிலையத்தின் வருங்கால செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்தும் விரிவாக ஆய்வுகள் நடத்தினார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக துறை வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை வாரியான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்று வருகின்றனர்.
அந்த வகையில் இன்று வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தொழில் முதலீடுக்கு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை ஆகிய 4 துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது? முடிவுற்ற பணிகள் எத்தனை? அரசாணை பெறப்பட்டவை எத்தனை? செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் எவ்வளவு? என்பது போன்ற விவரங்களை ஆய்வு செய்தார்.
இத்துடன் பரந்தூர் விமான நிலையத்தின் வருங்கால செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்தும் விரிவாக ஆய்வுகள் நடத்தினார்.
இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்தி ரன், அனிதா ராதாகிருஷ் ணன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் துறை வாரியான அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
- ஜி.கே.மணி திடீர் உடல் நலக்குறைவால் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- ஜி.கே.மணியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த செல்வப்பெருந்தகை அவருக்கு ஆறுதல் கூறினார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்த சூழலில், அன்புமணி ராமதாஸ் மாவட்டந்தோறும் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கட்சி பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.
பா.ம.க. கவுரவ தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே.மணி திடீர் உடல் நலக்குறைவால் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவருக்கு ஆறுதல் கூறினார்.
- 9 மணிநிலவரப்படி நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
- கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பால் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 6,500 கனஅடியாக வந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது. 9 மணிநிலவரப்படி நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து விநாடிக்கு 17,000 கனஅடியாக அதிகரித்ததால் ஆற்றில், நீர் வீழ்ச்சியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பால் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.
- மொத்தம் 36 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவிலான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை:
ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியரின் உயர்கல்வித் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு, 2025-26-ம் ஆண்டிற்கான உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, 2025-26-ம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 26.5.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையிலும், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், இக்கல்வியாண்டில் (2025-2026), உயர் கல்வித் துறையின் சார்பில் வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய நான்கு இடங்களில் கூடுதலாக 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 30.5.2025 அன்று அறி க்கப்பட்டது.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்றைய தினம் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த 4 கல்லூரிகளும், தலா 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்படும். மேலும், ஒவ்வொரு கல்லூரிக்கும் 12 ஆசிரியர்கள் (உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் முதலாமாண்டிற்கு மட்டும்) மற்றும் 14 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் வீதம் 4 கல்லூரிகளுக்கு மொத்தம் 48 ஆசிரியர்கள் மற்றும் 56 ஆசிரியரல்லாப் பணியிடங்களைத் தோற்றுவிக்கப்பட்டு, 4 கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கான தொடர் மற்றும் தொடராச் செலவினத்திற்காக மொத்தம் 8 கோடியே 67 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம், இப்பகுதிகளிலுள்ள சுமார் 1,120 மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறுவார்கள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்ட இப்புதிய 4 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்த்து தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 18 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் ஐந்து தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம், 2 கோடியே 38 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணைவேந்தர் குடியிருப்பு, 8 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் உதவி பேராசிரியர்கள் குடியிருப்புகள் மற்றும் 6 கோடியே 56 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான குடியிருப்புகள், என மொத்தம் 36 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவிலான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ. வேலு, கோவி. செழியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், உயர் கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சென்னையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- 120 தண்ணீர் லாரிகள் மற்றும் 87 கனரக வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் லாரி ஏறி 10 வயது பள்ளி சிறுமி சௌமியா உயிரிழந்ததையடுத்து, பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டு இருந்தார்.
சென்னையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் விதிகளை மீறியதாக 207 கனரக வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 120 தண்ணீர் லாரிகள் மற்றும் 87 கனரக வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கக்கூடாது என்ற உத்தரவை மீறி கனரக வாகனங்கள் இயக்கப்பட்டதால் அபராதம் விதித்தும், வழக்கு பதிந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள் 12 மணிக்கு மேல் மாநகரத்திற்குள் அனுமதிக்கப்பட்டது.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்சின் பின் பக்கத்தில் உள்ள 2 சக்கரங்களும் தனியாக கழன்று சாலையில் ஓடியது.
- இந்த சம்பவத்தின்போது பின்னால் வேறு பஸ்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கடையநல்லூர்:
மதுரையில் இருந்து குற்றாலம் நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த சங்கரன் (வயது 55) என்பவர் ஓட்டி சென்றார்.
பஸ் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் உள்ள மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலை சென்றபோது திடீரென பஸ் சக்கரத்தின் அச்சு முறிந்தது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்சின் பின் பக்கத்தில் உள்ள 2 சக்கரங்களும் தனியாக கழன்று சாலையில் ஓடியது. எனவே பஸ்சின் பின்பக்கம் அமர்ந்திருந்த 3 மாணவர்கள் உள்பட பஸ்சில் இருந்த 40 பயணிகளும் பஸ்சின் உள்ளே தூக்கி வீசப்பட்டனர். இதில் பின்பகுதியில் இருந்த 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்ற பயணிகள் பாதுகாப்பாக மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தின்போது பின்னால் வேறு பஸ்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்க்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ்சின் சக்கரம் கழன்று சாலையில் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 811 கோடி ரூபாய்க்கு நெல்லை கொள்முதல் செய்துவிட்டு, பணத்தை பெற்றுத் தராமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளைத் தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.
- ஒன்றிய பா.ஜ.க. அரசை வெளியில் எதிர்ப்பது போல் கபட நாடகம் நடத்தும் தி.மு.க அரசு.
த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நலத் திட்டங்களை அள்ளித் தரும் விடியல் அரசு எனத் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழாக்களில் இருண்ட தி.மு.க அரசுக்கு வெற்று விளம்பரம் செய்யப்படுகிறது!
ஆனால் உண்மையில் நடப்பது என்ன?
'கருவறை முதல் கல்லறை வரை...' அலட்சியமும் ஊழலும் மலிந்து போன, நிர்வாகத் திறனற்ற 'விளம்பர மாடல்' ஆட்சியாகத்தான் தி.மு.க. அரசு திகழ்கிறது. அதன் காரணமாகவே ஆண்டு முழுதும், 'நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த... அரும்பாடுபட்டு உழைக்கும் விவசாயிகள், ஒவ்வொரு வட்டத்திலும் மாவட்டத்திலும் தொடங்கி, தலைநகர் சென்னை வரையிலும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தித் தமிழக அரசை எதிர்த்துத் தினமும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
அதன் ஒரு பகுதிதான், நெல் விவசாயிகள் வயிற்றில் நேரடியாக அடித்து, அவர்களின் வாழ்வைப் பறித்த நெல் கொள்முதல் ஊழலை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை ஏற்ற - இறக்க, எடைபோட்டுக் கட்ட, மூட்டைகளாகப் பிரிக்க என அனைத்து வேலைகளுக்கும் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு கட்டமாக விவசாயிகள் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதையும் கடந்து, வேறு வழியில்லாமல் லஞ்சமும் கொடுத்து, தாங்கள் விற்பனை செய்த நெல்லுக்கு உரிய பணத்தையும் கேட்டு மூன்று மாதங்களாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
811 கோடி ரூபாய்க்கு நெல்லைக் கொள்முதல் செய்துவிட்டு, அந்தப் பணத்தைப் பெற்றுத் தராமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளைத் தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.
ஒன்றிய பா.ஜ.க. அரசை வெளியில் எதிர்ப்பது போல் கபட நாடகம் நடத்தும் தி.மு.க அரசு, அவர்கள் உருவாக்கிய தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் (National Co-Operative Consumer's Federation of India Private Limited) என்ற நிறுவனத்திற்கு நெல்லைக் கொள்முதல் செய்யும் அனுமதியை வழங்கியதே இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதும் தற்போது அம்பலமாகி உள்ளது.
இந்தத் தகவல் வெளியான போதே டெல்டா மாவட்ட விவசாயிகள், 'தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்ற அமைப்பு, அரசின் பொதுத்துறை நிறுவனமோ... கூட்டுறவு அமைப்போ அல்ல! அது தனியார் வியாபாரிகள், இடைத்தரகர்கள், லாரி ஒப்பந்தக்காரர்கள் அடங்கிய தனியார் கூட்டமைப்பு. அவர்களிடம் லட்சக்கணக்கான மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்வதற்கான எந்த உள்கட்டமைப்புகளும் இல்லை; அப்படிப்பட்ட அமைப்புக்குத் தமிழக அரசு அனுமதி அளிப்பதால், நெல் கொள்முதல் என்பது நாளடைவில் முழுக்க முழுக்கத் தனியார்மயமாகிவிடும்; நெல்லுக்கு உரிய ஆதார விலை கிடைக்காது; விற்பனை செய்த நெல்லுக்குரிய பணமும் கிடைக்காது என எச்சரித்துப் போராட்டங்களில் இறங்கினர்.
அதோடு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைத் தமிழக அரசு நாளடைவில் இழந்துவிடும் என்றும் எச்சரித்தனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைச் சமாதானப்படுத்திய தி.மு.க. அரசு, டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு நெல்லைக் கொள்முதல் செய்யும் அனுமதியை வழங்கியது.
விவசாயிகள், விவசாய சங்கத்தினர் எச்சரித்ததைப் போலவே, எந்த உள்கட்டமைப்பு வசதியும் இல்லாத தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், தமிழ்நாட்டில் தனியார் ஏஜென்டுகளை நியமித்து, விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்முதல் செய்தது. ஆனால், மூன்று மாதங்களுக்கு மேலாகியும், கொள்முதல் செய்த நெல்லுக்கான விலையை விவசாயிகளுக்குக் கொடுக்கவில்லை.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்த ஏஜென்டுகளிடம் கேட்டால், 'எங்களுக்குப் பணம் வந்தால் உங்களுக்குத் தருகிறோம்' என அலட்சியமாகச் சொல்கிறார்கள். இது தொடர்பாக எத்தனை விவசாயிகளிடம், எவ்வளவு நெல்லைத் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் கொள்முதல் செய்தது என்பதற்கான விபரங்களே தங்களிடம் இல்லை என்று துறை அதிகாரிகள் கூறியதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
மோசடி தி.மு.க அரசு 'திருடனுக்குத் தேள் கொட்டியது போல்' திகைத்துப் போய் இருக்கிறது. இது ஒருபக்கம் என்றால், "ம் என்றால் சிறைவாசம்..." ஏன் என்றால் வனவாசம்...' என்ற அதிகார மமதையில், அடக்குமுறைகளை ஏவி, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் துயர் துடைப்போம்" என்று உறுதி கொடுத்துவிட்டு, இன்று அந்த விவசாயிகளையே கண்ணீர் விட வைத்திருக்கும் கபட நாடக ஆட்சியாகத் தி.மு.க ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சியாக இருந்த நேரத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக உள்ள பி.ஆர்.பாண்டியன் அவர்கள் நடத்திய போராட்டங்களுக்கு எல்லாம் ஓடிவந்து குரல் கொடுத்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர், இன்றைய முதலமைச்சர், இன்று அதே பி.ஆர். பாண்டியன் அவர்கள் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பதைத் தடுப்பதோடு, அவர்களின் குரல்வளையை நெரிக்கும் பாதகச் செயலையும் செய்கிறார். ஆனால், 811 கோடி ரூபாய் வரை நெல் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது என்றும் அதில் முதலமைச்சருக்குப் பங்கிருக்கிறதா? எனவும் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையிலான விவசாயிகள் எழுப்பும் கேள்விக்கு, முதலமைச்சரின் பதில் என்ன?
நெல் கொள்முதல் ஊழல் விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஆ.சண்முகசுந்தரம் அவர்களை அந்தப் பொறுப்பில் இருந்து திடீரெனப் பணியிட மாற்றம் செய்தது ஏன்? எட்டுவழிச் சாலைக்காகப் போராடிய அருளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்தது முதல், விவசாயிகள் தங்கள் தாய் மடியாகக் கருதும் விவசாய நிலங்களைப் பரந்தூர் விமான நிலையத்திற்காகப் பறித்துக் கொண்டு, அந்த விவசாயிகளை ஓலமிடச் செய்தது வரை, ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விரோத ஆட்சியாகத்தான் தி.மு.க. ஆட்சி நடக்கிறது.
தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் நியாயமான கோரிக்கைகளுக்காகவும் போராடும் விவசாயிகளைக் குற்றவாளிகளைப் போல் கைது செய்வது எந்த வகையில் நியாயம்?
வெற்று விளம்பர ஆட்சியைப் போலவே விவசாயிகளுக்கான தனி நிதிநிலை அறிக்கையும் வெற்றுக் காகித அறிக்கையே தவிர வேறு என்ன?
அடக்குமுறையைக் காட்டி விவசாயிகளை ஒடுக்க நினைத்தால். டெல்லியில் ஒன்றிய அரசுக்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் எப்படி வீரம் செறிந்த போராட்டத்தை முன்னெடுத்து ஸ்தம்பிக்க வைத்தார்களோ... அதே நிலை தமிழகத்திலும் நடைபெறும்.
அதற்கான முன்னோட்டம்தான். நெல் கொள்முதல் ஊழலை எதிர்த்து இன்றைக்கு நடைபெறும் போராட்டங்கள்.
உடனடியாகத் தமிழ்நாடு அரசு விவசாய விரோத நடவடிக்கைகளைக் கைவிட்டு நெல் விவசாயிகளுக்கு உரிய தொகையைப் பெற்றுத் தர வேண்டும்: இனி வரும் காலங்களில் முன்பிருந்ததைப் போல், தமிழக அரசே நேரடியாக நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும். அதில் லஞ்சம் ஊழல் உள்ளிட்ட நிர்வாகச் சீர்கேடுகள் நடைபெறாமல் உடனடியாகத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக விவசாயப் பெருங்குடி மக்கள் இந்த வெற்று விளம்பர மாடல் அரசுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.
- கைப்பற்றிய ஆவணங்கள், லேப்டாப், செல்போன்களை திரும்ப ஒப்படைக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.
திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். டாஸ்மாக்கில் நடந்ததாக கூறப்படும் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். சோதனையின்போது தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகத்துக்கு 'சீல்' வைத்தனர். இதை எதிர்த்து இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
டாஸ்மாக் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.
சோதனை தொடர்பாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரமும் இல்லை. எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் சோதனை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர். மேலும், கைப்பற்றிய ஆவணங்கள், லேப்டாப், செல்போன்களை திரும்ப ஒப்படைக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.






